Published : 14 Jul 2020 07:31 PM
Last Updated : 14 Jul 2020 07:31 PM
அந்தக் கோயிலை நண்டாங்கோயில் என்கிறார்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள். கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில், சுமார் 10 கி.மீ. தொலைவில், திருவிசநல்லூர் திருத்தலத்துக்கு அருகில் அமைந்துள்ளது திருந்துதேவன்குடி.
சின்னஞ்சிறிய கிராமத்தில் உள்ள மிக அற்புதமான கோயில் இது. காவிரியாற்றின் வடகரையில் அமைந்துள்ள திருக்கோயில்களில் இதுவும் ஒன்று.
இந்தக் கோயிலில் அமைந்துள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீகற்கடேஸ்வரர்.
அதென்ன கற்கடேஸ்வரர்?
இந்திரன் தன் சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவதற்காக, இந்தத் தலத்துக்கு வந்து, தவமிருந்தான். தினமும் சிவ பூஜைகளில் ஈடுபட்டான். பூஜைக்காக, தாமரை மலர்களைப் பறித்து வைத்திருந்தான். ஒருநாள்... சிவபூஜைக்காக தாமரைபூவை வைத்திருந்தார்.
அப்போது நண்டு ஒன்று அங்கே வந்தது. தாமரைப்பூ ஒன்றைக் கவ்வியது. தான் கவ்விக்கொண்ட தாமரையை எடுத்தபடி, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சென்றதைக் கண்டான் இந்திரன். அதன் வழியிலேயே சென்றான்.
ஒருகட்டத்தில், தன் வாளினால் நண்டை தாக்க முனைந்தான் இந்திரன். அது சிவனாரை வேண்டியது. சிவலிங்கத் திருமேனியில் உள்ள துவாரத்தினுள்ளே சென்று நுழைந்துகொண்டது. சிவபெருமான் அங்கே எழுந்தருளினார். நண்டின் உயிரைக் காத்தருளினார். அப்படியே இந்திரனின் சாபம் தீர்த்தும் அருளினார் என்கிறது ஸ்தல புராணம்.
அற்புதமான கோயில். கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய திருக்கோயில். நண்டு, சிவலிங்கத் திருமேனியை வழிபட்ட சிற்பத்தை, இன்றைக்கும் ஆலயத்தில் தரிசிக்கலாம்.
இன்னொரு சரிதமும் உண்டு.
தீராத நோயால் அவதிப்பட்டு வந்தான் மன்னன். பார்க்காத வைத்தியமில்லை. போகாத ஆலயமில்லை. கடும் சிவ பக்தனான மன்னன், சதாசர்வ காலமும் சிவனாரை நினைத்து பூஜித்து வந்தான். ஒருநாள்... முதியவராக, வைத்தியராக வந்த சிவபெருமான், மன்னனின் நோயைத் தீர்த்தருளினான் என்கிறது ஸ்தல வரலாறு. இதனால் இங்கே உள்ள சுவாமிக்கு, அருமருந்துடையார் எனும் திருநாமம் அமைந்தது. அதேபோல் நண்டு பூஜித்த சிவன் என்பதால், கற்கடேஸ்வரர் எனும் திருநாமமும் அமைந்தது. கற்கடம் என்றால் நண்டு.
கருங்கல் கட்டுமானம் கொண்ட அற்புதமான ஆலயம். அகழி அமைக்கப்பட்ட திருக்கோயில். அம்பாளின் திருநாமம் அருமருந்து நாயகி. இன்னொரு அம்பாளும் இங்கே உண்டு. இவளுக்கு அபூர்வநாயகி எனும் திருநாமம்.
அருமருந்து நாயகிக்கு எண்ணெயால் அபிஷேகம் செய்வது இங்கே சிறப்பு வாய்ந்தது. அபிஷேகித்த எண்ணெய்ப் பிரசாதத்தை உட்கொண்டால் தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்.
திருந்துதேவன்குடி எனும் தலத்தில் குடிகொண்டிருக்கும் கற்கடேஸ்வரர் கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையேனும் வந்து தரிசிப்பது மகா விசேஷம். நோய்கள் நீங்கப்பெற்று, ஆரோக்கியத்துடன் வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
முக்கியமாக, கடக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தலம் என்பதால், வீட்டிலேயே கற்கடேஸ்வரரை நினைத்து வேண்டிக்கொள்ளுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT