Published : 14 Aug 2020 03:29 PM
Last Updated : 14 Aug 2020 03:29 PM
சனீஸ்வர பகவான், நவக்கிரகங்களில் இருக்கிற ஒரு கிரகம்; ஒன்பது தெய்வங்களில் ஒரு தெய்வம் என்று மட்டுமே நினைத்துவிடாதீர்கள். சனீஸ்வரர் ஒரு நீதிபதியும் கூட!
எவருக்குமே பயப்படாதவர்களும் கூட, சனீஸ்வரருக்குப் பயப்படுவார்கள். இந்த நீதிபதியிடம் இருந்து எவரும் தப்பவே முடியாது. அதனால்தான் சனியை, சனீஸ்வரர் என்று ஈஸ்வரப் பட்டம் சேர்ந்துகொண்டாடுகிறோம். நவக்கிரகங்களில் வேறு எந்த கிரக தெய்வங்களையும் ஈஸ்வரப் பட்டம் சொல்லிக் கொண்டாடுவதில்லை.
சிறைச்சாலை என்பது செய்த குற்றத்துக்கான தண்டனை வழங்கப்படும் இடமாக இருந்தாலும் அது, தண்டனைக்கான இடமல்ல. திருந்தி வாழ்வதற்கான இடம். அப்படித்தான் சனீஸ்வர பகவான், திருந்தி வாழ்வதற்காக சந்தர்ப்பத்தை உருவாக்கித் தருகிறார். ஆக, தண்டிக்கக் கூடிய தெய்வம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படியெல்லாம் இல்லை. நம்மைத் திருத்தும் தெய்வம் சனி பகவான். நமக்குச் சோதனைகளைத் தருவார். நம்மைச் சோதனைக்குள்ளாக்குவார். இவை அனைத்துமே நம்மைத் திருத்துவதற்காகத்தான் என விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள். எனவே சனி பகவானை நினைத்து எந்தச் சூழ்நிலையிலும் நாம் பயப்படத் தேவையில்லை.
ஆனால், சனீஸ்வரரை நினைத்து, யார்தான் பயப்படவேண்டும்?
தவறு செய்பவர்கள் பயப்படவேண்டும். அப்படித் தவறு செய்து கொண்டிருப்பவர்களை சனி பகவான், எந்தத் தருணத்திலும் மன்னிக்கவே மாட்டார் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சனி தோஷம் இருப்பவர்கள், சனி பகவானை முறையே தரிசித்து வந்தாலே போதும். நம்மை நெறிப்படுத்தி, நமக்கு வேண்டியதையெல்லாம் தந்தருள்வார். அவர் கருணாமூர்த்தி என்பதே உண்மை!
சனி பகவானை தொடர்ந்து வணங்கி வந்தாலே, அவரின் கோபத்துக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம். அதற்காக ஒருபக்கம் தவறைச் செய்துகொண்டு, இன்னொரு பக்கம் தரிசித்து வழிபட்டு வந்தால்... ஏற்கமாட்டார். சக மனிதர்களை இரண்டு முகம் காட்டி ஏமாற்றுவது போல், சனீஸ்வரரை ஏமாற்றிவிட முடியாது. கொஞ்சம் கறார் கடவுள்தான் சனி பகவான் என்று போற்றுகிறார்கள் குருமார்கள்.
சனிக்கிழமை தோறும், எள் தீபமேற்றி, சனீஸ்வரரை வழிபட்டு வந்தால், சனியின் பிடியில் இருந்தும் சனியின் பார்வையில் இருந்தும் தப்பிக்கலாம். விடுபடலாம். விமோசனம் பெறலாம்.
சனி பகவானை வணங்கும் போது, நேருக்கு நேர் நின்று தரிசிக்கக் கூடாது என்பார்கள். அதாவது குரு ஸ்ரீபிரம்மாவை நேராக நின்று தரிசிக்க வேண்டும். குருவின் பார்வை நம் மீது படவேண்டும் என்பார்கள். ஆனால் சனீஸ்வரரை சற்று பக்கவாட்டில் நின்றபடி, தரிசிப்பதே உத்தமம் என அறிவுறுத்துகிறார்கள்.
சனிக்கிழமைகளில், சனி பகவானை நினைத்து வேண்டிக்கொண்டு, காகத்துக்கு உணவிடுங்கள். எள் தீபமேற்றி, சனீஸ்வரரை வழிபடுங்கள். சனீஸ்வரரின் கோபப்பார்வையில் இருந்து விலகியிருக்கலாம். ஆனால் சனீஸ்வரரின் அருட்பார்வையைப் பெறுவதற்கு இதுவே வழி. ஆகவே, சனீஸ்வரரை நினைத்து சனி பகவானின் வாகனம் என்று போற்றப்படும் காகத்துக்கு உணவிடுங்கள்.
ஆடி மாதத்தின் கடைசி சனிக்கிழமையில், சனீஸ்வரரை வணங்கி வழிபடுங்கள். காகத்துக்கு உணவிடுங்கள். சனி கிரக தோஷங்களில் இருந்து விடுபடுவீர்கள். நம் முன்னோர்களின் வடிவமாகத் திகழும் காகத்துக்கு உணவிடுவதால், நம் பித்ருக்களும் குளிர்ந்து போய் ஆசீர்வதிப்பார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT