Published : 20 Jul 2020 06:09 PM
Last Updated : 20 Jul 2020 06:09 PM
ஆடி மாதத்தின் செவ்வாய்க்கிழமை நல்ல அதிர்வுகள் கொண்ட நாளாகப் போற்றப்படுகிறது. ஆடி மாதம் முழுவதுமே சக்தி வியாபித்திருக்கும் மாதம் என்கிறது புராணம். சக்தியின் தாக்கம் அதிகரிக்கக்கூடிய மாதம் இது. இதனால், நல்ல நல்ல அதிர்வுகள், நம்மைச் சூழ்ந்து அரணெனக் காத்தருளும் என்கிறார்கள் சக்தி உபாசகர்கள். ஆடி மாதத்தில் அம்மனைத் துதித்து வழிபட ஏராளமான வழிபாடுகள் இருக்கின்றன. நம்மால் முடிந்த பூஜைகளைச் செய்து, புண்ணியங்களையும் அளப்பரிய ஆற்றலையும் பெறுவோம்.
ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை நாளைய தினம் (21.7.2020). இந்த செவ்வாய்க்கிழமையில், நாகபூஜை செய்வது ரொம்பவே நற்பலன்களை வழங்கக்கூடியது. சர்ப்ப தோஷம் அதாவது நாக தோஷம் ஏற்பட்டு ஒரு சிலருக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போகிற சூழல் இருக்கும். இன்னும் சிலர் சர்ப்ப தோஷத்தில், எடுத்த காரியத்திலெல்லம் தடங்கல்களையே சந்தித்துக் கொண்டிருப்பார்கள்.
இன்னும் சிலர், சர்ப்ப தோஷத்தால், அடிக்கடி கவலையில் மூழ்குவார்கள். திடீர்திடீரென நோய்த் தாக்கத்துக்கு ஆளாவார்கள். இதனால், உயிர் பயம் இல்லாத போதும், உடலையும் மனதையும் ஏதோவொன்று வாட்டிக்கொண்டே இருக்கும்.
இந்த நிலையில் இருந்து விடுபடுவதற்கும் இந்த நாக தோஷம் நீங்குவதற்கான அருமையான நாள்தான் ஆடிச்செவ்வாய். அப்போது செய்யப்படுகிற பூஜைகளில் ஒன்றுதா நாகபூஜை.
இந்த பூஜையை எவர் வேண்டுமானாலும் செய்யலாம். ஆடிச்செவ்வாய் வழிபாட்டை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ‘காசுபணத்துக்கு குறைவில்லை. ஆனால் வீட்டில் நிம்மதியே இல்லை’ என்பவர்களும் ‘பணம் காசெல்லாம் இருந்தும் இன்னும் சொந்தவீடு அமையவில்லை’ என்று வருந்துபவர்களும் ‘எங்களுக்குப் பூர்வீகச் சொத்து இருக்கிறது. ஆனால் இன்னும் எங்கள் கைக்கு வராமல் வழக்கு நடந்துகொண்டே இழுக்கிறது’ என்று நொந்துபோகிறவர்களும் ‘ஒரு ’நல்ல வேலை கிடைக்கவில்லை, நாலுகாசு சம்பாதிக்கமுடியவில்லை. திருமணத்துக்குப் பெண் இருந்தும் கல்யாணம் செய்துவைக்கமுடியவில்லை’ என்று கண்ணீர் விடுபவர்களும் ஆடிச்செவ்வாய் பூஜையை ஆத்மார்த்தமாகச் செய்தால் போதும்... விரைவில் நினைத்ததெல்லாம் நடந்தேறும்.
மேலும், செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்களும் செவ்வாய் தோஷத்தில் இருப்பவர்களும் இந்த பூஜையைச் செய்யலாம். செவ்வாயின் ஆதிக்கத்தில் இருப்பவர்களும் பூஜை செய்வது சிறப்புக்கு உரியது.
செவ்வாய்க்கிழமை பிறக்காதவர்கள் கூட இந்த பூஜையைச் செய்யலாம். செவ்வாய் தோஷம் இல்லாதவர்கள் கூட பூஜை செய்யலாம். எவர் வேண்டுமானாலும் ஆடிச்செவ்வாய் பூஜையை மேற்கொள்ளலாம். வழிபடலாம்.
வீட்டில் உள்ள அம்பாள் படத்தை தூய்மையாக்கிக் கொள்ளவேண்டும். சிகப்பு நிறக் கயிறு அவசியம். அப்படி சிகப்புக் கயிறு கிடைக்காவிட்டால், வெள்ளை நிற நூலை எடுத்து, குங்குமத்தில் நீர் கலந்து கெட்டியாக, மை போல் ஆக்கிக் கொண்டு, சிறிது நேரம் ஊறவைத்தால், வெள்ளைக் கயிறு சிகப்புக்கயிறாகிவிடும்.
அம்பாளுக்கு உகந்த அரளி மற்றும் சிகப்பு நிறப்பூக்கள் கொண்டு அலங்கரிக்கவேண்டும். காய்ச்சிய பாலும் சர்க்கரையும் (நாட்டுச்சர்க்கரை இன்னும் விசேஷம்) நைவேத்தியம் செய்யவேண்டும். முன்னதாக, அம்பிகையின் காயத்ரீ சொல்லி வழிபடலாம். அம்பாள் துதியை பாராயணம் செய்யலாம். அம்பாள் குறித்த பாடல்களைப் பாடலாம். அபிராமி அந்தாதி படிக்கலாம். நமக்குத் தெரிந்த அம்பாள் போற்றியையெல்லாம் சொல்லி வழிபடலாம்.
பின்னர், தீப தூப ஆராதனை காட்டி, அம்பாளுக்கு நைவேத்தியம் செய்து நமஸ்கரித்து நம் மனதிலுள்ள வேண்டுதல்களை அவளிடம் சொல்லி முறையிடலாம். பூஜை முடிந்ததும் அம்பாளிடம் வைத்த சிகப்புக்கயிறு எனும் ரக்ஷையை எடுத்து கையில் கட்டிக்கொள்ளலாம். ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலுமாகக் கட்டிக்கொள்ளவேண்டும் என்கிற சக்தி வழிபாட்டு உபாசகர்கள்.
ஆடிச் செவ்வாய் என்றில்லாமல், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இந்த பூஜையைச் செய்யலாம். முடிந்த போதெல்லாம் செய்யலாம். இந்த பூஜையைச் செய்யச் செய்ய, நல்ல நல்ல அதிர்வுகள் நம் இல்லத்தில் சூழ்ந்திருப்பதை உணரமுடியும். தடங்கலாகி இருந்த நற்காரியங்கள் ஒவ்வொன்றாக நடந்தேறும்.
காலை அல்லது மாலையில் இந்த பூஜையை செய்யுங்கள். காலமெல்லாம் கஷ்டமோ நஷ்டமோ இல்லாத நிலையைத் தந்தருள்வாள் பராசக்தி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT