Published : 03 Sep 2015 12:02 PM
Last Updated : 03 Sep 2015 12:02 PM

தெய்வத்தின் குரல்: வித்வத்துக்கு முடிவு மவுனம்

யானையின் வாயில் ஒரு விசேஷம். நமக்கும் இன்னும் ஆடு, மாடு மாதிரி எந்த பிராணியானாலும் அதற்கும் வாய் என்பது இந்தக் கோடிக்கு அந்தக் கோடி உதடு எப்போதும் வெளியில் தெரிகிற விதத்திலேயே இருக்கிறது. கண், அவசியமான சமயங்களுக்காக ரப்பை என்ற முடிபோட்டு வைத்திருப்பதே தவிர காது, மூக்கு, வாய் ஆகியவை நன்றாக வெளியில் தெரிகிற விதத்திலேயே இருக்கின்றன.

ரப்பை கண்ணை மூடுகிற மாதிரி உதடு, நாக்கு, பற்கள் தெரியாமல் மூடுகின்றதென்றாலும் இவற்றுக்குள் வித்தியாசமும் இருக்கிறது. கண்ணின் காரியமான பார்வை என்பதில் ரப்பைக்கு வேலையில்லை. பார்வையை மறைப்பதற்கே ஏற்பட்டது அது. உதடு அப்படியில்லை. பேச்சு என்ற காரியத்திலேயே நேராக நிறையப் பங்கு எடுத்துக் கொள்வது அது. நாக்கு, பல், உதடு, மூன்றுமே சேர்ந்துதான் பேச்சு என்பதை உண்டாக்கும் கருவியான வாய். நமக்கெல்லாம் வாயின் அங்கமாக உதடு எப்போதும் வெளியே தெரிகிறது.

யானை ஒன்றுக்குத்தான் வாயை மூடிக்கொண்டு தும்பிக்கை இருக்கிறது. வாயைக் கையால் பொத்திக்கொள்வது அடக்கத்திற்கு அடையாளம். நாம் கையை மடித்துக் கொண்டுபோய் ஒரு காரியமாக வாயைப் பொத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. யானைக்கானால் தன்னியற்கையாகவே அதற்குக் கையின் ஸ்தானத்தில் உள்ள தும்பிக்கை வாயை சதாவும் மூடிக் கொண்டிருக்கிறது.

தும்பி என்றால் யானை. அதன் கை தும்பிக்கை. தும்பிக்கையால் ஆகாரத்தை எடுத்து அது வாய்க்குள்ளே போட்டுக் கொள்கிறபோதும், தும்பிக்கையை உசரத் தூக்கிக் கொண்டு பிளிறுகிறபோதும் மட்டுந்தான் அதன் வாயைப் பார்க்க முடியும்.

இப்படிப்பட்ட வாய்க்காரராகப் பிள்ளையார் இருப்பதில் பெரிய தத்வார்த்தம் இருக்கிறது. வித்வானின் லக்ஷணம் என்று காட்டவே, தும்பிக்கையினால் வாயை மூடிக் கொண்டிருக்கும் கஜ ரூபத்தில் இருக்கிறார். அத்தனை வித்வத்துக்கும் முடிவு மௌனம் தான் என்று காட்டுகிறார். விக்நேச்வரர் நிஜமான சுமுகர்.

லம்போதரர்

லம்போதரர் தொங்குகிற வயிற்றுக்காரர் என்று அர்த்தம். லம்பம், தொங்குகிறது. உதரம், வயிறு. அதாவது தொந்தியுள்ளவர். பிள்ளையார் என்றாலே வெள்ளைக்காரர்கள் pot-bellied என்று அவருடைய பானை வயிற்றைத்தான் சொல்கிறார்கள். பேழை வயிறும் என்று அகவலில் வருகிறது. கையில் பூர்ணமுள்ள மோதகத்தை வைத்திருப்பவர். தாமே பூர்ணவஸ்து என்று காட்டத்தான் பானை வயிற்றோடு இருக்கிறார். நல்ல நிறைவைக் காட்டுவது அது. அண்டாண்டங்கள் அதற்குள்ளே இருப்பதால் அதுவும் அண்ட ரூபத்தில் உருண்டையாயிருக்கிறது.

மோதகத்தில் தித்திப்புப் பூர்ணத்தை மாவு மூடியிருக்கிறது. மோதகம் என்றால் ஆனந்தம். ஆனந்தம் தருவது விக்நேச்வரரே, அப்படிப்பட்ட ஒரு மோதகம்தான் ஆனந்தமாயிருப்பவர். அன்பு என்ற தித்திப்பான வஸ்துவை பிரேமையை மதுரம் என்று சொல்வது வழக்கம். அப்படிப்பட்ட மதுரமான பிரேமையை மற்றவர்களுக்கும் வழங்கி ஆனந்தமூட்டும் மோதகம் அவர்.

தொப்பையும் தொந்தியுமாக உள்ள ஒருத்தரைப் பார்த்தாலே நமக்கு ஒரு புஷ்டி, சந்துஷ்டி உண்டாகிறது. எத்தனையோ தினுசுக் கஷ்டங்களில் மாட்டிக் கொண்டு ஜனங்கள் திண்டாடுகிறதுகளே, பார்த்த மாத்திரத்தில் ஒரு வேடிக்கை விநோதமாக அவர்கள் சிரித்து மகிழும்படி நாம் இருப்போம் என்று பிள்ளையார் லம்போதரராக இருக்கிறார்.

அதிலும் குழந்தைகளுக்குத் தான் மகா சந்தோஷம், தொப்பை கணபதியைப் பார்ப்பதில். அதற்கேற்றாற்போல் புரந்தர தாசர் சங்கீதத்தில் பால பாடம் ஆரம்பிக்கும்போது பிள்ளையார் கீதத்தை ‘லம்போதர லகுமிகரா’ என்றே ஆரம்பித்திருக்கிறார். ‘லகுமிகரா’ என்றால் ‘லக்ஷ்மிகரா', செளபாக்கியங்களை உண்டாக்குபவர்.

கஜகர்ணகர்

கஜகர்ணகர் அப்படியென்றால் யானைக் காது உள்ளவர். கஜமுகர் என்று முகம் முழுவதையும் சொல்லிவிட்டால் போதாது. அவருடைய காது, யானைக் காதுதான் என்று பிரத்யேகமாகச் சொல்ல வேண்டும் என்கிறார்போல் இப்படிப் பெயர்.

யானைக் காதிலே அப்படி என்ன விசேஷம்? மற்ற சுவாமிக்கெல்லாம் காதைச் சுற்றிப் பெரிசாக ஒரு கால் வட்டம் மாதிரிப் போட்டுத் தோளோடு சேர்த்தே விக்ரகங்கள் பண்ணியிருக்கும். இந்த வட்டப் பிரபைக்கு உள்ளேயும், கிரீடத்துக்குக் கீழேயும் அந்த சுவாமியின் காது எங்கே இருக்கிறது என்று நாம் தேடிக் கண்டுபிடிக்கும்படியே இருக்கும். அநேகமாக, பெரிசாகத் தொங்கும் குண்டலத்தை வைத்துத்தான் காதைத் தெரிந்து கொள்ள முடியும். விக்நேச்வரர் ஒருத்தர்தான் இதற்கு விலக்கு. அவருடைய யானைக் காது அவருடைய பெரிய முக மண்டலத்துக்கு சம அளவாக இரண்டு பக்கமும் விரித்து விசாலமாக பிரகாசிக்கிறது.

நாம் பண்ணும் பிரார்த்தனையெல்லாம், நம்முடைய முறையீட்டையெல்லாம் கேட்க வேண்டியது சுவாமியின் காதுதானே? அந்தக் காது தெரிந்தும் தெரியாமலும் இருந்தால் என்னவோபோல்தானே இருக்கிறது? கஜகர்ணகராக விக்நேச்வரர்தான் தன்னுடைய பெரிய காதை நன்றாக விரித்துக்கொண்டு மற்ற தெய்வங்களுடையதைப் போல் மண்டைப் பக்கமாக ஒட்டிக் கொள்கிற மாதிரி இல்லாமல் முன் பக்கமாக விரித்துக்கொண்டு, நம் பிரார்த்தனைகளை நன்றாகக் கேட்டுக் கொள்கிறார் என்ற உற்சாகத்தை நமக்குக் கொடுக்கிறார்.

யானைதான் அநாயாசமாக, ரொம்ப இயற்கையாக எப்பப் பார்த்தாலும் காதை ஆட்டிக் கொண்டே இருப்பது. கஜாஸ்பாலம் (கஜ ஆஸ்பாலம்) கஜதாளம் என்றே அதற்குப் பெயர் கொடுத்து வைத்திருக்கிறது.

மனிதர்கள் யானை மாதிரிக் காதை ஆட்டுவது சிரம சாத்தியமான ஒரு பெரிய வித்தை. அதைத்தான் கஜகர்ணம் போட்டாலும் நடக்காது என்று சொல்கிறோம். கஜகர்ணம் என்பதை கஜகரணம் என்று நினைத்துக்கொண்டு யானை மாதிரி குட்டிக் கரணம் போட்டாலும் நடக்காததாக்கும் என்று அர்த்தம் பண்ணிக் கொள்கிறார்கள். அது சரியில்லை. யானை மாதிரி காதை ஆட்டுகிற வித்தைத்தான் கஜகர்ணம். நமக்கு ரொம்ப சிரமமாயிருப்பதை விக்நேச்வரர் விளையாட்டாகப் பண்ணுவதை கஜகர்ணர் என்ற பெயர் காட்டுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x