Published : 04 Sep 2020 07:20 PM
Last Updated : 04 Sep 2020 07:20 PM
காளிகாம்பாள் பேசும் தெய்வம். அதுமட்டுமா? நாம் அவளிடம் முறையிடாவிட்டாலும் கூட, நாம் நமக்கு என்ன வேண்டும் என்பதைச் சொல்லி கேட்காவிட்டாலும் கூட நமக்கு என்ன தேவை என்பதைப் பார்த்துப் பார்த்து அருள்வழங்கும் அன்னை இவள் என்று சொல்லிப் பூரிக்கின்றனர் பக்தர்கள்.
சக்திபீடங்களுக்கெல்லாம் தலைமை பீடம் என்று போற்றப்படுவது காஞ்சி மாநகரம். இங்கே உள்ள காமாட்சி அம்பாள்தான், சக்தீபீடங்களின் தலைவி என்றெல்லாம் புகழப்படுகிறாள். சக்திபீடங்களின் தலைமைபீடத்தின் தலைவி.
காமாட்சி அம்பாள் சந்நிதியில், ஸ்ரீசக்ரத்தைப் பிரதிஷ்டை செய்தார் ஆதிசங்கரர். இந்த ஸ்ரீசக்ரத்தில், லலிதா சகஸ்ரநாமத்தை இயற்றிய வாக்தேவதைகள் எண்மர், எழுந்தருளி வியாபித்திருக்கின்றனர் என்று சொல்லி சிலாகிக்கிறார் காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் நடராஜ சாஸ்திரிகள்.
அதேபோல், மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலிலும் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் அருகில் உள்ள பாஸ்கரராஜபுரம் தலத்திலும் அம்பாள் சந்நிதியில் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்யப்பட்டு அங்கே அதன் சக்தி, அருள் மழை பொழிந்து கொண்டிருக்கிறது.
மேலும், ஆந்திராவின் ஸ்ரீசைலம் பிரம்மராம்பிகா சந்நிதியிலும் புதுக்கோட்டை ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன் கோயிலிலும் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.
திருச்சி திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி அம்பாள் சந்நிதியில் இன்னொரு சிறப்பாக, அம்பாளின் ஒரு காதில், ஸ்ரீசக்ர தாடங்கமும் இன்னொரு காதில் சிவசக்ர தாடங்கமும் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது என்று கோயிலின் ஸ்தல புராணம் விவரிக்கிறது.
இத்தனை பெருமைகளும் சக்தியும் கொண்ட ஸ்ரீசக்ரம், சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோயிலிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆதிசங்கரர் இங்கே வந்து, இந்த ஸ்ரீசக்ரத்தைப் பிரதிஷ்டை செய்து அருளியுள்ளார். காளிகாம்பாளின் அருள்ராஜ்ஜியம், இன்றளவும் தொன்றுதொட்டு, எங்கெல்லாமோ பரவியிருக்கிறது என்கிறார்கள் காளிகாம்பாள் பக்தர்கள்.
இன்னொரு விஷயம்... காளி அன்னை எப்போதுமே எல்லா இடங்களிலும் உக்கிரத்துடன் இருப்பாள். ஆனால் இங்கே உள்ள காளிகாம்பாள், சாந்தமே உருவெனக் கொண்டு திகழ்கிறாள். கனிவே அருளென வழங்குகிறாள்.
ஸ்ரீசக்ரநாயகியாய் கொலுவிருந்து, பக்தர்களின் துக்கங்களையும் வாட்டங்களையும் போக்கி, அவர்களின் வாழ்க்கைச் சக்கரத்துக்கு அச்சாணியாக இருந்து அருள்பாலித்து வருகிறாள் காளிகாம்பாள்.
அதுமட்டுமா? ஸ்ரீசக்ர காளிகாம்பாளுக்கு, காளிகாம்பாள் கோயிலுக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அதாவது, சந்நிதியில் ஸ்ரீசக்ரம் கொண்ட காளிகாம்பாளின் தேரும் ஸ்ரீசக்ரத் தேராகவே அமைக்கப்பட்டிருப்பது, இந்தக் கோயிலின் தனிச்சிறப்புகளில் ஒன்று. அதாவது ஸ்ரீசக்ரமே இங்கு தேராக அமைந்துள்ளது. சக்ரராஜ விமானம் என்று சொல்லப்படும் இந்தத் தேர், கிண்ணித் தேர் என்றும் அழைக்கப்படுகிறது.
ஆகவே மற்ற தலங்களை விட, காளிகாம்பாள் எல்லோருக்கும் இஷ்ட தெய்வமாகவும் காரியங்கள் யாவற்றையும் ஈடேற்றித் தரும் அன்னையாகவும் போற்றிக் கொண்டாடப்படுவதற்கு இதுபோன்ற பல அரிதினும் அரிதான தகவல்கள் சிலிர்க்க வைக்கின்றன.
காளிகாம்பாள் பேசும் தெய்வம். அதுமட்டுமா? நாம் அவளிடம் முறையிடாவிட்டாலும் கூட, நாம் நமக்கு என்ன வேண்டும் என்பதைச் சொல்லி கேட்காவிட்டாலும் கூட நமக்கு என்ன தேவை என்பதைப் பார்த்துப் பார்த்து அருள்வழங்கும் அன்னை இவள் என்று சொல்லிப் பூரிக்கின்றனர். ஒருமுறை... ஒரேயொரு முறை... சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாளை தரிசனம் செய்யுங்கள். சிலிர்த்துப்போவீர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT