Last Updated : 13 Aug, 2020 07:00 PM

 

Published : 13 Aug 2020 07:00 PM
Last Updated : 13 Aug 2020 07:00 PM

ஆடி கடைசி வெள்ளி... மறந்துடாதீங்க! 

ஆடி மாதத்தின் நிறைவு வெள்ளிக்கிழமை... கடைசி வெள்ளிக்கிழமையில் மறந்துவிடாமல், அம்பாளை ஆராதியுங்கள். சக்தியை வழிபடுங்கள். அன்னையிடம் உங்கள் பிரார்த்தனைகளையெல்லாம் சொல்லி முறையிடுங்கள். உங்கள் இல்லத்தில் சுபிட்சத்தைக் குடியிருக்கச் செய்வாள் தேவி.

ஆடி மாதம் என்பது சக்திக்கு உரிய வழிபாடு. ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று பகவான் கிருஷ்ணர் சொன்னது போல், ‘மாதங்களில் ஆடியாக இருக்கிறேன்’ என்று சக்தியான பராசக்தி, அதனால், இந்த மாதத்தில் உலகெங்கும் மகாசக்தியின் அளப்பரிய சக்தியானது வியாபித்திருக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இந்த மாதம் முழுவதுமே... அதாவது ஆடி மாதம் முழுவதுமே அம்பிகையைக் கொண்டாடலாம். ஆராதனை செய்யலாம். அம்பாளை குடும்பமாக அமர்ந்து, பூஜித்து வணங்குங்கள்.

பொதுவாகவே, செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு உகந்த நாட்கள். அன்னை வழிபடுவதற்கு உரிய விசேஷமான நாட்கள். அதனால்தான் வீட்டிலும் ஆலயத்திலும் அன்றைய நாளில், விசேஷ பூஜைகள் நடைபெறும். குறிப்பாக, ஆடி மாதத்தின் செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் இன்னும் மகத்துவம் நிறைந்த நாட்களாக சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து, சுமங்கலிகளுக்கு புடவை, ஜாக்கெட் முதலான மங்கலப் பொருட்களும் சேர்த்துக் கொடுப்பது தாலி பாக்கியத்தை நிலைக்கச் செய்யும். கணவரின் ஆயுள் பெருகும். தடைப்பட்ட மங்கல - சுப காரியங்கள் அனைத்தும் தங்கு தடையில்லாமல் விரைவில் நிகழும்.

வீட்டில் இருந்த தரித்திர நிலை மாறும். சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப்பெற்று இனிதான வாழ்க்கையை அமைத்துத் தருவாள் மகாசக்தி.

ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கி நமஸ்கரிப்பதும் ஆசீர்வதிப்பதும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆடி மாதத்தில் இதுவரை வந்த வெள்ளிக்கிழமைகளில், நீங்கள் பூஜித்து அம்பாள் வழிபாடு செய்திருந்தாலும், ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் அவசியம் பூஜை செய்யுங்கள். பராசக்தியை வழிபடுங்கள். அம்பாளுக்கு உகந்த செந்நிற மலர்களை சார்த்துங்கள்.

லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். வீட்டில் ஐந்துமுகம் கொண்ட விளக்கு ஏற்றி வைப்பது மகோன்னதமானது. அப்படி செய்யாவிட்டாலும் விளக்கேற்றுங்கள். நெய்விளக்கேற்றுங்கள்.
வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இந்த பூஜையை மேற்கொள்ளுங்கள். தேவியை ஆராதித்து தீப தூப ஆராதனை செலுத்தி, பால் பாயசம், கேசரி, சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்து குழந்தைகளுக்கு வழங்குங்கள்.

உங்களால் முடிந்தால், வசதி இருந்தால், முதிர்ந்த சுமங்கலிக்கு வெற்றிலை, பாக்குடன், புடவை, ஜாக்கெட், வளையல், குங்குமம், மஞ்சள் வைத்து வழங்கி, அவரிடம் நமஸ்கரியுங்கள். ஒரேயொரு சுமங்கலிக்கு வழங்கினாலே போதுமானது. ‘இப்போ அப்படியெல்லாம் கொடுக்க பொருளாதாரம் இடம் தரலியே’ என்று சொல்லுபவர்கள், முதிர்ந்த சுமங்கலிக்கு வெற்றிலை, பாக்குடன், இரண்டு வாழைப்பழம் வைத்து, மஞ்சள், குங்குமம் வழங்கி, ஒரு ஜாக்கெட் பிட்டாவது வழங்கி நமஸ்கரித்து அவரின் ஆசியைப் பெறுங்கள்.

ஆடி வெள்ளியின் கடைசி வெள்ளிக்கிழமை... நாளைய தினம் (14.8.2020). மறக்காமல், அம்பாளை, அன்னையை, மகாசக்தியை, உலகாளும் நாயகியை ஆத்மார்த்தமாக வணங்குங்கள். இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளியேற்றுவாள். பிரிந்த தம்பதியை ஒன்று சேர்த்து வைப்பாள். இதுவரை வீட்டில் இல்லாமல் இருந்த ஒற்றுமையை பலப்படுத்திக் கொடுப்பாள்.

ஆடி வெள்ளியில் அம்பிகையைக் கொண்டாட மறக்காதீர்கள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x