Published : 10 Aug 2020 05:54 PM
Last Updated : 10 Aug 2020 05:54 PM
வருகிற 12ம் தேதி புதன்கிழமை, ஆடிக்கிருத்திகை நன்னாள். முருகப்பெருமானுக்கு உரிய அற்புதமான இந்தநாளில், வீட்டில் முருகபூஜை செய்யுங்கள்.
தமிழ் கூறும் நல்லுலகில், மூன்று கார்த்திகை நட்ச்த்திர நாள், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
உத்தராயன காலத்தின் துவக்கமான தை மாதத்தில் வருகிற கிருத்திகை, தை கிருத்திகை என்று கொண்டாடப்படுகிறது. இந்தநாளில் விரதமிருந்து முருக வழிபாடு செய்வார்கள் பக்தர்கள்.
அதேபோல், கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாள். திருக்கார்த்திகை என்றும் பெரிய கார்த்திகை என்றும் கொண்டாடப்படுகிறது, இந்தநாள்.
மூன்றாவதாக, தட்சிணாயன புண்ய காலமான ஆடி மாதம். இந்த ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை ரொம்பவே விசேஷமானது. மாதந்தோறும் வருகிற கிருத்திகை நட்சத்திர நாள், விரதமிருப்பதற்கும் கந்தனை வழிபடுவதற்கும் உகந்தநாள் என்றாலும் ஆடிக் கிருத்திகையான மிகவும் மகோன்னதமானது.
ஆடி மாதக் கிருத்திகை நட்சத்திர நன்னாளில், விரதமிருந்து முருகப்பெருமானைத் தரிசனம் செய்வார்கள் பக்தர்கள்.
இதோ... இந்த வருடம் ஆடி மாதக் கிருத்திகை வருகிற 12.8.2020 புதன்கிழமை அன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அந்தநாளில், விரதமிருந்து கந்தப் பெருமானை வழிபடுவார்கள் பக்தர்கள்.
ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை என்பது சாதாரண நாளில்லை. மிக மிக விசேஷமானது. உன்னதமான இந்த நாளில், அவசியம் முருக வழிபாடு செய்தால், தீய சக்திகளையெல்லாம் நம்மை விட்டு ஓடச் செய்வான் முருகக் கடவுள்.
நாரத முனிவரைத் தெரியும்தானே. ஆடிக்கிருத்திகை நாளில், நாரத முனிவர் விரதத்தைத் தொடங்கி, தொடர்ந்து 12 வருடங்கள் கடைப்பிடித்தார்; கந்தனை நினைத்துத் தவமிருந்தார். இதனால் முருகப் பெருமானின் அருளையும் அவரிடம் இருந்து வரத்தையும் பெற்றார். அதன் பலனாக, முனிவர்களில் முதன்மையானவர் என்றும் நாரத மாமுனி என்றும் உயர்ந்த நிலையைப் பெற்றார் என்கிறது புராணம். எனவே, ஆடிக்கிருத்திகை விரதம் மேற்கொண்டால், உயர்ந்த பதவிகள் தேடி வரும் என்பது ஐதீகம்.
காலையில் நீராடி, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து, முருகப்பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து, மனதாரப் பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் யாவும் கைகூடும் என்கிறார்கள் பக்தர்கள். ஆடிக் கிருத்திகை நாளில், முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள்.
தமிழகத்தில், பழநி, திருப்பரங்குன்றம், திருத்தணி, வடபழநி, திருச்செந்தூர் முதலான முருகப்பெருமான் குடிகொண்ட கோயில்கள் அனைத்திலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் விசேஷ வழிபாடுகளும் நடைபெறும். இந்த முறை ஆலயங்களுக்குச் சென்று தரிசிக்க இயலாத நிலை என்றாலும் பூஜைகள் மட்டும் விமரிசையாக நடந்தேறும். வீட்டிலிருந்தபடியே மானசீகமாக, ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்வோம்.
ஆடிக் கிருத்திகையில் கந்தபிரானை மனதாரப் பிரார்த்தனை செய்வோம். செவ்வாய் முதலான தோஷங்கள் அனைத்தும் விலகும். திருமணத் தடை அகலும். சொத்து சம்பந்தமாக இதுவரை இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நல்ல முடிவுக்கு வரும். வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கச் செய்து அருளுவார் வேலவன்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT