Last Updated : 19 Jul, 2020 10:11 AM

 

Published : 19 Jul 2020 10:11 AM
Last Updated : 19 Jul 2020 10:11 AM

நம் வாழ்வை உயர்த்தும் முன்னோர் வழிபாடு; ஆடி அமாவாசையில் பித்ருக்கடன் செய்ய மறக்காதீங்க! 

ஆடி அமாவாசை எனும் முக்கியமான நாள் நாளைய தினம் (20.7.2020). நம் வாழ்வில் மிக முக்கியமான நாள். நம் முன்னோர்களை நாம் வணங்குவதற்கு உரிய மிக உன்னதமான நாள். இறந்துவிட்ட நம் முன்னோர்களை வணங்கி, அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறும் நாள். எனவே மறக்காமல், ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர் வழிபாட்டைச் செய்யுங்கள். பித்ரு சாபமில்லாத வாழ்வைப் பெறுவீர்கள்.

அமாவாசை என்பது சாதாரணமானதொரு நாளில்லை. சந்திரன் இந்தநாளில் இருந்து வளருகிறான். அதனால்தான் அமாவாசைக்கு அடுத்தநாளில் இருந்து பெளர்ணமி வரைக்குமான நாட்களை, வளர்பிறை நாட்கள் என்கிறோம்.

அதேபோல், சந்திரன் மனோகாரகன். நம் மன ஓட்டங்களைத் தீர்மானிப்பவன். இந்தநாளில், நல்ல நல்ல சத்விஷயங்களில் நாம் ஈடுபட்டால், மனதில் நல்லெண்ணங்களை வளர்த்து வழிநடத்துவான் சந்திர பகவான் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

இதைவிட முக்கியமான நாளாக அமாவாசை தினம் சொல்லப்படுகிறது. ஆமாம்... அமாவாசை என்பது முன்னோர்களுக்கான நாள். பித்ருக்கள் என்று சொல்லப்படும் மூதாதையர்களுக்கான நாள். ஒவ்வொரு அமாவாசையுமே முன்னோர்களுக்கான நாள்தான். அதனால்தான் அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் எள்ளும் தண்ணீரும் விடவேண்டும் என்றும் அவர்களின் நினைவாக அவர்களுக்கு விருப்பமான உணவைச் சமைத்து, காகத்துக்கு உணவிடவேண்டும் என்றும் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

அமாவாசையில், மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. உத்ராயன காலமான தை மாதத்தில் வருகிற அமாவாசை, புரட்டாசி மகாளய பட்சம் என்று சொல்லப்படும் காலத்தில் வருகிற அமவாசை, தட்சிணாயன காலமான ஆடி மாதத்தில் வருகிற அமாவாசை... ஆகிய மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்கிறது சாஸ்திரம்.

ஆடி அமாவாசையில்தான் முன்னோர்கள், பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருகிறார்கள் என்று விவரிக்கிறது சாஸ்திரம். பூலோகத்தில் வந்து, நாம் என்ன செய்கிறோம், அவர்களை நினைக்கிறோமா, வணங்குகிறோமா, பித்ருக்கடன் என்று சொல்லப்படும் தர்ப்பணம் செய்யப்படுகிறதா, காகத்துக்கு உணவு வைக்கிறோமா என்பதையெல்லாம் பார்ப்பார்கள் என்றும் பார்த்து மகிழ்வார்கள் என்றும் மகிழ்ந்து ஆசீர்வதிப்பார்கள் என்றும் ஆச்சார்யர்கள் விவரிக்கிறார்கள்.

மகத்துவம் மிக்க ஆடி அமாவாசையில், முன்னோர்களை நினைப்போம். தர்ப்பணம் செய்வோம். முன்னோர்களின் பெயர்களைச் சொல்லி, எள்ளும் தண்ணீருமாக அர்க்யம் விட்டு, பித்ருக்களை வணங்குவோம்.

நம் வாழ்வின் சிக்கல்களையும் பிரச்சினைகளையும், நமக்கு ஏற்பட்டிருக்கிற கவலைகளையும் துக்கங்களையும் முன்னோர்கள் உணர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள். நம் வாழ்க்கையை சீரும் சிறப்புமாக அமைத்துக் கொடுத்து அருளுவார்கள்.

நாளைய தினம் ஆடி அமாவாசை (20.7.2020). மறக்காமல், அமாவாசை வழிபாடு செய்வோம்.நம் முன்னோர்களை மறக்காமல் ஆராதிப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x