Last Updated : 16 Jul, 2020 11:34 AM

 

Published : 16 Jul 2020 11:34 AM
Last Updated : 16 Jul 2020 11:34 AM

ஆடி மாத சிறப்புகள் : சுமங்கலியாக, கன்னியாக இறந்தவர்களை ஆராதிக்கும் மாதம்; வீட்டில் தரித்திரம் நீங்கும்; ஒற்றுமை பலப்படும்! 

சக்தி மிக்க மாதம் ஆடி. சக்தி என்று சொல்லப்படும் அம்பிகைக்கு உரிய மாதம் இது. இந்த மாதம் முழுவதும் அம்பாளை, அம்மனை, கிராம தெய்வப் பிரார்த்தனைகளைச் செய்வது கூடுதல் பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.

ஆடி மாதம் என்பது, தட்சிணாயன புண்ய காலத்தின் தொடக்கம். அதாவது ஆடி மாதம் தொடங்கி மார்கழி மாதம் வரையிலான காலம் என்பது தட்சிணாயன காலம் என்கிறது வேதம். பொதுவாகவே இந்த தட்சிணாயன காலம் என்பது வழிபாடு, பிரார்த்தனை, பூஜைகள், ஜபம், கலைப்பயிற்சி, யோகா முதலான பயிற்சி முதலானவற்றுக்கான மாதம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஆடி மாத தட்சிணாயனத் தொடக்க புண்ய மாதத்தில், புனித நீராடுதல் ரொம்பவே உன்னதமானது என்பது ஐதீகம். கங்கை, காவிரி முதலான நீர் நிலைகளுக்குச் சென்று நீராட இயலாதவர்கள், வீட்டில் குளிக்கும் போது, கங்கையை நினைத்து வணங்கிவிட்டு குளித்தால், காவிரியை விட்டு வணங்கிவிட்டு குளித்தால், புனித நதிகளின் பெயர்களை மூன்று முறை சொல்லி, சிரசில் நீர் விட்டுக் குளித்தால், புனித நதிகளில் நீராடிய பலன்கள் உண்டு என்றும் முந்தைய தலைமுறையிலான பாவங்கள் உட்பட சகல பாவங்களும் நீங்கும் என்றும் ஞானநூல்கள் விவரிக்கின்றன.

ஆடி மாதம் எல்லாவற்றுக்குமான உன்னதமான மாதம். இந்த மாதத்தைக் கொண்டுதான், பண்டிகைகள் தொடங்குகின்றன. இந்த மாதத்தைக் கணக்கிட்டே பண்டிகைகளும் வழிபாடுகளும் பூஜைகளும் ஒன்றன்பின் வருகின்றன.

ஆடி மாதம் குலதெய்வங்களுக்கான மாதம். கிராம தெய்வங்களுக்கான மாதம். எல்லை தெய்வங்களை வழிபடுவதற்கு உரிய மாதம். புற்று கொண்டுள்ள தலங்களை வழிபடுவதற்கு உரிய மாதம். மாரியம்மன், காளியம்மன், செல்லியம்மன், மதுரைவீரன், காத்தவராயன், முனீஸ்வரர், கருப்பண்ணசாமி, அய்யனார் முதலான தெய்வங்களை வழிபடுவது இரட்டிப்புப் பலன்களை வழங்கக்கூடியவை.

ஆடி மாதத்தின் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் அம்பாளைக் கொண்டாடுவதற்கும் வணங்குவதற்குமான அற்புதமான நாட்கள் என்கிறார்கள் முன்னோர்கள். அதேபோல், குடும்பத்தில் சுமங்கலியாகவோ கன்னிப்பெண்ணாகவோ இறந்தவர்களைக் குளிர்விப்பதற்காகவும் அவர்களின் ஆசியைப் பெறுவதற்காகவும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்து, பூஜையறையை சுத்தம் செய்து, கோலமிட்டு, விளக்கேற்றி, சர்க்கரைப் பொங்கல் படையலிடலாம். எலுமிச்சை சாதம், புளியோதரை, தேங்காய் சாதம் முதலான சித்ரான்னங்களை நைவேத்தியம் செய்யலாம்.

அப்போது, புடவை, ஜாக்கெட் வைத்து வேண்டிக்கொள்ளலாம். சுமங்கலிக்கோ கன்னிப்பெண்ணுக்கோ வஸ்திரம் தானமாகத் தரலாம். கூடவே, வளையல், மஞ்சள், குங்குமம், கண்ணாடி முதலான மங்கலப் பொருட்களையும் வழங்கலாம். வயது முதிர்ந்த சுமங்கலிக்கு வழங்கி நமஸ்கரிப்பது மிகப்பெரிய ஆசீர்வாதம் என்றும் இதனால் முன்னோர்களின் ஆசீர்வாதமும் அருளும் கிடைக்கும் என்றும் வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.

இதனால், குடும்பத்தின் தரித்திரம் விலகும். சுபிட்சமும் ஐஸ்வர்யமும் குடிகொள்ளும். திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பொன்னும் பொருளும் சேரும். கடன் முதலான தொல்லைகளில் இருந்து மீளலாம். குடும்ப உறவுகளிடையே இருந்து வந்த கருத்துவேற்றுமை முற்றிலுமாக நீங்கும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x