Published : 03 Sep 2015 11:49 AM
Last Updated : 03 Sep 2015 11:49 AM
சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதியிற் சுடுமாற் போலே
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே
சூரியகாந்தம் என்ற கண்ணாடிக் கல்லின் மீது சூரியக்கதிர் ஊடுருவிச் செல்லும்போது அது அனைத்தையும் சுட்டெரிக்கும். அதனைப் பஞ்சின் மீது காட்டும்போது தீப்பற்றி எரியும். ஆனால் சூரிய ஒளி படாத போது சூரியகாந்தக் கல் அதனைச் சுற்றியிருக்கும் பஞ்சினை ஒன்றும் செய்யாது . அது போன்றே குருவின் பார்வை நம் மீது ஊடுருவிச் செல்லும் போது, நம் முன் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களையும் சுட்டெரிக்கும் என்று திருமூலர் கூறுகிறார். அதாவது, குருவின் திருவருள் ஒன்றே நமது மலங்களை எரித்து நம்மை இறைவனிடம் சேர்ப்பிக்கும்.
சாதுசங்கம் அமைத்து அஞ்ஞானம் நீக்கியவர்
திருமூலர் கூறும் நெறியின்படி, இறைதத்துவத்தை உபதேசிப்பதற்காகவே பிறப்பெடுத்த கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள், ஆனந்தாசிரமம் என்ற சாது சங்கத்தை நிறுவிப் பலரது அஞ்ஞானத்தை நீக்கியிருக்கிறார்.
திருப்போரூரில் வீரசைவக் குடியைச் சேர்ந்த முத்துச்சாமி பக்தர், செங்கமலத்தாயார் ஆகியோரின் நான்காவது பாலகனாக அவதரித்தார். சிறுவயதிலேயே சிவ பஞ்சாட்சரத்தை உச்சரிப்பதிலும், சிவலிங்கத்திற்குப் பூஜை செய்வதிலும் தமது சிந்தையைச் செலுத்தினார்.
சுவாமிகளுக்குப் பதினாறு வயதாகும்போது, அவரது குடும்பம் சென்னைக்கு வந்து சேர்ந்தது. எதிலும் பற்றற்று இருந்த சிவப்பிரகாச சுவாமிகள், வேதாந்த பானு சைவ இரத்தின தேசிகரிடம் வேதாந்த நூல்களைக் கற்றுத் தேர்ந்தார்.
நிர்விகற்ப சமாதி
அடிக்கடி தனியிடம் நாடி யோகப் பயிற்சியிலும் ஈடுபட்ட சுவாமிகள், ஒருமுறை நிர்விகற்ப சமாதி நிலையை அடைந்தபோது, அவர் இறந்துபோனதாகக் கருதி அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். சுவாமிகள் அந்த நிலையிலிருந்து மீண்ட பின், அவரது பெற்றோர் அச்சமுற்று அவருக்குத் திருமணம் செய்விக்க முயற்சி செய்தனர்.
அடிக்கடி தனியிடம் நாடி யோகப் பயிற்சியிலும் ஈடுபட்ட சுவாமிகள், ஒருமுறை நிர்விகற்ப சமாதி நிலையை அடைந்தபோது, அவர் இறந்துபோனதாகக் கருதி அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். சுவாமிகள் அந்த நிலையிலிருந்து மீண்ட பின், அவரது பெற்றோர் அச்சமுற்று அவருக்குத் திருமணம் செய்விக்க முயற்சி செய்தனர்.
சுவாமிகள் அதிலிருந்து விடுபட எண்ணித் திருவொற்றியூர் பட்டினத்தடிகளின் ஆலயத்திற்குச் சென்று தாம் அணிந்திருந்த உடைகளைத் துறந்து, கோவணத்தை உடையாகக் கொண்டார். அப்போது அவருக்கு வயது பத்தொன்பது.
சுவாமிகளைத் தேடி வந்த அவரது தமையனார் அவரை இல்லத்திற்கு அழைத்து வந்தார். அவரது கோலத்தைக் கண்ட சுவாமிகளின் தாயார் திடுக்கிட்டு அவரை இல்லத்திற்குள் அழைத்தார். சுவாமிகள் இல்லத்திற்குள் வர மாட்டேனென்று திண்ணையில் அமர்ந்துகொண்டார். அவரது அன்னையார் உணவு கொடுக்க முன் வந்த போது இதுதான் விதி என்று கூறித் தமது கரத்தினை நீட்டினார் . அதில் மூன்று பிடி அன்னம் பெற்று உண்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அவர் வாழ்ந்த காலம் முழுவதும் கரத்தில் அன்னம் பெற்று உண்டதால் சுவாமிகளுக்குக் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் என்ற பெயர் நிலைத்தது.
பின்னர் திருவான்மியூரில் ஓரு ஆசிரமத்திற்குச் சென்று அங்கிருந்த மரத்தினடியில் தவமியற்றினார். அன்பர் ஒருவரின் வேண்டுகோளை ஏற்று சூளை செங்கல்வராயன் தோட்டத்திற்குச் சென்று ஒரு கிச்சிலி மரத்தினடியில் ஐம்புலன்களை ஒடுக்கிச் சமாதி நிலையிலிருந்தார். இங்கு தம்மைத் தரிசிக்க வரும் பக்தர்களால் தமது தவத்திற்கு இடையூறு ஏற்படுகிறது என்று ஒருவருமறியாமல் பொதிகை மலைக்குச் சென்றார். அங்கு அகத்தியர் ஆசிரமத்தின் அருகில் ஒரு மரத்தினடியில் நிஷ்டையில் இருந்தார். அங்கு அவர் தேடிய ஞானம் சித்துக்கள் அனைத்தும் கிட்டின. மூன்று ஆண்டுகள் அங்கேயே தங்கிவிட்டார். அவருடைய அன்பர்கள் அவரைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் அழைத்துவந்தனர்.
சுவாமிகள் தங்கியிருந்த தோட்டத்தில் அவருக்கு ஓரு ஆசிரமம் அமைத்துக் கொடுத்தனர். அந்த ஆசிரமத்தினுள் நாற்பத்தெட்டு நாட்கள் வரை உணவின்றி சமாதி நிலையில் இருந்தார். பின்னர் தமது அன்பர்களுக்கு உபதேசம் செய்ததுடன் ‘ஞானசகாய விளக்கம்’, ‘மனன சிந்தாமணி’ போன்ற நூல்களையும் இயற்றினார். மொழி விற்பன்னர்களை அழைத்துவந்து யோக நூல்களைத் தமிழில் இயற்றச் செய்தார்.
சாதுக்களுக்கு நிரந்தரமாக ஒரு மடம் அமைக்க விரும்பினார் . இதனையறிந்த அவரது தொண்டர் ஒருவர் வியாசர்பாடியில் நாகர் ஆலயம், குளம் உட்பட்ட தோட்டத்தைக் கிரயம் பெறுவதற்கு உதவினார். சுவாமிகள் அங்கு ‘ஆனந்தாசிரமம்’ அமைக்கத் துவங்கியதும் அது சாமியார் தோட்டம் என்ற பெயரைப் பெற்றது.
தமது ஞான யோகத்தால் பல சித்துக்களைப் பெற்ற சிவப்பிரகாச சுவாமிகள் வெளிப்படையாக எந்த சித்துக்களையும் நிகழ்த்திக் காட்டியதில்லை. தம்மை நாடி வரும் பக்தர்களின் உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட குறைகளைத் தமது பார்வையாலும் வார்த்தையாலும் தீர்த்து வைத்திருக்கிறார்.
“அணங்கற்றம் ஆதல் அருஞ்சனம் நீவல்
வுணங் குற்ற கல்விமா ஞானம் மிகுத்தல்
சிணுங்குற்ற வாயா; சித்திதாம் கேட்டல்
நுணங்கற்று இருத்தல்கால் வேகத்து நுந்தலே”
அணங்கற்ற - வருத்தும் தன்மையுடைய ஆசைகள் அற்ற, அருஞ்சனம் நீவல் - உற்றார் உறவினரை நீங்குதல், கல்வி அறிவு பெற்று ஞானத்தை மிகக் கொண்டவராக இருத்தல், சிணுங்குற்ற - சிவமந்திரத்தைத் தனக்குள்ளே முணுமுணுத்தல், தம்மைவிட உயர்ந்த ஞானிகளின் உபதேசங்களைக் கேட்டல், நுணங்கற்று - உள்ளத்தில் சலிப்பு ஏற்பட்டுவிடாது எப்போதும் ஒரே நிலையில் இருத்தல் ஆகியவையே யோகியர் இயல்புகள் என்று திருமூலர் கூறுகிறார். இதற்கு முன்னுதாரணமாக இருந்தவர் சிவப்பிரகாச சுவாமிகள்.
தமது உடலிலிருந்து ஆன்மாவைப் பிரிக்கும் நேரம் வந்துவிட்டதை அறிந்து மூன்று நாட்களுக்கு முன்பே அதனைத் தமது பக்தர்களுக்கு அறிவித்துவிட்டு ‘சம்போ சம்போ’ என்று உரத்துக் கூறிக்கொண்டே யோகத்தில் ஆழ்ந்துவிட்டார். பிங்கள ஆண்டு, பங்குனி மாதம், குரு வாரம் உத்திராட நட்சத்திரத்தில் சுவாமிகள் விதேக கைவல்யம் அடைந்தார்.
பக்தர்கள் சுவாமிகளின் திருமேனியை முறைப்படி சமாதி செய்து சமாதியின் மீது சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தனர். இப்போது சுவாமிகளின் ஜீவசமாதி மிகப் பெரும் சிவாலயமாக உருவாகியுள்ளது.
சுவாமிகளைத் தரிசிக்க
சென்னை வியாசர்பாடி அம்பேக்கர் கல்லூரிக்கு எதிரில் சாமியார் தோட்டம் முதல் தெருவினுள் சிறிது தூரம் சென்றால் சுவாமிகளின் ஆலயத்தைத் தரிசிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT