Published : 15 Jul 2020 10:06 AM
Last Updated : 15 Jul 2020 10:06 AM
குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் ஆடி மாதம் பிறக்கிறது. இது ரொம்பவே விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். அற்புதங்கள் கொண்ட ஆடி மாதம் பிறக்கும் வேளையில், மாதத் தர்ப்பணம் செய்ய மறந்துவிடாதீர்கள். முன்னோர் வழிபாட்டுக்கு உரிய இந்த மாதத்தில் அவர்களை வழிபடுங்கள். பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைத்து இறையருளுடன் வாழ்வீர்கள்.
ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின் போது தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் முன்னோர் வழிபாடு செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது சாஸ்திரம். இந்த நாளில், முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் விடவேண்டும் என அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.
இதேபோல், வீட்டில் உள்ள முன்னோர்களின் படங்களுக்கு சந்தனம் குங்குமம் இடுவதும் பூக்களால் அலங்கரிப்பதும் அவர்களை குளிரப்படுத்தும் என்றும் அதில் மகிழ்ந்து நம்மை அவர்கள் ஆசீர்வதிப்பார்கள் என்றும் பித்ரு தோஷம், பித்ரு சாபம் முதலானவை நீங்கும் என்பதும் ஐதீகம்.
பொதுவாகவே, தை மாதம் வரக்கூடிய அமாவாசையும் ஆடி மாதம் வரக்கூடிய அமாவாசையும் புரட்டாசி மாதம் வரக்கூடிய அமாவாசையும் மகோன்னதமானவை என்று போற்றப்படுகின்றன. அப்பேர்ப்பட்ட அமாவாசை கொண்ட ஆடி மாதம் நாளைய தினம் (16.7.2020) பிறக்கிறது. சாஸ்திரங்கள் வலியுறுத்துகிற மாதப் பிறப்பின் தர்ப்பணத்தை மறக்காமல் செய்யுங்கள். பித்ருக் கடமையை நிறைவேற்றுங்கள்.
வியாழக்கிழமையை குருவாரம் என்பார்கள். எனவே, குருவாரமான வியாழக்கிழமையில், ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளக்கூடிய அற்புதமான அதிர்வுகள் கொண்ட நன்னாளில், காலையில் விளக்கேற்றுங்கள். வாசலில் கோலமிடுங்கள். சுவாமி படங்களுக்கும் இறந்துவிட்ட பெரியோர்களின்... முன்னோர்களின்... பித்ருக்களின் படங்களுக்கும் பூக்களிடுங்கள்.
தர்ப்பணம் செய்யுங்கள். எள்ளும் தண்ணீரும் விடுங்கள். இறந்துவிட்ட நம் பெற்றோர், முன்னோர் என அவர்களுக்குப் பிடித்த உணவைக் கொண்டு நைவேத்தியம் செய்யுங்கள். அதனை காகத்துக்கு உணவாக வழங்குங்கள்.
முடிந்தால், ஐந்து பேருக்கேனும் நம் முன்னோரை நினைத்து, தயிர்சாதம் வழங்குங்கள். இதில், முன்னோர்கள் குளிர்ந்து போய் ஆசீர்வதிப்பார்கள். ஆடி மாதம் என்பது முன்னோர்களுக்கான மாதம். நம் வழிபாடுகளை பித்ருக்கள் பார்க்கிறார்கள் என்பது ஐதீகம்.
நாளைய தினம் 16ம் தேதி வியாழக்கிழமையில், ஆடி மாதப் பிறப்பில், முன்னோர் ஆராதனையை மறக்காமல் செய்யுங்கள். இதுவரை இருந்த குடும்பத்திலான பிரச்சினைகளும் சிக்கல்களும் நீங்கும். முன்னேற விடாமல் செய்த தடைகளும் எதிர்ப்புகளும் விலகும். வீட்டில் தடைப்பட்டிருந்த மங்கல காரியங்கள் நடந்தேறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT