Last Updated : 10 Sep, 2015 11:29 AM

 

Published : 10 Sep 2015 11:29 AM
Last Updated : 10 Sep 2015 11:29 AM

இறைநேசர்களின் நினைவிடங்கள்: புதுக்கோட்டை காட்டுபாவா நாயகர்

காட்டுபாவா அம்மானை, காட்டுபாவா சாகிபு கும்மிப் பாட்டு, காட்டுபாவா சாகிப் காரணீகம் முதலான இலக்கியங்கள் போற்றும் இறைநேசர் பாவா பக்ருதீன். புதுக்கோட்டையிலிருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்திலுள்ள காட்டு பாவா பள்ளிவாசலில்தான் அவர் அடக்கமாகியுள்ளார்.

பதினேழாம் நுாற்றாண்டில் ஆன்மிகச் சுடர் பரப்பிய காட்டு பாவா நாகூரில் பிறந்து வளர்ந்தவர். இவருடைய தந்தை நாகூர் ஷாகுல் ஹமீது நாயகரின் வளர்ப்பு மைந்தர் சையது முகம்மது யூசுப். பாவா பக்ருதீன் கி.பி 1564-65-ல் பிறந்ததாகக் கூறப்படுகிறது. மூத்த பிள்ளையான பாவாவின் தம்பி, தங்கையர் ஏழு பேர்.

பாவா பக்ருதீன் 28 வயதினராக இருந்தபோது திருமணம் செய்துவைக்க பெறறோர் முடிவு செய்தனர். அதன்படி மேலைநாகூர் கப்பல் வணிகர் பகாவுதீன் சுகர்வர்த்தியின் புதல்வியை மணந்து கொண்டார். தந்தை சையது யூசுப் 94 வயதில் ஹிஜ்ரி 1032-ஆம் ஆண்டில் காலமானார்.

புனிதப் பயணமும் இறைஞானமும்

இருபது ஆண்டுகளுக்கு மேல் இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்த பாவா பக்ருதீன், ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்தபோது ஒரு திருப்பம் நிகழ்ந்தது. ஆன்மிக நாட்டம் அதிகரித்தது. ஹஜ் பயணம் மேற்கொண்டார். அவருக்கு இறைஞானம் மேலோங்கியது.

நாகூருக்குத் திரும்பிவந்த சிறிது காலத்தில் ஞானத் திருப்பணியில் முழுமையாக அர்ப்பணித்துக்கொள்ள பாவா முடிவு செய்தார். இல்லற வாழ்க்கை போதும் என்ற தமது முடிவை உற்றார் உறவினர்களிடம் தெரிவித்துவிட்டு நாகூரிலிருந்து புறப்பட்டு ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கினார்.

பாவாவைத் தரிசித்த சங்குத்தேவன்

தஞ்சாவூர், திருச்சி வழிப் பயணத்தில் பல இடங்களில் தங்கி, தியானத்தில் ஈடுபட்டார். அவரைப் பார்த்த மக்கள் அணுகிவந்து நல்லாசியைப் பெற்றனர். திருச்சிக்கு வந்துசேர்ந்த பாவா, நத்தர் மகானின் தர்காவில் சில நாள் தங்கியிருந்தார். திருநெல்வேலி,தென்காசி, தக்கலை, ராமேஸ்வரம் சென்று இறைநேசர்களை தரிசித்தார். மீண்டும் புதுக்கோட்டை திரும்பினார்.

இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி பவானி சங்குத்தேவன் குறித்த ஒரு பாடலில் “சிந்தைதனில் பாவாவைத் துதித்து சென்றான் பவானி சங்குத்தேவன்” என்ற குறிப்பு வருகிறது. நாகூர் தர்கா வித்வான் ஆரிபு நாவலரின் உரைநடை நுாலான ‘காட்டுபாவா சாகிபு வலி காரண சரித்திரம்’ பாவாவின் வாழ்க்கை வரலாற்றையும்,அற்புதச் செயல்களையும் விவரிக்கிறது.

காட்டுபாவா நிகழ்த்திய அற்புதங்கள்

புதுக்கோட்டையில் அடக்கமாகியுள்ள மகான் பருலுமியான் தர்காவில் தரிசனம் செய்துவிட்டு திருமயத்தை நோக்கி காட்டுபாவா ஒருமுறை கிளம்பினார். அது ஒரு காட்டுப்பாதை. வழிப்பறிக் கள்ளர்கள் நடமாடும் இடம் என்ற அச்சம் இருந்தது. அதைப் பொருட்படுத்தாமல் காட்டுபாவா சென்று கொண்டிருந்தார்.

அந்தக் காட்டுப்பகுதியில் ஆறு பெண்களும் இரண்டு குழந்தைகளும் வழிதெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். புதுக்கோட்டை அரசர் தொண்டைமான் பிராமணக் குடும்ப மாதர்களுக்கு வழங்கும் புரட்டாசி தானத்தைப் பெற்று வந்தவர்கள் அவர்கள். அரிசி, அம்மன் காசு ஆகியவற்றை அவர்கள் கையில் வைத்திருந்தனர்.

காட்டுபாவா அங்கு வருவதைப் பார்த்த பெண்கள் மனநிம்மதியுடன் அருகில் வந்து மகானின் ஆசியைப் பெற்றனர். தங்கள் ஊரான வயலுாருக்குச் செல்ல வழி தெரியாமல் தவிப்பதாகக் கூறி உதவியை நாடினார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு துணைபுரிய முன்வந்தார் பாவா.

பாதுகாப்பாகச் சென்றடையலாம் என்ற நம்பிக்கையுடன் காட்டுவழியில் பெண்கள் பின்தொடர்ந்தார்கள். ஆனால், எதிர்பாராத அதிர்ச்சி. வழிப்பறிக்கொள்ளைக்காரர்கள் சூழ்ந்துகொண்டார்கள். மொத்தம் 14 கள்வர்கள். பெண்களின் உடமைகளைக் கொள்ளையடிக்க முடிவுசெய்து நெருங்கி வந்தபோது பாவா எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அவர்கள் தாக்குதலைத் தொடங்கினார்கள். காட்டுபாவாவும் எதிர்தாக்குதலைத் தொடுத்தார். ஏழு கள்வர்கள் மாண்டார்கள். உயிர் தப்பிய மற்ற ஏழு பேரும் புதர்களில் பதுங்கிக்கொண்டு அம்புகளைப் பாய்ச்சினார்கள்.

ஒருவன் வீசிய அம்பு காட்டுபாவா மீது பாய்ந்ததால் படுகாயத்துடன் சாய்ந்துவிட்டார். அவருடன் வந்த பெண்கள் கண்ணீர்விட்டுக் கதறி அழுதார்கள். முதியவர் இனி எழுந்திருக்க வாய்ப்பில்லை என்ற துணிவில் கள்வர்கள் அந்த மாதர்களைத் துன்புறுத்தி அவர்களின் உடமைகளையும், அணிந்திருந்த ஆபரணங்களையும் பறித்துக்கொண்டனர்

பாவாவுக்கு இந்த நிலை ஏற்பட்டுவிட்டதே என்ற துயரத்தைத் தாங்க முடியாமல் பெண்கள் அழுது புலம்பினார்கள். பொருட்களைப் பறித்த அந்த ஏழு கள்வர்களின் கண்பார்வை திடீரென்று பறிபோனது. சக்திமிக்க மகானைத் தாக்கிய குற்றத்தை மன்னித்துத் தங்களுக்குப் பரிகாரம் வழங்கும்படி முறையிட்டார்கள்.

உதவி நாடிவந்த பெண்களைக் காப்பாற்ற உயிரை இழக்கும் நிலையில் இருந்த காட்டுபாவா ஒரு கள்வனுக்குமட்டும் பார்வை கிடைக்கச் செய்தார். அவன் உடனடியாக அந்தப் பெண்களையும், குழந்தைகளையும் அவர்களின் ஊரில் சேர்த்துவிட்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டார். அந்தக் கடமையை அவன் முடித்துவிட்டுத் திரும்பியதும் மற்ற ஆறு பேருக்கும் கண் பார்வை அளிக்க உறுதி தெரிவித்தார்.

பாவாவின் கட்டளைக்குப் பணிந்து கடமையைச் செய்து முடித்தான் கள்வன். அவன் திரும்பி வந்ததும் திருப்பம் ஏற்பட்டது. மற்ற கள்வர்களுக்கும் கண் பார்வையைத் தந்து மன்னித்துவிட்டு, தமது வாழ்க்கையை அவ்விடத்திலேயே முடித்துக் கொண்டார் பாவா

திருமயம் ஊர் மக்களுக்கு பாவாவின் மறைவுச் செய்தி எட்டியது. அவர்கள் பாவாவின் நல்லுடலை பள்ளி நகரில் அடக்கம் செய்தனர். காட்டுபாவாவின் மகத்துவத்தை நன்கறிந்த புதுக்கோட்டை ஆட்சியாளர்கள் நன்கொடையாக நிலம் வழங்கினர். அந்த இடத்தில்தான் தர்கா கட்டப்பட்டது. பள்ளிவாசல் நகரம் என்ற பெயரும் ஏற்பட்டது.

காட்டுபாவா தர்காவுக்கு சமயப் பாகுபாடு கருதாமல் மக்கள் வருகையளித்து தரிசித்துச் செல்கிறார்கள். பாவாவின் நினைவாக ஒவ்வொரு ஆண்டிலும் ரபியுல் ஆகிர் மாதம் கந்துாரி, சந்தனக்கூடு விழா நடத்தப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x