Published : 02 Sep 2020 09:21 AM
Last Updated : 02 Sep 2020 09:21 AM
சென்னை வடபழநி முருகன் கோயிலில், இன்று முதல் (2.9.2020) பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். நேரில் டோக்கன் பெற்று வந்து பொது தரிசனம் செய்யலாம். மேலும் ஆன்லைன் மூலம் அனுமதிச்சீட்டு பெற்றும் தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையின் மையப்பகுதியான வடபழநியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற முருகன் கோயில். சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட இந்த ஆலயத்துக்கு, சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்துத் தரிசித்துச் செல்வது வழக்கம் .
வியாபாரம், திரைத்துறை என பலதுறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் இஷ்டதெய்வமாகத் திகழ்கிறது வடபழநி சுப்ரமணிய சுவாமி ஆலயம். .
ஆங்கிலப்புத்தாண்டு, தமிழ்ப்புத்தாண்டு, மற்றும் முருகப்பெருமானுக்கு உரிய விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், வடபழநி முருகனைத் தரிசித்துச் செல்வார்கள். சுமார் 130 வருடங்கள் பழைமை வாய்ந்த திருக்கோயில் இது.
கருவறையில், தனக்கே உரிய அழகுடன் பேரழகுடன் காட்சி தந்து ஆட்சி செய்துகொண்டிருக்கிறார் முருகப்பெருமான். செவ்வாய்க்கு அதிபதி முருகக் கடவுள்தான். இங்கே நவக்கிரகத்தில் அமைந்துள்ள செவ்வாய் பகவான், தனிச்சந்நிதியில் அமைந்து அருள்பாலிக்கிறார்.
செப்டம்பர் 1ம் தேதி கோயில்களில் பக்தர்கள் வழிபடலாம் என தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஆலயங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை, வடபழநி, அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் பக்தர்கள் இன்று 02.09.2020 முதல் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
02-09-2020 முதல் நேரடியாக டோக்கன் பெற்று முருகப்பெருமானை தரிசிக்கலாம். அல்லது இணைய வழி அனுமதிச் சீட்டு பெற்றும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
வடபழநி முருகன் கோயிலின் இணையதள முகவரி https://tnhrce.gov.in/eservices/dharshanbooking_index.php?tid=6&catcode=6
தன்னை நாடி வரும் அன்பர்களுக்கெல்லாம் அருள் மழை பொழியும் வடபழநி முருகப்பெருமானை தரிசித்து பேரருள் பெறுங்கள் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT