Published : 23 Jul 2020 05:00 PM
Last Updated : 23 Jul 2020 05:00 PM
அம்பிகையைக் கொண்டாடும் மாதம் ஆடி என்றும் அம்பாளுக்கு உகந்த மாதம் ஆடி மாதம் என்றும் வணங்குகிறோம். வழிபடுகிறோம். சக்தியைக் கொண்டாடும் மாதம் இது. உலக மக்களை உய்விப்பதற்காகவும் உலகைக் காப்பதற்காகவும் சக்தியான அம்பிகை, உமையவள், பராசக்தி, அம்பிகையாக அவதரித்த நாள் என்று போற்றுகிறது புராணம்.
மகாசக்தியானது, இந்தப் பிரபஞ்சத்தில் வியாபிக்கத் தொடங்கியது ஆடி மாதம் என்பதால்தான், சித்தர்களும் முனிவர்களும் ஞானிகளும் இந்த மாதத்தில் தவமிருக்கத் தொடங்குவார்கள் என்றும் புராணங்கள் விளக்குகின்றன.
காத்தருளும் அம்பிகையைக் கொண்டாடும் இந்த அற்புதமான ஆடி மாதத்தில், ஆடிப்பூர நன்னாளில், அம்பாளுக்கு வீட்டிலிருந்தே பல வழிபாடுகளை செய்யலாம். அம்பாள் ஆராதனையை குடும்பத்தில் உள்ள பெண்கள் எல்லோரும் சேர்ந்து செய்யலாம்.
வீட்டில் அம்பாள் படங்கள் இருந்தால், விக்கிரகம் இருந்தால், பூஜையறையைச் சுத்தமாக்கிவிட்டு, விக்கிரகத்துக்கு நீராலும் பாலாலும் அபிஷேகம் செய்யுங்கள். விக்கிரகம் இல்லையென்றாலும் பரவாயில்லை. அம்பாள் படம் இருந்தாலே போதும். எந்த அம்பாள் படமாக இருந்தாலும் அம்மன் படமாக இருந்தாலும் சரி... ஒரு மணைப்பலகையை நன்றாகக் கழுவி சுத்தம் செய்துவிட்டு, அதில் கோலமிடுங்கள். அதன் மீது அம்பாள் விக்கிரத்தை அல்லது படத்தை வையுங்கள். அம்பாளுக்கு சந்தனம் குங்குமமிடுங்கள்.
அம்பாளுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. எனவே அரளிப்பூக்களாலும் ரோஜாப்பூக்களாலும் தாமரை மலர்களாலும் அம்பிகையை அலங்கரியுங்கள்.
அம்பாளுக்கு, ஆடிப்பூரம் நாளில், அனைத்து சிவாலயங்களிலும் வளைகாப்பு திருவிழா விமரிசையாக நடந்தேறும். எனவே அம்பாளுக்கு வளையல் சார்த்துங்கள். முடிந்தால், வளையல் மாலை கோர்த்து அணிவியுங்கள்.
அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள். அம்பாள் துதியைச் சொல்லி பாராயணம் செய்யுங்கள். சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம் என ஏதேனும் இனிப்பை நைவேத்தியமாகப் படைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.
பின்னர், வளையல் பிரசாதத்தை அக்கம்பக்கத்தில் உள்ள சுமங்கலிகளுக்கும் கன்யா பெண்களுக்கும் வழங்குங்கள். வளையலுடன் மஞ்சள், குங்குமம், ஜாக்கெட் பிட், வெற்றிலை பாக்கு என மங்கலப் பொருட்கள் வழங்குவது மாங்கல்ய பலத்தை வழங்கியருளுவாள் அம்பிகை. தடைப்பட்ட கன்னியருக்கு விரைவிலேயே கல்யாண வரம் தந்திடுவாள். வீட்டில் தரித்திர நிலையை மாற்றி, சுபிட்சத்தைத் தந்திடுவாள்.
நாளைய தினம் 24.7.2020 வெள்ளிக்கிழமை ஆடிப்பூரம். அம்பாளைக்கொண்டாடுவோம். பெண்களுக்கு வளையல் பிரசாதம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வழங்குவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT