Published : 04 Sep 2020 10:15 AM
Last Updated : 04 Sep 2020 10:15 AM
ஆவணி வெள்ளிக்கிழமையில் அம்பாளை தரிசித்து வணங்குவோம். அருளும் பொருளும் தந்து காத்தருள்வாள் தேவி.
அம்பாள் வழிபாடு என்பது எப்போதுமே மகத்துவம் வாய்ந்தது. நம் அம்மாவைப் போல் கருணையும் அன்பும் கொண்டு நம்மை அரவணைத்துக் காப்பவள். உலகின் சக்தியாகத் திகழ்பவள் தேவியே என்கின்றன புராணங்கள்.
வெள்ளிக்கிழமை என்பது சுக்கிரவாரம் என்று சொல்லப்படும். சுக்கிர வாரம் என்பது மிகவும் வலிமை மிக்க நாள். நம் வீட்டில் மங்கல வார்த்தைகளைப் பேசினாலே அதன் அதிர்வுகள் நல்லவிதமாக நம்மைச் சூழ்ந்து, நம்மையும் நம் குடும்பத்தையும் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் என்கிறார்கள் ஆன்றோர்கள்.
நல்ல வார்த்தைகளே நம்மை வழிநடத்தும் எனும் போது, அம்பாள் குறித்த ஸ்லோகங்களும் அம்பாள் பற்றிய துதிகளும் சொல்லச் சொல்ல, கேட்கக் கேட்க, இன்னும் இன்னுமாக நல்ல நல்ல அதிர்வுகள் நம்மையும் நம் வீட்டையும் சூழ்ந்து, அரணெனக் காக்கும். சக்தியே உருவான தேவி, துஷ்ட சக்திகள் நம்மை அண்டாமல் எப்போதும் காத்தருள்வாள்.
சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமையில், வீட்டில் விளக்கேற்றி அம்பாளை வழிபடுவோம். ராகுகால வேளையில் வீட்டில் விளக்கேற்றி தேவியை ஆராதனை செய்வோம். கனகதாரா ஸ்தோத்திரம், அபிராமி அந்தாதி பாராயணம் செய்வதும் ஒலிக்க விட்டுக் கேட்பதும் நல்ல பலன்களையெல்லாம் வாரி வழங்கும் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
கருணையுள்ளம் கொண்ட அம்பிகையை ஆராதித்து வந்தால், வீட்டில் குடும்ப ஒற்றுமை மேலோங்கும். தரித்திர நிலை மாறும்.
மேலும், வெள்ளிக்கிழமையில், புற்று வடிவத்தில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது மிகவும் உன்னதமானது. நம் மனதை அரித்துக்கொண்டிருக்கும் துக்கங்களையெல்லாம், கஷ்டங்களையெல்லாம், வேதனைகளையெல்லாம், அவமானங்களையெல்லாம் அம்பிகை, துடைத்தெறிந்து அருளுவாள். துயரின்றி நம்மைக் காத்தருள்வாள்.
தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில், ராகுகாலத்தில், அம்பாளை நினைத்து விளக்கேற்றி பூஜைகளைச் செய்யுங்கள். மங்கல காரியங்களை துணைநின்று நடத்தித் தருவாள் தேவி. மங்காத புகழையும் செல்வத்தையும் தந்து மகிழ்விப்பாள் மகமாயி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT