Last Updated : 04 Aug, 2020 08:59 PM

 

Published : 04 Aug 2020 08:59 PM
Last Updated : 04 Aug 2020 08:59 PM

நம் முன்னோருக்கு பெருமாளே சிராத்தம் செய்யும் திருத்தலம்; பெருமாளுக்கு பிரண்டைத் துவையல் பிரசாதம்!  

நம் முன்னோருக்காக, நம்முடைய பித்ருக்களுக்காக பெருமாளே சிராத்தம் செய்கிறார். சிராத்த பலனை நமக்கு வழங்கி அருளுகிறார்.

செங்கல்பட்டு அருகே நென்மேலி எனும் கிராமத்தில் அமைந்து உள்ள ஸ்ரீலக்ஷ்மி நாராயண பெருமாள் கோயில், சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட தலமாகப் போற்றப்படுகிறது. செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 5 கி.மீ. மீட்டர் தொலைவில் உள்ளது.

மேலும் இந்தக் கோயிலில் உள்ள உற்சவ மூர்த்தி ஸ்ராத்த ஸம்ரக்ஷண நாராயணர் எனும் திருநாமம் கொண்டு திருக்காட்சி தருகிறார். இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும் இந்த சந்நிதியின் திருக்குளம் அர்க்ய புஷ்கரணி, ஜீயர் குளம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் காசி மற்றும் கயாவுக்கு நிகரான க்ஷேத்திரம் இது என்றும் இந்தத் திருத்தலம் சௌலப்ய கயா என்றும் போற்றப்படுகிறது.

இந்தக் கோயிலில், ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணிபுரிந்த ஸ்ரீயாக்ஞ வல்கியரைக் குருவாகக் கொண்ட சுக்ல யஜுர் வேதத்தைச் சேர்ந்த யக்ஞ நாராயண ஷர்மா சரஸ வாணி தம்பதி, இந்தப் பெருமாளின் மீது மாறாத பக்தி கொண்டிருந்தனர். மேலும் இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தையும் தெய்வ காரியங்களுக்கு செலவு செய்து விட்டதால், அரச தண்டனையை ஏற்க விரும்பாமல் திருவிடந்தை எனும் திவ்ய தேசத்து திருக்குளத்தில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர் என்கிறது ஸ்தல புராணம்.

தங்கள் ஈமக் கடன்களை செய்ய வாரிசு இல்லையே என மன வருத்தத்துடன் அவர்கள் மரணமடைந்தார்கள். அவர்களுடைய எண்ணத்தை அறிந்த பெருமாளே அவர்களுக்காக ஈமக்கிரியைகளை செய்தார் என விவரிக்கிறது தலத்தின் சரிதம்!

அந்த திவானின் வேண்டுகோளுக்கு இணங்க சந்ததிகள் இல்லாதவருக்கும் சிராத்தம் செய்ய இயலாதவர்களுக்கும் தானே முன்னின்று சிராத்தம் செய்து வைப்பதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

குதப காலம் எனும் பித்ரு வேளையில் (மதியம் 12 மணி முதல் 1 மணி வரை ) ஒரு காலம் மட்டும் ஆராதனம் ஏற்று விரதமிருக்கிறார் பெருமாள்!

எனவே, இங்கு சிராத்தம் செய்ய விரும்புபவர்கள் பித்ரு வேளையில் நடக்கும் பூஜையில் தங்கள் பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்ப்பிப்பதே ஸ்ராத்த சம்ரக்ஷணம் என்று விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

பெருமாளுக்கு இங்கே... வெண்பொங்கல், தயிர் சாதம் அதனுடன் பிரண்டையும் எள்ளும் சேர்ந்த துவையலும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இவற்றை மட்டும் ஏற்றுக் கொண்டு, பித்ருக்களை திருப்தி செய்கிறார் பெருமாள். இதனால் பித்ருக்களின் ஆசியும் பெருமாளின் அருளும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

தினமும் நடைபெறும் இந்த பூஜையில் அவரவர் பித்ருக்கள் திதியிலோ , அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளிலோ அல்லது எந்த நாளில் வேண்டுமானாலும் அன்று கலந்து கொள்வது கயாவில் சென்று ஸ்ராத்தம் செய்த பலனைக்கொடுக்கும் .
நென்மேலி சிராத்த சம்ரக்ஷண பெருமாளை மனதாரப் பிரார்த்திப்போம். பித்ருக்களின் ஆசியைப் பெறுவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x