Published : 16 Jul 2020 12:40 PM
Last Updated : 16 Jul 2020 12:40 PM
உத்தராயனம் முடிந்து தட்சிணாயன புண்ய காலம் தொடங்குவது ஆடி மாதத்தில்தான். உத்தராயன புண்ய காலத் தொடக்கத்தில் இயற்கையான சூரியனை வணங்கச் சொல்கிறது சாஸ்திரம். அதேபோல், தட்சிணாயன புண்ய காலத்தில், நீர் நிலைகளை வணங்கச் சொல்லி அறிவுறுத்துகிறது. தட்சிணாயனம் தொடங்கும் மாதமான ஆடி மாதத்தில், புனித நீராடுவது அதனால்தான் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் காவிரி முதலான நீர் நிலைகளில், ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக நடந்தேறும்.
நீரின்றி அமையாது உலகு என்பதையும் மக்களின் ஜீவனாகத் திகழும் நீரை ஆராதிக்கவும் அறிவுறுத்தும் ஆடி மாதத்தில் நீர் நிலைகளை வணங்குவோம். வழிபடுவோம்.
’மாதங்களில் நான் மார்கழி’ என்றார் மகாவிஷ்ணு. ஆனால் ’மாதங்களில் நான் ஆடி’ என்று சொல்லாமலேயே நமக்கு உணர்த்துகிறாள் அம்பிகை. அதனால்தான் ஆடி மாதத்தின் சிவனாரின் சக்தியைவிட, அம்பாளின் சக்தியே அளப்பரியதாக இருக்கும் என்பதாகச் சொல்கிறது புராணம். ஆக, மாதங்களில் ஆடி எனத் திகழும் அம்பிகையைக் கொண்டாடுவோம்; ஆராதிப்போம்; வேண்டுவோம்; பலம் பெறுவோம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
உண்மையிலேயே, சக்தி என்று போற்றப்படும் அம்பிகை, மகா சக்தியாகத் திகழும் இந்த ஆடி மாதத்தில், அம்மன் கோயில்களில் வழிபாடுகளும் வேண்டுதல்களும் அமர்க்களப்படுகின்றன. இல்லத்தில், லலிதா சகஸ்ரநாமம் சொல்லிப் பாராயணம் செய்வது, ‘தேவி மகாத்மியம்’ பாராயணம் செய்வதும் ‘ஸ்ரீசெளந்தர்ய லஹரி’ பாராயணம் செய்வதும் மும்மடங்கு பலன்களைத் தரும். குடும்பத்தை இருளில் இருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வரும். ‘கனகதாரா ஸ்தோத்திரம்’ பாராயணம் செய்து, வீட்டில் உள்ள அம்பாள் படத்துக்கு குங்கும அர்ச்சனை செய்து வேண்டிக்கொண்டால், செல்வம் பெருகும். இழந்த பொன்னையும் பொருளையும் பெறலாம்.
மாதந்தோறும் அமாவாசை வரும். எல்லா அமாவாசை தினங்களும் பித்ருக்களுக்கான, பித்ருக்களை வழிபடுவதற்கான முக்கியமான நாட்களே! என்றாலும் மூன்று அமாவாசைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது சாஸ்திரம். உத்தராயன புண்ய காலமான தை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை. இதை தை அமாவாசை என்று போற்றுகிறோம். அதேபோல, மகாளய பட்ச புண்ணிய காலம் என்று சொல்லப்படும் புரட்டாசி மகாளய பட்ச அமாவாசையும் மகத்துவம் நிறைந்தது. தட்சிணாயன புண்ய காலத் தொடக்க மாதமான ஆடி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை, ஆடி அமாவாசை என்று போற்றப்படுகிறது.
ஆடி அமாவாசையில், நம் முன்னோர்கள் நம் வீட்டுக்கு வருவார்கள். நாம் அவர்களை வழிபடும் முறைகளையெல்லாம் பார்ப்பார்கள் என்றும் நம்முடைய கஷ்டங்களைக் கண்டு பொறுக்கமாட்டார்கள் என்றும் நம்மை முன்னேறவிடாமல் செய்யும் துஷ்ட சக்திகளை துரவிரட்டுவார்கள் என்றும் நமக்கு உணர்த்துகிறது சாஸ்திரம்.
ஆடி அமாவாசையில் மறக்காமல், தவறாமல் முன்னோர் வழிபாடு செய்யவேண்டும். நம்மை முன்னுக்கு வரச்செய்யும் பித்ருக்களின் வழிபாட்டை அவசியம் செய்யவேண்டும். முன்னோர்களின் படங்களுக்கு பூக்களிட்டு, பிடித்த உணவுகளைப் படையலிட்டு, நம்மால் முடிந்த அளவுக்கு தானம் தந்து வழிபடுவது மிகச்சிறந்த புண்ணியத்தைக் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
ஆடி மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி முதலான நாட்களில், ஏதேனும் ஒருநாளில்... கதம்பசாதம் படையலிடுவதும் அம்மன் வழிபாடு செய்து, குடும்ப சகிதமாக எல்லோரும் நமஸ்கரித்து வேண்டிக்கொள்வதும் கிராமங்களில் இன்றைக்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், சித்ரான்னங்களும் படையலிடுவது வழக்கம்.
வாழ்க்கையில் இன்பமும் துன்பமும், கஷ்டமும் நஷ்டமும் நல்லதும் கெட்டதுமாக கலந்து கட்டி வரும் உலகில், நடப்பதெல்லாம் நல்லதாக அமைய, சக்தியை வழிபடும் சாந்நித்தியமான மாதம் ஆடி மாதம். எனவே, அம்பிகையை வழிபடுவோம். சகல சத்விஷயங்களையும் பெறுவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT