Published : 01 Aug 2020 05:47 PM
Last Updated : 01 Aug 2020 05:47 PM
ஆடி மாதம் அம்பாளுக்கு உகந்த மாதம். ஆடி மாதம் என்றதும் வேப்பிலையும், கேழ்வரகு கூழும் நினைவுக்கு வரும். இந்த மாதத்தில் வீட்டு வாசலில் வேப்பிலை செருகி வைப்பது ரொம்பவே விசேஷம். அதேபோல், செவ்வாய்க்கிழமைகளில், பெண்கள் எண்ணெய் தேய்த்துக் குளித்து, அம்மனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், பெண்களின் சகல கஷ்டங்களும் நீங்கி விடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஆடிச் செவ்வாயில் விரதமிருந்து அம்பிகையைத் தரிசித்தால், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும். கணவரின் தீராத நோயும் தீரும். கன்னியருக்கான திருமணத் தடை அகலும். மனதுக்கு ஏற்ற மணவாழ்க்கை அமையும் என்பது நிச்சயம்!
அதேபோல், ஆடி வெள்ளிக் கிழமை நாளில், விரதமிருந்து அம்மனுக்கு குங்குமார்ச்சனை செய்து வழிபடுங்கள். பெண்களின் சகல தோஷங்களும் விலகும். சந்தோஷம் மட்டுமே நிறைந்திருக்கும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள். இல்லத்தில் சுபிட்சம் குடிகொள்ளும்!
ஆடி மாதத்தின் உன்னதங்களில், அம்மனுக்கு கூழ் வார்க்கும் வைபவமும் ஒன்று.
ஆடி மாதத்தில், அம்மன் கோயில்களில் கூழ் வார்த்து பக்தர்களுக்கு விநியோகம் செய்வார்கள். கோடை காலம் முடிந்து வெம்மையின் தாக்கம் மெள்ள மெள்ளக் குறையும் இந்த ஆடி மாதத்தில், குளிரக் குளிரக் கூழ் குடிப்பது தேகத்துக்கு நல்லது. உடற்சூடு தணிக்கவல்லது. அதனால்தான் ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் வார்க்கும் விழா கோலாகலமாக நடைபெறுகிறது. குளிரக் குளிர அம்மனுக்கு கூழ் படையலிட்டால், வெம்மை முதலான நோய்களில் இருந்து காத்தருள்வாள் அம்பிகை!
அம்மன் கோயில்களில் மஞ்சள், குங்குமத்துடன் கண்ணாடி வளையல்களை பெண்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். இந்த நாட்களில் ஒரு சில குடும்பங்களில் சகோதரர்கள், தங்கள் சகோதரிகளை விருந்துக்கு அழைத்து உபசரிப்பார்கள்.
அவர்களை அம்மனாகவே கருதி மஞ்சள், குங்குமம், வளையல் மற்றும் புடவைகளையும் அளித்து மகிழ்வார்கள். ஆடி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் தங்களது வீடுகளை சுத்தம் செய்து, மறக்காமல் உங்கள் குலதெய்வம் மற்றும் அம்மனை நினைத்து பிரார்த்தித்து, வழிபாடு செய்வது இரட்டிப்புப் பலன்களைத் தந்தருளும். அதிலும் ஆடிப்பெருக்கு நாளில், குலதெய்வ வழிபாடு செய்வதும் காவிரி முதலான நீர்நிலைகளை மனதில் இருத்தி வேண்டிக்கொள்வதும் விசேஷம் வாய்ந்தது.
பின்னர், தங்கள் நேர்த்திக்கடன் நிறைவேறும் பொருட்டு, அப்பகுதி மக்களுக்கு கேழ்வரகு கூழ் வழங்கி அம்மனைப் பிரார்த்தனை செய்வார்கள்.
ஆடி மாதத்தில், அம்மனை நினைத்து கூழ் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். உங்களால் முடிந்த அளவுக்கு கூழ் விநியோகம் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையையே குளிரப்பண்ணுவாள் அம்பிகை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT