Published : 19 Jul 2020 09:28 PM
Last Updated : 19 Jul 2020 09:28 PM
ஆடி அமாவாசையில் முன்னோர் வழிபாட்டைச் செய்யுங்கள். ஆறு பேருக்கேனும் தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள். இதில் குளிர்ந்து போய் பித்ருக்கள் உங்களுக்கு அருளுவார்கள். நீங்கள் செய்த தர்ப்பண வழிபாட்டால், பித்ருக்களின் பாவங்கள் தொலையும். புண்ணியங்கள் பெருகும். அதேபோல், இந்தப் புண்ணியங்கள் உங்கள் வம்சத்தையே வாழச் செய்யும். உங்கள் முன்னோர்களுக்கு நன்றி சொல்லும் நன்னாள்தான் ஆடி அமாவாசை. மொத்த அமாவாசையும் அப்படித்தான் என்கிறது சாஸ்திரம்.
அமாவாசையன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணம் கொடுப்பதற்குப் பொருந்தாது. காலையில் தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது.
நீர் நிலைகளுக்குச் செல்லும் சூழல் இல்லை, இயலாது என்றிருக்கும் நிலையில், வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம்.
தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம். கோத்திரம் தெரியாதவர்கள், சிவ கோத்திரம், விஷ்ணு கோத்திரம் என்று பொதுவாகச் சொல்லலாம். ஆனால், மூன்று தலைமுறையின் தாத்தா, பாட்டி பெயர்கள் தெரிந்து வைத்துக்கொண்டு தர்ப்பணம் செய்யவேண்டும்.
தர்ப்பணம் செய்த பின்னர் முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இடுங்கள். துளசி மாலை சார்த்துவது ரொம்பவே மகிமை மிக்கது.
முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம் மற்றும் பழ வகைகளை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும்.
தலைவாழை இலையில் (நுனி இலை) படையலிட்டு வணங்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவிற்கு தானமாக வழங்கவேண்டும். கிடைக்காத பட்சத்தில், பசுவுக்கு சுத்த அன்னமும் வாழைப்பழமும் கொடுத்து வணங்கலாம்.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை செய்யக்கூடாது. விளக்கேற்றவோ கோலமிடுவதோ கூடாது. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடித்த பிறகுதான் பூஜை முதலான நித்தியப்படி செய்யும் பூஜைகளையும் வழிபாடுகளையும் செய்யவேண்டும்.
ஆடி அமாவாசை நன்னாளில், உங்கள் முன்னோர்களை நினைத்துக் கொண்டு, ஆறு பேருக்காவது தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள். இதில் முன்னோர்கள் குளிர்ந்து போவார்கள். தட்சிணாயன புண்ய காலத்தில், பித்ரு லோகத்தில் இருந்து பூலோகம் வரும் முன்னோர்கள், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் வம்சத்தையும் வாழ்வாங்கு வாழச் செய்வார்கள்.
ஆடி அமாவாசை நாளைய தினம் (20.7.2020). மறக்காமல் உங்கள் முன்னோர்களை வழிபடுங்கள். மும்மடங்கு புண்ணிய பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT