Last Updated : 23 Jul, 2020 03:34 PM

 

Published : 23 Jul 2020 03:34 PM
Last Updated : 23 Jul 2020 03:34 PM

ஆடிப்பூரத்தில்... திருப்பாவை பாடுங்கள்; ஆண்டாளை வேண்டுங்கள்!  - மாங்கல்ய வரம் உண்டு; மாங்கல்ய பலம் தருவாள்! 

ஆடிப்பூர நன்னாளில், ஆண்டாளை வேண்டுவோம். திருப்பாவை பாடி ஆண்டாளைக் கொண்டாடுவோம்.

ஆடி மாதம் என்பது அம்பிகைக்கு உகந்த மாதம். எல்லா பெண் தெய்வங்களுக்கும் உரிய அற்புதமான மாதம். ஆடி மாதத்தின் எல்லா நாட்களும் சிறப்புக்குரியதுதான். ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி முதலான நாட்கள் விசேஷமானவை.

இதேபோல், மிக மிக முக்கியமான நாள்... ஆடிப்பூரம். ஆடி மாதத்தில் வருகிற பூர நட்சத்திர நாள். ஆடி மாதத்தின் பூர நட்சத்திர நாளில்தான் ஆண்டாள் அவதரித்தாள் என்கிறது புராணம். ஸ்ரீவில்லிபுத்தூர் எனும் திருத்தலத்தில், நந்தவனத்தில், பெரியாழ்வாரின் மகளாக அங்கே தோன்றினாள். பின்னர் பெரியாழ்வார் ஆண்டாள் என்று அன்புடன் அழைத்து வளர்த்தாள்.

குறிப்பிட்ட வயதை அடைந்ததும், அந்த ரங்கமன்னாரையே தன் கணவனாக பாவித்தாள். ‘உன்னைத் தவிர வேறு எவரையும் மணம் முடிக்கமாட்டேன்’ என்று உறுதிகொண்டாள். சுவாமிக்கு அணிவித்த மாலையை நாம் அணிந்துகொள்ளலாம். ஆனால், பகவானுக்காக பறித்துத் தொடுத்து கட்டிய மாலையை, தான் சூடிக்கொண்டாள். பிறகு அந்த மாலையை ரங்கமன்னாருக்கு அணிவிக்கச் செய்தாள். ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’எனும் பெயரும் பெற்றாள்.

ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் நன்னாள், வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலத்தில் இன்னும் கோலாகலமாக இந்த வைபவம் நடைபெறும். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலம் மட்டுமின்றி, அனைத்து வைணவ திருத்தலங்களிலும் ஆண்டாளுக்கு ஆடிப்பூர விழா நடத்தப்படுவது வழக்கம்.
இந்த முறை ஆடிப்பூர நன்னாளை வீட்டிலிருந்தபடியே கொண்டாடுவோம். நாளைய தினம்... ஆடிப்பூரம். ஆண்டாள் அவதரித்த அற்புதமான நாள். இந்த நாளில், வீட்டுப் பூஜையறைச் சுத்தம் செய்து, குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவரும் அமர்ந்து ஆண்டாளை வழிபடுங்கள்.

ஆடி மாதம் என்பதே பெண்கள் வணங்கி வழிபடுவதற்கு உரிய மாதம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இந்த மாதத்தில் வருகிற ஆடிப்பூர வைபவம், திருமணமாகாத பெண்கள் அவசியம் வழிபடக் கூடிய திருநாள். கல்யாணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள், நல்ல வரன் அமையாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறதே என்று வருந்துபவர்கள், நாளையதினம் (24.7.2020) வெள்ளிக்கிழமையில், ஆடிப்பூர நன்னாளில், வீட்டில் பூஜையறையில் அமர்ந்து, ஆண்டாளை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். ஆண்டாள் அருளிய திருப்பாவையைப் பாடி ஆராதனை செய்யுங்கள்.

பாயசம் நைவேத்தியம் செய்து, உங்கள் பிரார்த்தனையை ஆண்டாளிடம் சொல்லி வேண்டுங்கள். விரைவில் தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். மாங்கல்ய வரமும் தருவாள்; மாங்கல்ய பலமும் தந்தருள்வாள் ஆண்டாள்.

திருமணமான பெண்கள், திருமணம் நடந்திடாத பெண்கள் என அனைவரும் சேர்ந்து ஆடிப்பூர பூஜையைச் செய்யுங்கள். எல்லாத் தடைகளும் விலகும். மங்கல காரியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தேறும் என்பது ஐதீகம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x