Published : 24 Jul 2020 09:01 PM
Last Updated : 24 Jul 2020 09:01 PM
சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னியாகத் திகழ்பவள் வராஹி அம்மன். பஞ்சமித் தாய் இவள். அதாவது வாழ்வின் பஞ்சங்களைத் துரத்துபவள். ஒவ்வொரு வளர்பிறை பஞ்சமி திதியும் வராஹி வழிபாட்டுக்கு உரிய நாள்.
அதிலும் ஆடி மாத வளர்பிறை பஞ்சமி இன்னும் ரொம்பவே விசேஷம். அம்பிகைக்கு உகந்த, சக்திக்கு உகந்த ஆடி வளர்பிறை பஞ்சமியில், வராஹி தேவியை வழிபடுவோம். நாளைய தினம் ஜூலை 25ம் தேதி பஞ்சமி.
அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள்தான் சப்த கன்னியர் என்கிறது புராணம். பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவளும் மகாசக்தி மிக்கவளாகவும் திகழ்பவளே வராஹியம்மன்.
மனித உடலும், பன்றி முகமும் கொண்டவள். வராகம் என்றால் பன்றி. கோபத்தின் உச்சம் தொடுபவள் இவள். அதேசமயம், தன்னை நாடி வந்தவர்களுக்கு பாசக்காரியும் கூட!
அன்பிலும், கருணையிலும், ஆதரித்து அருளுவதிலும் மழைக்கு நிகரானவள் என்று போற்றுகிறது புராணம். இந்தியாவில் வராஹி அம்மனுக்கு இரு இடங்களில் தான் ஆலயம் உள்ளதாக அறிய முடிகிறது. .
காசியம்பதி க்ஷேத்திரத்தில், வாராஹியின் கோயில் அமைந்திருக்கிறது. தஞ்சை பெரிய கோயிலில் வராஹி சந்நிதி அமைந்துள்ளது. இங்கு உள்ள வராஹி அம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்தவள். ஆனால், பெரியகோயிலில் ஆரம்ப காலத்தில் இவளுக்கு சந்நிதி இல்லை.
நம் எதிரிகளையும் எதிர்ப்புகளையும் வராஹி அம்மனிடம் முறையிட்டு வேண்டிக்கொண்டால் போதும்... எதிரிகளை விரட்டிவிடுவாள். எதிர்ப்புகளை பொடிப்பொடியாக்கிவிடுவாள். ஆனானப்பட்ட மகாசக்தியின் போர்ப் படைத்தளபதி அல்லவா வராஹி தேவி.
பஞ்சமியில் வாராஹியை விளக்கேற்றி வழிபடுங்கள். நம் பஞ்சத்தையெல்லாம் போக்குவாள். வளர்பிறை நாளில் அவளை மனதார வேண்டுங்கள். நம் வாழ்வை உயரச் செய்வாள்.
எதிர்ப்புகளை அழித்து, நம் வாழ்வில் மாற்றங்களையும் ஏற்றங்களையும் தந்தருள்வாள் வாராஹியம்மன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT