Last Updated : 04 Sep, 2020 08:19 PM

 

Published : 04 Sep 2020 08:19 PM
Last Updated : 04 Sep 2020 08:19 PM

ஆவணி ஞாயிறு எப்போதுமே விசேஷம்!  சூரிய நமஸ்காரம், சிவா, விஷ்ணு, பிரம்மா வழிபாடு! 


ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையில் சூரிய பகவானையும் மும்மூர்த்திகளையும் மனதார வழிபடுங்கள். மங்காத செல்வ கடாக்ஷம் கிடைக்கப் பெறுவீர்கள்.
ஆவணி மாதம் மகத்தான மாதம். ஆவணி மாதத்துக்கு முந்தைய மாதம் ஆடி. பிந்தைய மாதம் புரட்டாசி. முந்தைய ஆடி மாதத்திலும் ஆவணிக்கு அடுத்த மாதமான புரட்டாசி மாதத்திலும் சுபகாரியங்கள் நடத்தமாட்டார்கள். மாறாக, இந்த இரண்டு மாதங்களிலும் வழிபாடுகள் வெகுவாக நடத்தப்படும்.

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்று போற்றுகிறோம். இந்த மாதத்தில், அம்மனுக்கு விழாக்கள், விசேஷங்கள் என அமர்க்களப்படும். அம்மனுக்கு திருவிழாக்கள் நடக்கும். கிராமத்தில் உள்ள பெண் தெய்வங்களுக்கு, குடும்ப சகிதமாகச் சென்று படையலிடுவார்கள். படையலிட்டு வேண்டிக்கொள்வார்கள்.
இதேபோல், புரட்டாசி மாதம் என்பது மகாவிஷ்ணுவுக்கு உரிய மாதம். பெருமாளுக்கு உரிய மாதம்.

‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னாலும் புரட்டாசி மாதம் முழுவதுமே கோவிந்தராஜனை துதித்துப் போற்றி, வணங்கி வழிபடுவதற்கான மாதமாகவே சொல்கிறார்கள்.

புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளிலும் புதன் கிழமைகளிலும் பெருமாள் கோயில்களில், பக்தர்கள் தரிசனம் மும்மடங்கு இருக்கும். அசைவப் பிரியர்கள் பலரும் கூட, புரட்டாசி மாதத்தில் சைவம் மட்டுமே உண்பார்கள். சனிக்கிழமைகளில், ‘வெங்கட்ரமணா கோவிந்தா’ எனும் கோஷத்துடன், வீட்டுக்கு வீடு வந்து அரிசியைப் பெற்றுச் சென்று தங்கள் நேர்த்திகடனைச் செலுத்துவார்கள். கர்வத்தையும் ஆணவத்தையும் ஒழிக்கும் இந்த வழிபாடு, சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் தான தருமங்களையும் வலியுறுத்துவதற்காகவே அமைக்கப்பட்டன என்று சொல்பவர்களும் உண்டு.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். நடுவேயுள்ள ஆவணி மாதம், எல்லா தெய்வங்களுக்குமான மாதம். விநாயகர், கிருஷ்ணர் என்று சைவ - வைணவ பாகுபாடுகள் இல்லாமல், சகல தெய்வங்களையும் வழிபடுகிற அற்புதமான மாதம்.

ஆவணி மாதத்தின் ஞாயிற்றுக் கிழமை ரொம்பவே மகத்துவமானது. ஞாயிற்றுக்கிழமையன்று, அதிகாலையில் எழுந்து, சூரிய நமஸ்காரம் செய்து சூரிய பகவானை நமஸ்கரித்து வேண்டிக்கொள்வது, அறிவையும் ஞானத்தையும் வளர்க்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு, ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்து வழிபட வேண்டும்.

இதேபோல், மூன்று தெய்வங்களான சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரையும் வணங்கித் தொழுது பிரார்த்தனை செய்வது மிகுந்த பலன்களை வழங்கக் கூடியது. சிவனாரை வணங்கி வேண்டிக்கொண்டால், இல்லத்தில் தம்பதி இடையே ஒற்றுமை உண்டாகும். பெருமாளை வணங்கி வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம்.

படைப்புக் கடவுளான பிரம்மாவை வணங்கி வேண்டிக்கொண்டால், இந்த இப்பிறவியில் சகல சம்பத்துகளையும் வழங்கி அருளுவார் பிரம்மா. முதல் குரு பிரம்மாதானே. அதனால்தான் ‘குரு பிரம்மா குரு விஷ்ணு..’ என்று சொல்லி வணங்கச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இந்த இப்பிறவியில் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்கிற தீமைகளையும் பாவங்களையும் மன்னித்து அருளுகிறார் பிரம்மா.

எனவே, ஆவணி ஞாயிற்றுக்கிழமையில் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு, சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரையும் முறையே பிரார்த்தனை செய்யுங்கள். வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்களெல்லாம் அரங்கேறித் தருவார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x