Published : 04 Aug 2020 05:57 PM
Last Updated : 04 Aug 2020 05:57 PM
ஆடி மாதத்தில், மகாலக்ஷ்மி வாசம் செய்யும் துளசியைக் கொண்டு மகாலக்ஷ்மியை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். அதேபோல், துளசியையும் துளசி மாடத்தையும் பிரார்த்தனை செய்யுங்கள். சகல கடாக்ஷங்களையும் தந்தருள்வாள் மகாலக்ஷ்மித் தாயார்.
ஆடி மாதம் என்பதே நமக்கொரு எனர்ஜியையும் புத்துணர்ச்சியையும் தருகிற மாதம். அதாவது சக்தியையும் பலத்தையும் கொடுக்கும் மாதம். அம்பாள் என்பவளே சக்தி. சக்தியை வழிபட வழிபட நமக்கு தேகத்தில் ஆரோக்கியம் பெருகும். மனதில் உள்ள பயமெல்லாம் விலகும். செய்யும் காரியங்களில் திடமும் தெளிவும் பிறக்கும்.
ஆடி மாதத்தில் அம்பாளை வழிபடுவதும் மாரியம்மன், காளியம்மன் முதலான உக்கிர தெய்வங்களை வழிபடுவதும் விசேஷம். அதேபோம், அம்பிகைக்கு உரிய வேப்பிலையை வீட்டு வாசலில் தோரணம் போல் கட்டிவைப்பதும் நோய்க்கிருமிகளில் இருந்தும் உஷ்ணத்தில் இருந்தும் நம்மைக் காத்தருளும்.
அதேபோல், ஆடி மாதத்தில், மகாலக்ஷ்மித் தாயாரை வணங்குவது சகல ஐஸ்வரியங்களை அள்ளிக்கொடுக்கும். முக்கியமாக, மகாலக்ஷ்மி வாசம் செய்யும் துளசியை வழிபடுவதும் வணங்குவதும் மிகப்பெரிய வெற்றிகளைக் குவிக்கும். தடைப்பட்ட மங்கல காரியங்களையெல்லாம் நடத்தித் தரும் அற்புத வழிபாடு.. துளசி வழிபாடு.
பொதுவாகவே, ஆடி மாதத்தில் செய்யப்படும் துளசி வழிபாடு அரிதான பலன்களைத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் (துவாதசி வரையில்) துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.என்றாலும் ஆடி மாதம் முழுவதுமே துளசி மாடத்துக்கோ துளசிக்கோ பூஜைகள் செய்வது விசேஷமானதுதான்.
ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் கடைப் பிடிக்கப்படுவது, ஆடி கோபத்ம விரதம் எனப்படுகிறது. இந்த தினத்தில் பசுவை வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் கிட்டும். பசுவுக்கு அகத்திக்கீரை வழங்குவதும் பழங்கள் வழங்குவதும் பாவங்களையெல்லாம் போக்கவல்லது.
அதேபோல், ஆடி வெள்ளிக் கிழமைகளில் புற்றுக்கு பால் வார்த்து, பூஜை செய்வதால், நாகதோஷம் நிவர்த்தியாகும்; குடும்பம் சுபிட்சமாக இருக்கும். கால சர்ப்ப தோஷம் முதலானவை நீங்கும். இதுவரை வாழ்வில் இருந்த தடைகள்
ஆடி மாதத்தில் எந்தக் கிழமையில் வேண்டுமானாலும் துளசி வழிபாட்டை, மகாலக்ஷ்மி வழிபாட்டைச் செய்யலாம். முக்கியமாக, ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையில் அனுசரிக்கவேண்டிய பூஜை இது.
அன்றைய தினம், வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுங்கள். மாவிலையில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். வீட்டில் உள்ள பெருமாள் படங்களுக்கும் மகாலக்ஷ்மி படங்களுக்கும் வெண்மை நிற மலர்களையும் துளசியையும் சார்த்துங்கள். திருமகளுக்கு உரிய துதிப்பாடல்களைப் பாடி, தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம். மகாலக்ஷ்மியின் படத்துக்கு குங்கும அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்துகொள்ளலாம்.
துக்கமெல்லாம் தீர்க்கும் துளசியையும் துளசியின் நாயகி மகாலக்ஷ்மியையும் மனதார வழிபடுங்கள். சகல கடாக்ஷங்களையும் தந்தருள்வாள் மகாலக்ஷ்மி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT