Published : 09 Aug 2020 04:13 PM
Last Updated : 09 Aug 2020 04:13 PM
காரைக்கால் சிவலோகநாத சுவாமி கோயிலில் இன்று விதைத்தெளி உற்சவம் நடைபெற்றது.
காரைக்கால் அருகே தலத்தெரு பகுதியில் புகழ்பெற்ற சிவகாமி உடனுறை சிவலோகநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் விதைத்தெளி உற்சவம் மிகவும் சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம்.
முற்காலத்தில் மழை இல்லாமல் உணவுப் பயிர்கள் விளைச்சலின்றி பஞ்சம் ஏற்பட்டபோது ஊர் மக்கள் திரண்டு வந்து இந்தக் கோயிலில் உள்ள இறைவனிடம் முறையிட்டதாகவும், மக்களின் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக பஞ்சத்தைப் போக்கும் வகையில் சிவபெருமானே இவ்வூருக்கு வந்து விதைகளைத் தெளித்து வேளாண்மை செய்ததாக ஐதீகம். அதனை நினைவுகூரும் விதமாக தொடர்ந்து ஆண்டுதோறும் இப்பகுதி மக்கள் விதைத்தெளி உற்சவத்தை நடத்தி வருகின்றனர்.
நிகழாண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக, நேற்று சுவாமி, அம்பாளுக்கு எளிமையான வகையில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, இன்று (ஆக.9) காலை வீதியுலாவுக்கு மாற்றாக கோயிலுக்குள்ளேயே சுவாமி, அம்பாள் பிரகார உலா நடைபெற்றது.
இதையடுத்து ஆலய நந்தவனத்தில் விதைத்தெளி உற்சவம் நடைபெற்றது. விதைத்தெளி உற்சவத்தில் கோயில் அறங்காவல் வாரியத் தலைவர் ஏ.ஞானசேகரன் மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் உள்ளிட்ட குறைந்த எண்ணிக்கையிலானோர் மட்டுமே முகக்கவசம் அணிந்து கலந்துகொண்டு விதைகளைத் தெளித்து இறைவனைத் தரிசித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT