Published : 22 Jul 2020 08:07 PM
Last Updated : 22 Jul 2020 08:07 PM
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது விராலிமலை திருத்தலம். திருச்சியில் இருந்து மதுரை செல்லும் வழியில் சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம். இந்தத் திருத்தலத்தின் நாயகன் முருகப்பெருமான்.
வள்ளி தெய்வானை சமேதராக, ஸ்ரீசண்முகநாத சுவாமியாக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். விராலி எனும் செடிகொடிகள் அதிகமிருந்ததால் இந்தப் பகுதிக்கு விராலி என்றும் மலையை விராலிமலை என்றும் தெரிவிக்கிறது புராணம். இன்றைக்கும் ஊர்ப்பெயர் விராலிமலை என்றே அழைக்கப்படுகிறது.
ஒருகாலத்தில், இந்த அடர்ந்த வனப்பகுதியில் புலியை விரட்டிக்கொண்டு, வேடன் ஒருவன் வந்தான். அந்தப் புலி, குரா மரத்துக்கு அருகில் மறைந்து போனது. அங்குதான் முருகப்பெருமான் அருளுகிறான் என்று ஊர்மக்கள் வணங்கி வந்தார்கள்.
விராலிமலைக் குமரனின் புகழ் அடுத்தடுத்த ஊர்களுக்கும் பரவியது. புதுக்கோட்டை பகுதியில் இருந்தும் காரைக்குடி, தேவகோட்டை முதலான பகுதியில் இருந்தும் இங்கே வந்து முருகப்பெருமானை வழிபடத் தொடங்கினார்கள்.
அருணகிரிநாதர், திருச்சிராப்பள்ளியில் உள்ள வயலூர் திருத்தலத்துக்கு வந்தார். இதுவும் முருகப்பெருமானின் திருத்தலம். அருணகிரிநாதர், வயலூர் முருகனை திருப்புகழ் பாடிவிட்டு புறப்பட்டார். அப்போது, ‘விராலிமலைக்கு வருக அருணகிரி’ என்று அசரீரி கேட்டது.
இதையடுத்து விராலிமலை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தவருக்கு வழி புலப்படவில்லை. அப்போது புலியைத் துரத்தி வந்த வேடன் விராலிமலைக்கு வழி சொன்னான். அதன்படி விராலிமலையை அடைந்தார் அருணகிரிநாதர். அதன் பின்னர்தான் வந்தது வேடனில்லை, முருகப்பெருமான் எனத் தெரிந்தது.
விராலிமலை முருகக் கடவுள் அஷ்டமாஸித்திகளையும் அருணகிரிநாதருக்கு அருளினார் என்கிறது ஸ்தல புராணம். இதில் மெய்சிலிர்த்த அருணகிரிநாதர், விராலிமுருகனைக் குறித்து, திருப்புகழ் பாடினார்.
சுமார் 200க்கும் அதிகமான படிகள் கொண்ட திருத்தலம் இது. மலையின் மீது, கருவறையில், சுமார் பத்தடி உயரத்தில் கம்பீரமான திருக்கோலத்துடன் காட்சி தரும் முருகப்பெருமானின் பேரழகை தரிசித்துக் கொண்டே இருக்கலாம்.
சூரம்ஹாரத் திருவிழாவானது, பத்துநாள் திருவிழாவாக விமரிசையாக நடைபெறும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை மாவட்ட மக்கள் பலரும் விராலிமலைக்கு வந்து வேண்டிச் செல்வார்கள்.
மேலும் இந்தப் பகுதி மக்கள், தங்கள் மனக்குறைகளை முருகப்பெருமானிடம் வந்து முறையிட்டுச் செல்வார்கள்.
விராலிமலை முருகனை கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்தும் அருணகிரி நாதரின் திருப்புகழைப் பாடியும் மனதார வேண்டிக்கொள்ளுங்கள். நினைத்ததையெல்லாம் நடத்தித் தருவார் விராலிமலை வேலவன். வேதனைகளையெல்லாம் தீர்த்தருள்வான் கந்தகுமாரன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT