Last Updated : 24 Aug, 2020 06:27 PM

1  

Published : 24 Aug 2020 06:27 PM
Last Updated : 24 Aug 2020 06:27 PM

செவ்வாய் பகவான், அங்காரகன், வடிவேலவன்!  - வீடு மனை யோகம் ; செவ்வாய் தோஷம் நீங்கும்! 

நவக்கிரகங்களில் ஒரு கிரகம், செவ்வாய். செவ்வாய் பகவானின் செந்நிறம் கொண்டவர். இவர் கழுத்தில் அணிந்திருக்கும் மாலையும் சிகப்பு வண்ணமுடையது. இவரின் ஆடை, செந்நிறம். அதனால்தான் இவருக்கு செவ்வாய் என்று பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம். மேலும் பூமாதேவிதான் செவ்வாயை வளர்த்ததாக விவரிக்கிறது புராணம்.
அதாவது, சிவனாரின் நெற்றியில் இருந்து ஒரு துளி நீர் பூமியில் விழுந்தது. அந்த நீர்த்துளியே மங்களன் என்றும் அவனை பூமாதேவி வளர்த்தாள் என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

காலங்கள் ஓடின. வளர்ந்த மங்களன், சிவனாரை நோக்கி கடும் தவம் புரிந்தான். அதன் பலனாக, மங்களனின் தேகத்தில் இருந்து யோகாக்கினி கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும் அவனுடைய தவத்தால், நவக்கிரகங்களில் ஒருவனானான். செவ்வாய் கிரகமாக மட்டுமின்றி அங்காரகன் எனும் பெயரில், செவ்வாய் தோஷங்களை நீக்கும் சக்தியைப் பெற்றவனானான்.

அங்காரக தெய்வமான செவ்வாய் பகவான், தன்னை யாரெல்லாம் வணங்குகிறார்களோ அவர்களின் கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றித்தருவான். செவ்வாய்க்கிழமைகளில், அங்காரகனை மனதாரப் பிரார்த்தித்தால், செவ்வாய் முதலான தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

அங்காரகனின் வாகனம் ஆடு. எனவே,செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் பலமின்றி இருப்பவர்கள், ஆடுகளுக்கு உணவிடலாம். அங்காரகனை பிரார்த்திக்கலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான். அதனால்தான் முருகப்பெருமானுக்கு உரிய நாளாக செவ்வாய்க்கிழமையைச் சொல்கிறார்கள். ஆகவே, செவ்வாய்க்கிழமைகளில், முருகப்பெருமானையும் செவ்வாய் பகவானையும் ஒருசேர மனதில் நினைத்து, மனதார வேண்டிக்கொள்ளுங்கள். விரைவில் திருமண யோகத்தைத் தந்தருள்வான். தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேறும் என்பது ஐதீகம்.

முக்கியமாக, முருகப்பெருமானை வணங்கினால், வீடு மனை யோகம் கிடைக்கும்; அருளுவான் என்பார்கள். இதற்குக் காரணம்... செவ்வாய் பகவான் தான். பூமி அன்னையால் வளர்ந்தவர் செவ்வாய் பகவான். ஆகவே, முருகப்பெருமானை வணங்கினால், செவ்வாய் பகவானின் அருளும் கிடைக்கும். வீடு மனை முதலான நில யோகங்களைக் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் முருக பக்தர்கள்.

அங்காரக ஸ்தலம் என்று போற்றப்படுகிற ஒரே ஸ்தலம்... வைத்தீஸ்வரன் கோவில். சிதம்பரத்துக்கு அருகில், சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ளது வைத்தீஸ்வரன் கோவில்.

செவ்வாய்க்கிழமைகளில், அங்காரகனை, செவ்வாய் பகவானை, முருகப்பெருமானை ஆத்மார்த்தமாக வேண்டுங்கள். செந்நிற மலர்களை முருகப்பெருமானுக்குச் சூட்டி ஆராதனை செய்யுங்கள். நீங்கள் கேட்டதையெல்லாம் வழங்கி அருளுவார் செவ்வாய் பகவான்!


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x