Published : 05 Aug 2020 09:42 PM
Last Updated : 05 Aug 2020 09:42 PM
வெப்பமும் காற்றும் இணைந்திருக்கும் மாதம் ஆடி. வெப்பம் குறைந்து காற்றில் கொஞ்சம் குளுமை பரவியிருக்கும் மாதம் இது. இந்தச் சமயத்தில் உடல் உஷ்ணமான நோய்கள் தாக்கக் கூடும் என்பதால்தான், அம்மன் வழிபாடு ஆடி மாதத்தில் செய்யப்படுகிறது.
அதேபோல், அம்மனுக்கு பூஜைகளும் வழிபாடுகளும் வீட்டில் செய்யப்படுகின்றன. இந்த நாளில் வீட்டை சுத்தமாக வைத்திருக்கப் பழக்கப்படுத்தினார்கள். தலைக்கு குளிப்பதும் பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதும் வழக்கமாயிற்று.
ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, வரலக்ஷ்மி பூஜை என்றெல்லாம் பூஜைகளும் புனஸ்காரங்களும் அமர்க்களப்பட, அதற்கேற்ற உணவு வகைகளைச் சமைத்துச் சாப்பிட வலியுறுத்தினார்கள் முன்னோர்கள்.
சில பண்டிகைகளை, விரதம் மேற்கொண்டு செய்யச் சொன்னார்கள். சில பூஜைகளின் போது, இன்னன்ன பழங்களைப் படையலிட வலியுறுத்தினார்கள். இன்னன்ன வகை இனிப்புகளைச் செய்யச் சொல்லி வழிபட அறிவுறுத்தினார்கள்.
ஆடி மாத வழிபாடுகளில், மாவிலையும் வேப்பிலையும் தவறாமல் இடம்பிடித்தன. மாவிளக்கேற்றி வழிபடுவதும் எலுமிச்சை சாதம், எலுமிச்சை தீபம் முதலானவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்ததும் நோயில் இருந்தும் நோய்க்கிருமியில் இருந்தும் காப்பதற்குத்தான் வழிமுறைப்படுத்தப்பட்டன.
ஆடி மாத அம்மன் பிரசாதங்களில் முக்கியமானது கூழ். உடலையும் வயிற்றையும் குளிர்ச்சிப்படுத்தும் உன்னதமான பிரசாதம் கூழ்.
பொதுவாகவே, ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் வார்ப்பதாக வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள்.
அரிசி நொய் - ஒரு கைப்பிடி,
கேழ்வரகு மாவு - 2 கைப்பிடி அளவு,
சிறிய வெங்காயம் - 10,
தயிர் - ஒரு கப்,
தேவைக்கு ஏற்ப உப்பு.
ஒரு கைப்பிடி அளவு நொய்யரிசியை ஒரு டம்ளர் அளவு நீர்விட்டு வேகவிடுங்கள். கேழ்வரகு மாவை 2 டம்ளர் நீர்விட்டு கரைத்துக்கொள்ளுங்கள். பிறகு அதில் சேர்த்து வேகவிடுங்கள்.
பிறகு தேவைக்குத் தக்கபடி உப்பு சேர்க்கவும். வெந்ததும் இறக்கி, ஆறியதும் தயிரைக் கடைந்து அதில் கலந்துகொள்ளுங்கள்.
அவ்வளவுதான்... அம்மனுக்கு குளிரக் குளிரக் கூழ் ரெடி. வீட்டில் நைவேத்தியம் செய்து, செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனை வணங்கிவிட்டுக் குடிக்கலாம்.
இந்தக் கூழுக்கு, சின்ன வெங்காயம் தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.
ஆடி மாதம் முழுவதுமே, அம்மனுக்கு இந்தக் கூழைச் செய்து படைத்து பின்னர் விநியோகிப்பது ரொம்பவே விசேஷம். மிகுந்த பலன்களையும் வரங்களையும் தரக்கூடியது. உங்களால் முடிந்தது... ஒரு பத்துப்பேருக்கேனும் கூழ் வார்த்துக் கொடுங்கள்.
உங்கள் வாழ்க்கையையே குளிரப்பண்ணுவாள் மகாசக்தி அம்மன்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT