Published : 10 Aug 2020 11:28 AM
Last Updated : 10 Aug 2020 11:28 AM
ஆடி மாதத்தின் நிறைவுச் செவ்வாயில், அம்மாவையும் பையனையும் வழிபடுங்கள். தோஷமெல்லாம் போக்குவான் முருகன். துக்கத்தையெல்லாம் போக்குவாள் பராசக்தி.
ஆடி மாதம் என்பதே வழிபாட்டுக்கான மாதம்தான். ஆடி மாதத்தில்தான் ஏராளமான பண்டிகைகள் வருகின்றன. திருநாள்கள் வருகின்றன. விரதங்கள் மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. சக்தி வியாபித்திருக்கும் அற்புதமான மாதத்தில், நாமும் நம் மனோசக்தியையும் தேக சக்தியையும் பெருக்கிக்கொள்வதற்கு, பூஜைகளும் விரதங்களும் வழிபாடுகளும் பெருந்துணையாக இருக்கும். பேரருள் செய்யும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஆடி மாதம் முழுக்கவே சக்தி வழிபாட்டுக்கு உரிய அருமையான நாட்கள். அம்பாள், ஒவ்வொரு சொரூபமாக வீற்றிருக்கிறாள். எனவே, உமையவளாகவும், மாரியம்மன்களாகவும் கருமாரியம்மனாகவும் செல்லியம்மனாகவும் துர்கையாகவும் வாராஹியாகவும் திகழும் அம்பிகையின் சொரூபங்களை வழிபடுவது மிகுந்த பலன்களை வாரி வழங்கக் கூடியது.
ஆடி மாதத்தில்தான் அம்பிகைக்கு வளைகாப்பு விழா நடைபெறுகிறது. ஆடி மாதத்தின் பூர நட்சத்திரத்தில்தான் ஆண்டாள் அவதாரத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
பெண் தெய்வங்களுக்கு உரிய ஆடி மாதத்தில், எங்கு பார்த்தாலும் வேப்பிலையின் மணம் கமழும். மஞ்சள் கமகமக்கும். பொங்கலிட்டு படையலிடுவார்கள். கூழ் வார்த்து வழங்குவார்கள். ஆடி மாதத்தில்தான் வரலக்ஷ்மி பூஜையும் கொண்டாடப்படுகிறது. மகாலக்ஷ்மியை வீட்டுக்கே வரவழைத்து, சுமங்கலிகளுக்கு மஞ்சள், புடவை முதலான மங்கலப் பொருட்கள் வழங்குவார்கள்.
இதேபோல், பெண் தெய்வங்களுக்கு மட்டுமின்றி, அழகன் முருகனுக்கும் இந்த மாதத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
தை மாதத்தின் பூசம் போல், வைகாசி மாதத்தின் விசாகம் போல், பங்குனி மாதத்தின் உத்திரம் போல், கார்த்திகை மாதத்தின் கார்த்திகை போல், ஆடி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகையும் ரொம்பவே விசேஷமான நாள்.
மாதந்தோறும் வருகிற கிருத்திகை நட்சத்திர நாளில், முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவார்கள் பக்தர்கள். காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபடுவார்கள்.
அதேபோல், செவ்வாய்க்கிழமை என்பதே முருகப்பெருமானுக்கும் அம்பாளுக்கும் உரிய நன்னாள்தான். ஆடிச் செவ்வாய்க்கிழமையில், அம்பாளையும் முருகக் கடவுளையும் வழிபடுவது மகத்தான பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
நாளைய தினம் 11.8.2020 செவ்வாய்க்கிழமை. ஆடி மாதத்தின் செவ்வாய்க்கிழமை. ஆடி மாதத்தின் கடைசிச் செவ்வாய்க்கிழமை. நிறைவுச் செவ்வாய். இந்த நன்னாளில், உமையவளையும் அவரின் மைந்தன் முருகக் கடவுளையும் மனதார வழிபடுங்கள்.
காலையில் வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானுக்கும் அம்பிகைக்கும் செந்நிற மலர்கள் சூட்டுங்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். வேலவனுக்கு எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள்.
செவ்வாய்க்கு அதிபதி முருகன். எனவே, செவ்வாய் பகவானுக்கு உரிய காயத்ரியைச் சொல்லி வழிபடுங்கள். செவ்வாய் முதலான சகல தோஷங்களும் விலகும். அங்காரக பகவானை வழிபடுங்கள். தீய சக்தியையெல்லாம் அழித்து அருளுவான் அங்காரகன். கந்தவடிவேலனை வணங்குங்கள். கஷ்டங்களையெல்லாம் தீர்ப்பான். வீடு மனை யோகங்களையெல்லாம் வழங்கி அருளுவான்.
ஆடி மாதத்தின் கடைசிச் செவ்வாயான நாளைய தினத்தை... தவறவிடாதீர்கள். கருணையும் அழகும் குடிகொண்ட வெற்றிவடிவேலனை அவசியம் தரிசியுங்கள். அல்லலெல்லாம் போக்குவான். அருள்மழை பொழிவான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment