Published : 14 Jul 2020 08:54 PM
Last Updated : 14 Jul 2020 08:54 PM
கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது தாராசுரம். இந்த ஊரை அடுத்துள்ளது பட்டீஸ்வரம். தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் கோயில், சிற்ப நுட்பங்களின் கலைப்பெட்டகமாகத் திகழ்கிறது என்றால், பட்டீஸ்வரம் பிரமாண்டமான கோயிலில் நின்ற திருக்கோயிலில், தனிக்கோயிலாக... தனிச்சந்நிதியாக இல்லாமல், தனிக் கோயிலாகவே காட்சி தருகிறாள் துர்கை.
மிகவும் சக்தி வாய்ந்த பட்டீஸ்வரம் துர்கையைத் தரிசிக்க, எங்கிருந்தெல்லாமோ வருகிறார்கள் பக்தர்கள். இவளின் சக்தியும் சாந்நித்தியமும் அறிந்திருப்பீர்கள்.
இதே பட்டீஸ்வரத்தில், பிரமாண்டமான இந்தக் கோயிலுக்கு அருகில், கோயிலுக்கு வடக்கே அமைந்த திருத்தலம் திருச்சக்தி முற்றம்.
அற்புதமான திருத்தலம். தலத்தின் பெயரிலேயே சக்தி இருப்பதை கவனித்தீர்களா?
ஆமாம், சக்தி மிக்க திருத்தலம் இது.
‘எனக்கு தீட்சை அளித்து அருளுங்கள் சுவாமி’ என அப்பர் பெருமான் மனமுருகிப் பாடினார். அதில் மகிழ்ந்த ஈசன், ‘நீ வேண்டியதை தருகிறேன். நல்லூருக்கு வா’ என அருளிய அற்புதமான திருத்தலம் என்று சொல்லிப் பூரிக்கின்றனர் சிவ பக்தர்கள்.
இவற்றையெல்லாம் விட அற்புதமான விஷயம்... இந்தத் தலத்தில்..!
‘என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று ஆனானப்பட்ட உமையவளே தவமிருந்த பூமி இது என்கிறது ஸ்தல புராணம். இங்கே, ஒற்றைக் காலில் நின்று கொண்டு, தன் வலது கரத்தை சிரசின் மீது வைத்து, சிவனாரை நோக்கி தவமிருந்தாள் அம்பிகை.
அங்கே, பார்வதிதேவிக்கு ஜோதி ரூபனாக, சிவக்கொழுந்தென, தீப்பிழம்பாக தென்னாடுடைய சிவபெருமான், எழுந்தருளினார். ஈசனே ஜோதி, ஜோதியே சிவம் என்பதை அறிந்து உணர்ந்த உமையவள், இறைவனுடன் இரண்டறக் கலந்தாள்; ஜோதியில் நீக்கமற நிறைந்தாள் என்கிறது ஸ்தல புராணம்.
திருச்சக்தி முற்றம் என்றும் திருச்சத்தி முற்றம் என்றும் அழைக்கப்படும் இந்தத் தலத்திலுள்ள சிவபெருமானுக்கு என்ன பெயர் தெரியுமா? தழுவக்குழைந்த ஈசன் என்று திருநாமம். ஐந்து நிலை ராஜகோபுரத்துடன், இரண்டு பிராகாரங்களைக் கொண்ட அழகிய திருத்தலம்.
மூலவர் மிகப்பெரிய சிவலிங்கத் திருமேனி. சிவக்கொழுந்தீஸ்வரராக அருள்பாலிக்கிறார். அம்பாளின் திருநாமம் - பெரியநாயகி அம்பாள். கோயிலுக்கு வெளியே உள்ள சூலதீர்த்தம் விசேஷமானது.
ஆலயத்தில், தனிச்சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார் தழுவக்குழைந்த ஈசன். தாம்பத்ய ஒற்றுமைக்கு வேண்டிக்கொள்ளலாம். கருத்தொற்றுமைக்கான பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது. ஒற்றைக் காலை தரையில் ஊன்றி மற்றொரு பாதத்தை ஆவுடையார் மீது மடக்கி வைத்தபடி அதேசமயம் சிவனாரின் மீது சிவனாரின் திருமேனி மீது, பாதம் படாமல் கட்டியணைத்தபடி திருக்கோலம் பூண்டிருக்கிறாள் அம்பாள். பின்னே, ஒற்றைக்காலில் நின்றுகொண்டு தவக்கோலத்திலும் காட்சி தருகிறாள் அன்னை.
திருச்சக்திமுற்றத்து சிவ பார்வதியை, தழுவக்குழைந்த ஈசனை, வீட்டிலிருந்தபடியே வேண்டிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு திங்கட்கிழமையும் தழுவக்குழைந்த ஈசனை நினைத்தபடி விளக்கேற்றி வழிபடுங்கள். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள். பிரியம் இல்லாத தம்பதி பிரியமும் அன்புமாக மனம் மாறுவார்கள் என்பது உறுதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT