Last Updated : 15 Jul, 2020 10:54 AM

 

Published : 15 Jul 2020 10:54 AM
Last Updated : 15 Jul 2020 10:54 AM

ஆடிக்கிருத்திகை நாளில்... கந்தசஷ்டி கவசம்; நம்மைக் காப்பான், தடைகளை தகர்ப்பான் வெற்றிவேலன்

கந்தனை, கார்த்திகேயனை ஆடிக்கிருத்திகையில் மனதார வழிபடுவோம். இன்னல்களையெல்லாம் தீர்ப்பான். வாழ்வில் ஏற்றத்தையும் மாற்றத்தையும் தருவான்.
ஆறுபடை வீடுகொண்ட அழகன் முருகனைக் கொண்டாட நாளும்கோளும் அவசியமில்லை. ஆனாலும் முருகப்பெருமானை மறக்காமல் வழிபட வேண்டும் என்று சில நாட்களை, சில திதிகளை, சில நட்சத்திரங்களை வலியுறுத்துகின்றன புராணங்கள்.

பொதுவாகவே முருகப்பெருமானை வழிபடுவதற்கு செவ்வாய்க் கிழமையும் வெள்ளிக்கிழமையும் உகந்த நாட்கள் என்று முன்னோர்கள் சொல்லிவைத்திருக்கிறார்கள். அதன்படி வழிபடுகிறோம். செவ்வாய் பகவானுக்கு அதிபதி முருகப்பெருமான் என்றும் முருகப்பெருமானை வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷம் முதலான தோஷங்கள் நீங்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

திதிகளில் சஷ்டி என்பது ஆறுமுகநாயகனுக்கு உகந்தது என்றும் அந்தநாளில் முருக வழிபாடு செய்வதும் ரொம்பவே மகத்துவம் நிறைந்தது என்றும் தடைகள் அனைத்தையும் தகர்த்து அருளுவார் ஆறுமுகப்பெருமான் என்றும் சொல்கிறார்கள் முருக பக்தர்கள்.

இதேபோல், பூசம், விசாகம், உத்திரம் முதலான நட்சத்திரங்கள் ரொம்பவே விசேஷமானவை. இந்த நட்சத்திர நாட்களில், சிவகுமாரனை, பார்வதி மைந்தனை, வள்ளி மணாளனை மனதார வழிபட்டு வந்தால், திருமண வரம் கிடைக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம், வீடு மனை யோகம் கிடைக்கும் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

நட்சத்திர நாட்களில் மிக மிக முக்கியமானது கார்த்திகை நட்சத்திர நாள். கார்த்திகேயக் கடவுளை, கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திர நாளிலும் மாதந்தோறும் வருகிற கார்த்திகை நட்சத்திர நாளிலும் வழிபடுவார்கள் பக்தர்கள். விரதமிருந்தும் வழிபடுவார்கள் பலரும்.

மாதாமாதம் வருகிற கார்த்திகை நட்சத்திர நாள் விசேஷம் என்றாலும் ஆடிமாதத்தில் வருகிற கார்த்திகை நட்சத்திர நாள் ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. இதை ஆடிக்கிருத்திகை என்றே போற்றுகிறார்கள் முருக பக்தர்கள்.

ஆடிக்கிருத்திகை ரொம்பவே உகந்தநாள். உயிர்ப்பான நாள். நாளைய தினம் (16.7.2020) வியாழக்கிழமை, ஆடி மாதம் பிறக்கிறது. ஆடி மாதப் பிறப்பிலேயே ஆடிக்கிருத்திகையும் வருகிறது. இது கூடுதல் மகோன்னதம் மிக்க நாள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

எனவே, ஆடிக்கிருத்திகையான நாளைய தினம், வீட்டில் விளக்கேற்றுங்கள். முருகப் பெருமானின் படத்துக்கு அரளி மாலை சார்த்துங்கள். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள்.

காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க
தாக்கத் தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட

எனும் சொல்லுக்கேற்ப, நம்மைக் காத்தருள்வான் கார்த்திகேயன். தடைகளையெல்லாம் தகர்ப்பான். பாவங்களையெல்லாம் போக்கி அருளுவான்.


முருகப்பெருமானுக்கு, நாளைய தின ஆடிக்கிருத்திகை வழிபாட்டில், பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். அக்கம்பக்கத்தாருக்கு நைவேத்தியத்தை வழங்குங்கள். நம் கஷ்டங்களையெல்லாம் போக்கி, நம் வாழ்க்கையை இனிக்கச் செய்வான், மலரச் செய்வான் வெற்றிவேலன்.


ஆடிக்கிருத்திகையில் அல்லல் தீர்க்கும் குமரனைக் கொண்டாடி வேண்டுவோம். குறைகளைச் சொல்லி பிரார்த்திப்போம்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x