Published : 18 Jul 2020 09:46 PM
Last Updated : 18 Jul 2020 09:46 PM
தட்சிணாயன புண்ய காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையில், காலையில் சூரிய பகவானை தரிசித்து, சூரிய நமஸ்காரம் செய்வது நோயில் இருந்து விடுபடும் சக்தியைக் கொடுக்கும். தீய சக்தி அண்டாமல் காக்கும் என்று சொல்லி அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.
ஆடி மாதம் பிறந்துவிட்டது. இதை தட்சிணாயன புண்ய காலம் என்பார்கள். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்கள் தட்சிணாயன புண்ய காலம் என்கிறது வேதம்.
அதேபோல், மார்கழி மாதத்தின் கடைசி நாள் வரைக்கும் தட்சிணாயன புண்ய காலம். இதையடுத்து தை மாதம் பிறக்கும். தை மாதப் பிறப்பு, உத்ராயன புண்ய காலம் என்று அழைக்கப்படும். இந்த உத்ராயன புண்ய காலம், தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் உத்ராயன புண்ய காலம் என்று அழைக்கப்படுகிறது.
ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன காலம். தை முதல் ஆனி மாதம் வரை, உத்ராயன காலம். தை மாதம் உத்ராயன காலம் தொடங்கும் போது, மகர சங்கராந்தி என்றும் பொங்கல் திருநாள் என்றும் கொண்டாடுகிறோம். அந்தநாளில், சூரிய நமஸ்காரம் செய்கிறோம். சூரியனாருக்கு படையலிடுகிறோம். சூரிய பகவானை மனதார வேண்டிக்கொள்கிறோம்.
ஆடி மாதத்தில், அம்மன் கோயில்களில் வெளியே வெட்டெவெளியில் பொங்கல் வைப்பது கிராம மக்களின் வழக்கம். இப்படி வைக்கப்படும் பொங்கல் படையலின் போது சூரியனாரையும் நமஸ்கரிப்பார்கள்.
ஆடி மாதம் பிறந்துவிட்டது. தட்சிணாயன காலம் தொடங்கிவிட்டது. ஆடி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நாளைய தினம் (19.7.2020). அதாவது தட்சிணாயன புண்ய காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை. நாளைய தினத்தில், காலையில் சூரிய உதயத்தில் எழுந்து, சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.
சூரிய நமஸ்காரம் செய்து, மனதார வேண்டிக் கொள்ளுங்கள். கிரக தோஷங்கள் அனைத்தையும் விலக்கித் தந்தருள்வார் சூரிய பகவான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT