Published : 17 Jul 2020 09:39 PM
Last Updated : 17 Jul 2020 09:39 PM
வெள்ளிக்கிழமை என்பது எல்லா மாதத்திலுமே முக்கியத்துவம் வாய்ந்த நாள்தான். வெள்ளிக்கிழமையை சுக்கிரவாரம் என்பார்கள். சுக்கிர யோகம் கிடைக்க, வெள்ளிக்கிழமையில் மகாலக்ஷ்மியை வழிபடச் சொல்கின்றன ஞானநூல்கள்.
ஆச்சார்யர்களும் வெள்ளிக்கிழமையில், மகாலக்ஷ்மியை வணங்கச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக, ஆடி மாத வெள்ளிக்கிழமையில், மறக்காமல் காலையும் மாலையும் விளக்கேற்றி, மகாலக்ஷ்மி காயத்ரீ அல்லது மகாலக்ஷ்மி நாமாவளிகளைச் சொல்லி ஏதேனும் இனிப்பு நைவேத்தியமாகப் படைக்கலாம். அம்பாளுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. எனவே அரளிப்பூ, செம்பருத்தி, ரோஜா முதலான மலர்களைச் சூட்டி வழிபடுங்கள்.
கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லுங்கள் அல்லது ஒலிக்க விட்டு காதாரக் கேளுங்கள். வீட்டில் செல்வம் சேரும். வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும். கடன் பிரச்சினையில் இருந்தும் சொத்து தொடர்பான வழக்கில் இருந்தும் விடுபடுவீர்கள்.
ஆடி மாதத்தில், ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில் அம்பாளை வீட்டுக்கு அழைக்கும் பூஜையைச் செய்து வழிபடுவது சிறப்புக்குரியது. அம்பாளை வரவழைக்கும் ஜபங்களைச் சொல்லி, சர்க்கரைப் பொங்கல் முதலான இனிப்பை நைவேத்தியமாகச் செய்து, பழங்கள், வெற்றிலை பாக்கு வைத்து குடும்ப சகிதமாக நமஸ்கரியுங்கள். அருளும் பொருளும் அள்ளித்தருவாள் அம்பிகை.
ஆடி மாதத்தின் செவ்வாய்க் கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் வீட்டில் குத்துவிளக்கையே அம்பாளாக பாவித்து வழிபடுவதும் மிகுந்த பலன்களைத் தரக்கூடியது. குத்துவிளக்கை அம்பாளாக பாவித்து, பொட்டிட்டு, சந்தனமிட்டு, பூக்கள் வைத்து, குங்குமத்தையும் மலர்களையும் சமர்ப்பியுங்கள். தடைப்பட்ட திருமணங்கள் விரைவில் நடந்தேறும்.
பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல், அவல் பாயசம் முதலானவை குழந்தைகளுக்கு மட்டுமல்ல... குழந்தை உள்ளமும் அன்னையைப் போலான கருணை உள்ளமும் கொண்ட அம்பாளுக்கும் ரொம்பவே பிடித்தமானவைதான்.
செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில், சிறு பெண் குழந்தைகளை, சிறுமிகளை அம்மனாக பாவித்து புத்தாடை உடுத்தி, மணைப்பலகையில் அமர வையுங்கள். முன்னதாக, அந்த மணைப்பலகைக்கு கோலமிடுங்கள். அவர்களுக்கு குழந்தைகளுக்கு விருப்பமான உணவையெல்லாம் பரிமாறி, புதுத்துணி, கண்ணாடி, சீப்பு, குங்குமச்சிமிழ், வளையல், பழங்கள் வைத்துக் கொடுங்கள். உங்கள் இல்லத்தில் இறந்துவிட்ட கன்னிப்பெண்கள் அகம் குளிர்வார்கள். இல்லத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடந்தேறும்.
உங்கள் குலதெய்வத்தின் பரிபூரண அருளைக் கிடைக்கப் பெறுவீர்கள்.
ஆடிமாதத்தில் வருகிற முக்கியமான வைபவம்... ஆடிப்பூரம். ஆடிப்பூரம் என்றதும் நம் நினைவுக்கு வருவது ஆண்டாள்தான். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர நன்னாளில், விமரிசையாக விழாவும் பூஜைகளும் நடைபெறும். கோயிலில் இருந்து நந்தவனத்துக்கு ஆண்டாள் எழுந்தருளல் நடைபெறும்.
இந்த நாளில், வீட்டில் ஆண்டாள் படத்துக்கு மாலையிட்டு வேண்டிக்கொள்ளலாம். திருப்பாவை படிக்கலாம். நாச்சியார் திருமொழி பாராயணம் செய்யலாம். சுமங்கலிப் பெண்களுக்கு வளையல், ஜாக்கெட் பிட் வைத்துக்கொடுக்கலாம். முடிந்தால், புடவை வழங்கலாம். இதில் ஆண்டாள் குளிர்ந்து போவாள். பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்ப்பாள். தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் பலம் பெறும். மாங்கல்யம் காத்தருள்வாள் ஆண்டாள்.
ஆண்டாளுக்குக் கிடைத்தது போலவே, நல்ல கணவனை பெண்கள் அடைவார்கள். வாழ்க்கைத் துணை சிறக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT