Published : 02 Sep 2020 08:54 AM
Last Updated : 02 Sep 2020 08:54 AM
முன்னோர் வழிபாடுகளைச் செய்யச் செய்ய, நாமும் நம் குடும்பமும் நம் வாரிசுகளும் சீரும் சிறப்புமாக வாழலாம். கஷ்டங்களில் இருந்து விடுபடலாம். கடன் தொல்லையில் இருந்து மீளலாம். மறக்காமல், தவறாமல், முன்னோர் வழிபாட்டைச் செய்யுங்கள். முன்னுக்கு வருவீர்கள்.
மகாளய பட்ச காலத்தில் ஒரே நாளில் இரண்டு மூன்று தர்ப்பணங்களும் வரலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மகாளய பட்ச காலம் என்பது முன்னோருக்கான நாட்கள். பித்ருக்கள் அவர்களின் லோகத்தில் இருந்து, நம்முடைய பூலோகத்திற்கு வரும் நாட்கள் என்கிறது சாஸ்திரம். இந்த நாட்களில், நம்முடைய பித்ருக்களின் ஆத்மாக்கள், நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கும் என்றும் நமக்கு ஆசி வழங்குவதற்காகவும் நம் கஷ்டங்களைப் போக்குவதற்காகவும் நம்மைச் சுற்றி இருப்பார்கள். நல்ல நல்ல அதிர்வுகளை உண்டாக்கித் தந்தருள்வார் என்கிறது சாஸ்திரம்.
நம்முடைய வாழ்வில், நமக்கான மிக முக்கியக் கடமைகள் இரண்டு. நம் சந்ததிகளை, வாரிசுகளை வளர்த்து ஆளாக்க வேண்டும். இரண்டாவது நம்முடைய பெற்றோர்களை, நம்முடைய மூதாதையர்களை நல்லவிதமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். இவற்றை விட முக்கியமானது, இறந்துவிட்ட நம்முடைய முன்னோர்களை வழிபடவேண்டும் என வலியுறுத்துகிறது தர்ம சாஸ்திரம்.
வருடந்தோறும் இறந்துவிட்ட அம்மாவுக்கு சிராத்தம் செய்வதும் அப்பாவுக்கு சிராத்தம் செய்வதும் செய்துகொண்டிருக்கிறேன் என்று பலரும் சொல்லலாம். ஆனால் 365 நாளில், இந்த ஒருநாள் மட்டும் முன்னோரை வழிபட்டால் போதாது. ஒருவருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் செய்யவேண்டும். அதாவது 96 முறை முன்னோர் ஆராதனையைச் செய்யவேண்டும் என்று விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மகாளய பட்ச புண்ணிய காலம் என்று சொல்லப்படுகிற முன்னோர்களுக்கு பதினைந்துநாட்களில், அந்த பதினைந்து நாட்களும் தர்ப்பணம் செய்யவேண்டும். முன்னோரை வணங்கவேண்டும். முன்னோரை நினைத்து தானங்கள் செய்யவேண்டும்.
இதுகுறித்து பலருக்கும் குழப்பங்கள் வரலாம்.
அதாவது மகாளய பட்ச புண்ய காலத்தில், அப்பாவுக்கு அல்லது அம்மாவுக்கு அல்லது வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பாக்களுக்கு சிராத்தம் வரலாம். அப்படி சிராத்தம் செய்யும்போது மகாளய பட்ச நாளில் வருவதால், எதையொட்டி தர்ப்பணம் செய்யவேண்டும் என பலரும் குழப்பிக் கொள்ளலாம். அப்படி மகாளய பட்ச காலத்தில் எவருக்கேனும் சிராத்தம் வந்தால், முதலில் சிராத்தம் செய்துவிட்டு, பின்னர் மீண்டும் சங்கல்பத்தில் இருந்து தொடங்கி, மகாளய பட்ச தர்ப்பணம் செய்யவேண்டும்.
அதேபோல், அமாவாசை மற்றும் மாதப் பிறப்பு வரலாம். அப்போது அமாவாசை தர்ப்பணம் முடித்துவிட்டு, மகாளய பட்ச தர்ப்பணம் செய்யவேண்டும். மாதப் பிறப்பு தர்ப்பணத்தை செய்துவிட்டு, மகாளய பட்ச தர்ப்பணம் செய்யவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மகாளய பட்சம் எனப்படும் முன்னோருக்கான பதினைந்து நாட்கள், நமக்கும் முன்னோர்களுக்குமான, இந்த பந்தத்தை உணர்த்தக் கூடிய பந்தத்தை மேலும் வலுவாக்கிக் கொள்ளக்கூடிய நாட்கள். எனவே இந்த பதினைந்து நாட்களும் மகாளய பட்ச கால தர்ப்பணங்களை முறையே செய்து, முறையே அவர்களை நினைத்து தானங்கள் செய்து வழிபடுவோம்.
முன்னோர் வழிபாடுகளைச் செய்யச் செய்ய, நாமும் நம் குடும்பமும் நம் வாரிசுகளும் சீரும் சிறப்புமாக வாழலாம். கஷ்டங்களில் இருந்து விடுபடலாம். கடன் தொல்லையில் இருந்து மீளலாம். மறக்காமல், தவறாமல், முன்னோர் வழிபாட்டைச் செய்யுங்கள். முன்னுக்கு வருவீர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT