Published : 07 Aug 2020 05:00 PM
Last Updated : 07 Aug 2020 05:00 PM
தனமும் தானியமும் குறையற வழங்கவும் சகல ஐஸ்வரியங்களும் பெருகவும் உண்டான வழிபாடுகள் நிறைய இருக்கின்றன. அதேபோல் எந்த மாதத்திலும் ஐஸ்வர்ய வழிபாட்டை மேற்கொள்ளலாம். என்றாலும் ஆடி மாதம் அபிவிருத்திக்கு உகந்த மாதம்.
சகல செல்வ கடாக்ஷங்களையும் தந்தருளக் கூடியவள் மகாலட்சுமி. அதேபோல், செல்வ வளம் வருவதை குபேர யோகம் வந்துவிட்டது என்று சொல்லுவார்கள். லட்சுமி கடாட்சம் தரும் லட்சுமி குபேரர் வழிபாடு மிக மிக உன்னதமானது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
லட்சுமி குபேரர் வழிபாட்டைச் செய்யச் செய்ய, கடன் தொல்லையில் இருந்து நிவர்த்தி பெறலாம். வீட்டில் இதுவரை இருந்த தரித்திர நிலையில் இருந்து மீளலாம்.
வெள்ளி அல்லது செவ்வாய்க் கிழமைகளில், பூஜையறையில் கோலமிட்டுக் கொள்ளுங்கள். அந்தக் கோலத்தின் மீது நாணயங்களை (சில்லறைக் காசுகளை) ஏழு அல்லது ஒன்பது என்று ஒற்றைப்படை கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள்.
கோலத்தின் மீது ஒரு தட்டை வைத்து, அதில் சிறிய அளவில் கோலமிட்டு, கோலத்தின் மீது காசுகளை நிரப்பி, அதில் மஞ்சள் கலந்த அட்சதையையும் வைத்துக்கொள்ளுங்கள். விளக்கேற்றுங்கள். முடிந்தால்... இருந்தால் வெள்ளி விளக்கேற்றுவது ரொம்பவே விசேஷம்.
அப்போது,
ஓம் யகேஷசாய ச வித்மஹே
வைஷ்ரவனாய தீமஹி
தந்நோ ஸ்ரீத ப்ரசோதயாத்
என்கிற லட்சுமி குபேர காயத்ரியை சொல்லி வழிபடுங்கள். 24 முறை அல்லது 54 முறை அல்லது 108 முறை சொல்லி ஜபித்து வழிபடலாம்.
அதேபோல்,
ஓம் மகேஸ்வரப் ப்ரியாய வித்மஹே
வைஷ்ரவணாய தீமஹி
தந்நோ குபேர ப்ரசோதயாத்
என்கிற மந்திரத்தையும் சொல்லி வழிபடுங்கள்.
அதாவது, மகேஸ்வரருக்கு ப்ரியமானவரே. சங்க நிதி பதும நிதி அடைந்த குணாநிதியே, உன் மகத்துவத்தால், எங்கள் இல்லத்தில் நிறைவான தனம் பெருகச் செய்வாய்... என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
பின்னர், சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி முதலான நைவேத்தியங்களைப் படைத்து பிரார்த்தனை செய்யுங்கள். பிரசாதத்தை அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள்.
உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். இதுவரை இருந்த தரித்திர நிலை மாறும். வீட்டில் சுபிட்சம் நிலவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT