Published : 12 Aug 2020 08:06 PM
Last Updated : 12 Aug 2020 08:06 PM
வியாழக்கிழமை என்றதுமே நினைவுக்கு வரும் தெய்வம் குரு தட்சிணாமூர்த்தி. குருவின் அம்சமாகத் திகழும் அற்புதத் தெய்வம்... ஸ்ரீதட்சிணாமூர்த்தி. சிவனாரின் வடிவங்களில் ஒன்று என்கிறது சிவஞான போதகம். சிவனாரின் வடிவமான தட்சிணாமூர்த்தி, தென் முகக் கடவுள். தெற்குப் பார்த்த நிலையில் இருப்பதால்தான், அவரின் திருநாமம் தட்சிணாமூர்த்தி என்று அமைந்ததாகச் சொல்கிறது சிவபுராணம். தட்சிணம் என்றால் தெற்கு.
சனகாதி முனிவர்களுக்கு கல்லால மரத்தடியில் அமர்ந்தபடி, சிவபெருமானே தட்சிணாமூர்த்தி அம்சத்துடன் வந்து, உபதேசித்து அருளினார். அதனால்தான், ஞானமும் யோகமும் வேண்டுவோர், தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள் என அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.
வியாழன் என்பவரே குரு பகவானைக் குறிக்கும். குரு பிரகஸ்பதிதான், நவக்கிரகங்களில் குரு பகவானாகத் திகழ்கிறார். அதேபோல், குரு ஸ்தானத்தில் குரு தட்சிணாமூர்த்தியே காட்சி தருவதால், சிவ சொரூபமாகத் திகழும் தென்முகக் கடவுளாம் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வணங்கினால், புத்தியில் தெளிவும் செயலில் திண்மையும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்ச நமஹ;
என்பது ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு உரிய மூலமந்திரம். சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தினமும் காலையில் பாராயணம் செய்வது ரொம்பவே விசேஷம். நற்பலன்களையெல்லாம் வழங்கும்.
அதேபோல், வியாழக்கிழமைகளிலும் பௌர்ணமி தினங்களிலும் சிவன் கோயிலில், கோஷ்டத்தில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்திக்கு எதிரே அமர்ந்துகொண்டு இந்த மந்திரத்தைச் சொல்லி ஜபிக்கலாம். தம்பதி சமேதராக இருந்து இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வழிபட்டால், தம்பதி இடையே ஒற்றுமை அதிகரிக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
குடும்பத்தில் வீண் சண்டையோ சச்சரவுகளோ ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையெல்லாம் அறவே மாறிவிடும். முகத்தில் தேஜஸ் குடிகொள்ளும். எடுக்கும் காரியங்களில் உங்களுக்கு வெற்றி உண்டாகும். வாக்குவன்மை பலமாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு லாபம் பன்மடங்கு பெருகும்.
அடுத்து... தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரம்
ஓம் தட்சிணாமூர்த்தியே வித்மஹே
த்யாநஸ்தாய தீமஹி
தந்நோ தீஸஹ் ப்ரசோதயாத்
வீட்டில் பூஜையறையில் அமர்ந்துகொண்டு, தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரத்தையும் மூல மந்திரத்தையும் ஜபித்து வாருங்கள். வீட்டில் உள்ள தரித்திர நிலை மாறிவிடும். சுபிட்சமும் ஐஸ்வரியமும் குடிகொள்ளும். மாணவர்கள், கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்குவார்கள் என்பது ஐதீகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT