Last Updated : 19 Jul, 2020 02:55 PM

 

Published : 19 Jul 2020 02:55 PM
Last Updated : 19 Jul 2020 02:55 PM

ஆடி அமாவாசையில் சுமங்கலிகள் விரதம் இருக்கலாமா? ; பெற்றோர் இல்லாத ஆண்கள் அவசியம் விரதம் இருக்கணும்! 

முன்னோரை வணங்கும் ஆடி அமாவாசை நாளில், முன்னோர் வழிபாட்டை உரிய முறையில் செயல்படுத்துவோம். நாளை ஆடி அமாவாசை (20.7.2020).

ஆடி அமாவாசையில் ஆண்கள், அதிலும் தாய் அல்லது தந்தையை அல்லது ஒருவரை அல்லது இருவரையும் இழந்தவர்கள் தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் எள்ளும் தண்ணீரும் விடவேண்டும் என்றும் சாஸ்திரம் வலியுறுத்துகிறது. ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பிகள் என எத்தனை சகோதரர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருமே தர்ப்பணம் செய்யவேண்டும் எள்ளும் தண்ணீரும் விடவேண்டும் என ஆச்சார்யர்கள் விவரிக்கின்றனர்.

சரி... அமாவாசை நாளில் பெண்கள் விரதம் இருக்கிறார்களே... இது சரியா? விரதம் யாரெல்லாம் இருக்கவேண்டும்?

தாய் தந்தை இல்லாத பெண்கள், அதேசமயம் கணவரை இழந்த பெண்கள், அமாவாசை நாளில் விரதம் இருக்கலாம். ‘எனக்கு தாய் தந்தை இல்லை. ஆனால் அண்ணன் தம்பி உண்டு’ என்றிருக்கும் பெண்கள், அவர்களுக்கு கணவர் இருக்கும் பட்சத்தில் விரதம் மேற்கொள்ளக்கூடாது.

‘எனக்கு அப்பா அம்மா இல்லை. ஆனால் கணவர் இருக்கிறார்’ என்று சொல்லும் பெண்கள், விரதம் இருக்கக் கூடாது.அதேபோல், ‘எனக்கு சகோதரர்கள் இல்லை. அப்பாவும் அம்மாவும் இறந்துவிட்டார்கள்’ என்று சொல்பவர்கள், அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று ஏதேனும் தானம் கொடுக்கலாம். நான்குபேருக்கு அன்னதானம் செய்யலாம். கணவர் இருப்பவர்கள், அதாவது சுமங்கலிகள் அமாவாசை விரதம் இருக்கக் கூடாது என்பதை மனதில் வையுங்கள்.

அடுத்து... ஆண்கள் எங்கெல்லாம் சென்று தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது?

கடல், ஆறு, குளம் முதலான நீர்நிலைகள் இருக்குமிடத்தில் தர்ப்பணம் செய்வது கூடுதல் விசேஷமானது. பலம் வாய்ந்தது. அதேபோல், அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்றும் கொடுக்கலாம்.

ராமேஸ்வரம், திருச்செந்தூர், திருச்சி காவிரிக்கரை, தஞ்சாவூர் திருவையாறு, நெல்லை தாமிரபரணி, பவானி கூடுதுறை, நெல்லைக்கு அருகில் உள்ள வல்லநாடில் உள்ள தசாவதாரக் கட்டம் அமைந்துள்ள இடம், முன்னோர் வழிபாட்டுக்கு உரிய தலங்கள் முதலான இடங்களில் தர்ப்பணம் செய்யலாம். வீட்டில் ஆச்சார்யரை வரவழைத்தும் தர்ப்பணம் செய்யலாம்.

இன்னொரு விஷயம்...

தாய் தந்தை இல்லாத எல்லா ஆண்களும் அவர்களைப் போற்றும் வகையில், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, அமாவாசை நாளில் உபவாசம் இருக்கவேண்டும். விரதம் மேற்கொள்ளவேண்டும்.

ஆச்சார்யரை அழைத்து தர்ப்பணம் செய்யாதவர்கள், அமாவாசை நாளில், காலையில் குளித்துவிட்டு, தூய்மையான நீரையும் கொஞ்சம் எள்ளையும் (கருப்பு எள்ளு) எடுத்துக் கொண்டு, வீட்டில் கால்படாத இடத்தில், காசி விஸ்வநாதரையும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமியையும் நினைத்துக் கொண்டு, இறந்துவிட்ட அப்பா, அம்மாவையும் தாத்தா பாட்டியையும் அவர்களின் முன்னோரையும் நினைத்துக்கொண்டு,ஒவ்வொருவருக்காகவும் மூன்று முறை எள்ளும் தண்ணீருமாக விடவேண்டும்.

உங்களையும் உங்கள் குடும்பத்தையும் வம்சத்தையும் இந்த முன்னோர் வழிபாடு சிறப்பாகவும் செம்மையாகவும் வாழவைக்கும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x