Last Updated : 11 Aug, 2020 11:53 AM

 

Published : 11 Aug 2020 11:53 AM
Last Updated : 11 Aug 2020 11:53 AM

எதிரிகளை அழிப்பார்; வெற்றியைத் தருவார் பைரவர்! - அஷ்டமியில் பைரவ வழிபாடு

பைரவருக்கு உகந்த நாள் அஷ்டமி. அஷ்டமி நாளில், எந்தக் காரியம் செய்யாவிட்டாலும் பைரவரை வழிபடுவது மிகவும் பலத்தைக் கொடுக்கும். தீய சக்தியை அழித்து நன்மைகளைத் தந்தருள்வார் பைரவர் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் ஆலயங்களில் நடைபெறும். அதேபோல், அஷ்டமி நாளில், சில ஆலயங்களில், ராகுகாலத்தில் பைரவருக்கு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் செய்யப்படுவது வழக்கம்.

பொதுவாகவே ராகுகால வேளையில் விளக்கேற்றி துர்கை பூஜை செய்வது மகத்துவமானது என்பார்கள். அப்போது துர்காதேவியை நினைத்து, எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். அஷ்டமியன்று, துர்கா தேவியுடன் அஷ்டமிக்கு உரியவரான பைரவரை மனதார வழிபட்டால், மகத்தான பலன்கள் நிச்சயம்.

கலியுகத்துக்கு கால பைரவர் என்றொரு சொல் உண்டு. காலபைரவரை தொடர்ந்து வழிபட்டு வந்தால், வீட்டில் உள்ள தீயசக்திகள் அனைத்தும் தெறித்து ஓடிவிடும். கண்ணுக்குத் தெரிகிற, கண்ணுக்கே தெரியாத எதிரிகள் எல்லோரும் வீரியம் இழந்து போவார்கள். பைரவரை எவரொருவர் தொடர்ந்து வழிபடுகிறார்களோ... அவர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவ வழிபாடு செய்யலாம். செந்நிற மலர்கள் சார்த்தி வழிபடலாம். ஆலயங்களில், பைரவருக்கு வடைமாலை சார்த்தியும் வேண்டிக்கொள்வார்கள். மிளகால் செய்யப்பட்ட உணவை நைவேத்தியமாகப் படைப்பார்கள்.
வீட்டில் இருந்தே பைரவரை வழிபடலாம். பைரவாஷ்டகம் சொல்லி, பைரவ போற்றி சொல்லியும் பைரவரை ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்து பூஜிக்கலாம்.

முக்கியமாக, அஷ்டமி நாளில், ராகுகால வேளையில், வீட்டு பூஜையறையில், விளக்கேற்றி, பைரவ அஷ்டகம் சொல்லி பாராயணம் செய்வது, இதுவரை இருந்த காரியத் தடைகள் அனைத்தும் நீக்கிவிடும். தடையின்றி காரியங்கள் நிகழும். வீட்டின் தரித்திரத்தைப் போக்கி அருளுவார் பைரவர்.

இன்னுமொரு முக்கியமானது... அஷ்டமி நாளில், பைரவரை நினைத்துக்கொண்டு, தெருநாய்களுக்கு உணவளிப்பதும் பிஸ்கட் வழங்குவதும் தோஷங்களில் இருந்தும் சாபங்களில் இருந்தும் விலக்கு அளிக்கும். விமோசனம் பிறக்கும் என்பது ஐதீகம்.
இன்று அஷ்டமி. தேய்பிறை அஷ்டமி. கோகுலாஷ்டமி. பகவான் கிருஷ்ணர் அவதரித்த நாள். காலபைரவருக்கு உரிய நாள். மேலும் ஆடிச்செவ்வாய். ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய். முருகனுக்கும் அம்பாளுக்கும் உரிய நாள்.

எனவே, வீட்டில் விளக்கேற்றுங்கள். மாலையில் கிருஷ்ணருக்கான பூஜையின் போது விளக்கேற்றுவோம்தான். ஆனாலும் செவ்வாய்க்கிழமை ராகுகாலவேளையில் (மாலை 3 முதல் 4.30 மணிக்குள்) விளக்கேற்றுங்கள். பயமில்லாத வாழ்க்கையைத் தந்தருள்வார் பைரவர். எதிர்ப்புகளைத் தவிடுபொடியாக்கி, காரியத்தில் வெற்றியைத் தந்தருள்வார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x