Published : 24 Jul 2020 06:35 PM
Last Updated : 24 Jul 2020 06:35 PM
நாளைய தினம் ஜூலை 25ம் தேதி கருட பஞ்சமி. இந்தநாளில் கருட பகவானை வழிபட்டுப் பிரார்த்தனை செய்தால், சகல தோஷங்களும் விலகும். மாங்கல்ய பலம் பெருகும். சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள். தொழில், உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
நாகத்துக்கும் கருடனுக்கும் வழிபாட்டில் முக்கியத்துவம் உண்டு. இறைத்திருவுருவங்களுடன் தொடர்பு கொண்டதாகத் திகழும் நாகத்துக்கும் கருடருக்கும் சிறப்பு வழிபாடுகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆடி மாதத்தின் வளர்பிறையில், சதுர்த்தி நாள் நாக சதுர்த்தி என்று கொண்டாடப்படுகிறது. வழிபடப்படுகிறது. அதேபோல், சதுர்த்திக்கு அடுத்தநாளான பஞ்சமி, கருடனை வணங்குவதற்கு உரிய நாளாக, போற்றுவதற்கு உரிய நாளாக, பிரார்த்தனை செய்து கொள்வதற்கான நாளாக சொல்லப்பட்டுள்ளது. இதை கருட பஞ்சமி என்கிறார்கள்.
பறவைகளின் தலையாயப் பறவையாக இருக்கும் பறவையை பட்சிகளின் ராஜா என்பார்கள். பட்சி என்றால் பறவை என்று அர்த்தம். அப்படி, பறவைகளின் தலைவனாகத் திகழ்வது கருட பட்சி. கருடனே பட்சிகளின் ராஜா. அதனால்தான் கருட பட்சியை வணங்குகிறார்கள் பக்தர்கள்.
வைஷ்ண ஆலயங்களில், விழாக் காலங்களில், பெருமாள் கருட வாகனத்தில் அழகு ததும்ப வருவதை தரிசித்திருப்போம். மகாவிஷ்ணுவின் திருவடியைச் சரணடைவது ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு பக்தி செலுத்தச் சொல்கிறது விஷ்ணு பாகவதம். அப்படி பெருமாளின் திருவடியைச் சரணடைந்த கருடனை, கருடாழ்வார் என்றும் பெரிய திருவடி என்றும் போற்றுகிறோம். பெரிய திருவடியான கருடாழ்வாரை வணங்கும் நன்னாளாக அமைந்ததுதான் ‘கருட பஞ்சமி’.
நாளைய தினம் ஜூலை 25ம் தேதி கருட பஞ்சமி. கருடாழ்வாருக்கு உரிய நாள்.
ஆடி மாதம் என்பதே பெண்கள் வழிபடுவதற்கு உரிய மாதம். ஆடிப்பூரம், ஆடி வெள்ளி, நாக சதுர்த்தி என்பவையெல்லாம் பெண்கள் அவசியம் வழிபடவேண்டிய நாட்கள். பண்டிகைகள். விரதங்கள். இதேபோல், கருடபஞ்சமி என்பதும் பெண்கள் அவசியம் வணங்கி வழிபடவேண்டிய நாள். யார் வேண்டுமானாலும் வழிபடலாம் என்றாலும் பெண்கள் அவசியம் வழிபடவேண்டும் என்கிறது சாஸ்திரம்.
நாளைய கருட பஞ்சமி தின நாளில், காலையில் எழுந்து குளித்துவிட்டு, வீட்டு வாசலிலும் பூஜை மாடத்திலும் கோலமிட்டுக்கொள்ளுங்கள். வீட்டில், கருடாழ்வார் படமோ சிறிய விக்கிரகமோ இருப்பதற்கு வாய்ப்பு அரிதுதான். இருந்தால் அதை மணைப்பலகையில் கோலமிட்டு வைத்துக்கொள்ளலாம்.
அப்படி இல்லையெனில், உங்களுக்கு விருப்பமான பெருமாள் படத்தை வைத்துக்கொள்ளுங்கள். பெருமாளின் திருநாமங்களைச் சொல்லி வழிபடுங்கள். துளசிமாலை சார்த்துங்கள். சிறிதளவேனும் துளசியைக் கொண்டு பெருமாளுக்குச் சார்த்தினாலும் போதுமானது. விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்வது விசேஷம். கருடாழ்வாரையும் பெருமாளையும் மனதார வழிபடுங்கள்.
அப்போது,
கருட காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபிப்பது மகா புண்ணியம்.
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸொர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருடஹ் ப்ரசோதயாத்
என்று ஆத்மார்த்தமாக சொல்லி வழிபடுங்கள்.
பின்னர், பூஜையை நிறைவு செய்யும்விதமாக புளியோதரை நைவேத்தியம் செய்யுங்கள். அடுத்து, வாசலுக்கு வந்து, வானை நோக்கி கருடாழ்வார் பறப்பதாக நினைத்து, பாவனையாக, மூன்று முறை கைக்கூப்பி வணங்குங்கள். அதன் பின்னர், தீப தூப ஆராதனைகள் செய்து, பெருமாளுக்கு நமஸ்காரம் செய்யுங்கள். துளசி தீர்த்தம் பருகுங்கள்.
பெரிய திருவடி கருடாழ்வார், மாங்கல்ய பலம் தந்தருள்வார். மாங்கல்ய தோஷம் நீக்குவார். கணவரின் நோய் தீர்த்து ஆரோக்கியம் அருளுவார். வீட்டில் மங்கல காரியங்கள் நிகழச் செய்வார். கடன் முதலான தரித்திர நிலைகளில் இருந்து சுபிட்ச நிலையை உண்டு பண்ணுவார். வாகன விபத்துகள் நேராமல் தடுத்தருள்வார் கருடாழ்வார். மனதில் தேவையற்ற பயமெல்லாம் விலகிவிடும். மனோதைரியம் தருவார்.
கருட பஞ்சமி நாளில், கருடாழ்வாரைப் பிரார்த்தனை செய்யுங்கள். கவலையெல்லாம் பறந்தோடச் செய்வார் பட்சி ராஜா. பாவங்களெல்லாம் விலகி புண்ணியங்கள் பெருகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT