Last Updated : 20 Jul, 2020 07:32 PM

 

Published : 20 Jul 2020 07:32 PM
Last Updated : 20 Jul 2020 07:32 PM

ஆடிச் செவ்வாயில் ராகுகால பூஜை; துக்கமெல்லாம் தீர்ப்பாள் துர்காதேவி

ஆடிச்செவ்வாயில் ராகுகால பூஜை செய்யுங்கள். துர்காதேவியை நினைத்து அம்பாள் துதி பாராயணம் செய்யுங்கள். நம் துக்கமெல்லாம் தீர்த்தருள்வாள் துர்காதேவி.
பொதுவாகவே, செவ்வாய்க்கிழமை என்பது நல்ல நல்ல அதிர்வுகள், சக்தியின் வலிமை மொத்தமும் வியாபித்து தீய சக்திகளை அழித்தொழிக்கும் அற்புதமான நாள். இந்தநாளில் காலையும் மாலையும் விளக்கேற்றி அம்பாளை வணங்கி வழிபடவேண்டும்.

காலையில் விளக்கேற்றி அம்பாள் ஆராதனை செய்யும்போது சர்க்கரைப் பொங்கல் முதலான இனிப்பை நைவேத்தியம் செய்யவேண்டும். அப்போது அம்பாள் ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடலாம். லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நல்லது. கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லலாம். அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வழிபடலாம்.

காலையில் இனிப்பு நைவேத்தியமும் மாலையில் விளக்கேற்றி வழிபடும் போது, காய்ச்சிய பாலும் சர்க்கரையும் கலந்து நைவேத்தியமும் செய்யலாம். ஆடி மாதம் முழுவதுமே ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் விளக்கேற்ற வேண்டும் என்றும் இரண்டு வேளையும் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

செவ்வாய்க்கிழமையில், இன்னொரு விஷயம்... துர்கை வழிபாடு. காலையும் மாலையும் விளக்கேற்றுகிற அதே தருணத்தில், மாலை 3 முதல் 4.30 வரையிலான ராகுகால வேளையில், துர்கைக்கு விளக்கேற்றி, துர்கா ஸ்துதிகளைச்சொல்லி ஒரு பத்து நிமிடமேனும் வழிபட்டு நமஸ்கரிக்கலாம்.

ஆக, ஆடிச் செவ்வாய்க்கிழமைகளில், காலை, மாலை மற்றும் ராகுகாலவேளையில் துர்கை என மூன்று வேளையும் விளக்கேற்றி வழிபட்டால், துக்கமெல்லாம் தீர்த்து வைப்பாள் தேவி என்று சொல்லி சிலாகிக்கிறார்கள் சாக்த வழிபாடு செய்யும் உபாசகர்கள்.

ராகுகாலவேளையில், அகல் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. ராகுகாலத்தில், துர்கைக்கு விளக்கேற்றி, துர்கையின் ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டே, அம்பாள் படத்துக்கு குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுவது இன்னும் மகத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் பக்தர்கள்.

ஆடிச் செவ்வாய்க்கிழமையில், ராகுகாலவேளையில், துர்காதேவியை மனதார வழிபடுவோம். நம் துக்கத்தையும் கஷ்டத்தையும் போக்குவாள். தடைகளையெல்லாம் தகர்த்து அருளுவாள் தேவி.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x