Published : 24 Aug 2020 10:42 PM
Last Updated : 24 Aug 2020 10:42 PM
செவ்வாய்க்கிழமையும் விசாக நட்சத்திரமும் இணைந்து வரும் அற்புதமான நாளில், கந்த சஷ்டி கவசம் சொல்லி, கந்தகுமாரனை வேண்டுங்கள். நீங்கள் கேட்டதையெல்லாம் தந்தருள்வான் வள்ளி மணாளன்.
செவ்வாய்க்கு நாயகன் முருகப் பெருமான். அதனால்தான் முருகப்பெருமானுக்கு உரிய நாளாக செவ்வாய்க்கிழமை போற்றப்படுகிறது. அதனால்தான் முருகக் கடவுளுக்கு செந்நிற மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமைகளில், சிவ மைந்தனை வணங்கித் தொழுதால், செவ்வாய் முதலான தோஷங்கள் நீங்கும். செவ்வாயின் பலம் கிடைக்கப் பெறலாம். திருமணத் தடைகள் நீங்கும். இதுவரை இருந்த தொழிலின் இறக்கங்கள் என்கிற நிலையெல்லாம் மாற்றியருளுவார் வெற்றிவேலன். இழந்த பதவியையும் புகழையும் பொருளையும் தந்தருள்வார்.
வீடு மனை யோகம் தரும் பூமிகாரகனாகத் திகழும் செவ்வாய் பகவானை, செவ்வாய்க்கிழமையில் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை வணங்கினால் போதும்... வீடு மனை யோகமெல்லாம் நிச்சயம் கிடைக்கப் பெறலாம்.
இதேபோல், முருகப்பெருமானுக்கு உரிய நட்சத்திரங்கள் என்று சில நட்சத்திரங்கள் உள்ளன. பூச நட்சத்திரம், உத்திர நட்சத்திரம், கார்த்திகை நட்சத்திரம் போல், விசாக நட்சத்திரமும் விசேஷமானது.
வைகாசி விசாகம் மகத்துவம் வாய்ந்தது. அதேசமயம், ஒவ்வொரு மாதத்திலும் வருகிற விசாக நட்சத்திரமும் விசேஷமானது. இதோ... நாளைய தினம் 25.8.2020 செவ்வாய்க்கிழமை, விசாக நட்சத்திர நாள். செவ்வாய்க்கிழமையும் விசாக நட்சத்திரமும் இணைந்த நன்னாளில், முருக வழிபாடு செய்யுங்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். காலையும் மாலையும் விளக்கேற்றி, வேலவனை வேண்டுங்கள்.
வேதனைகளையெல்லாம் தீர்ப்பான் ஞானவேலன். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, வழிபடுங்கள். அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். உங்கள் வாழ்க்கையையும் இனிக்கச் செய்வான் சக்திவேலன்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT