Last Updated : 10 Sep, 2015 11:38 AM

 

Published : 10 Sep 2015 11:38 AM
Last Updated : 10 Sep 2015 11:38 AM

விவிலிய வழிகாட்டி: விதைகளில் ஒளிந்திருக்கும் வாழ்வு!

இயேசுவின் முதன்மைச் சீடர்களாகிய மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூவரது நற்செய்தி நூல்களிலும் இயேசு கூறிய உவமைகள் ஒற்றுமைகளோடு இடம்பெற்றிருப்பதைக் காணலாம். இயேசு கூறிய உவமைகள் மக்களை மகிழ்விப்பதற்காகக் கூறப்பட்ட கற்பனைச் சித்திரங்கள் அல்ல. கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வருவது பற்றியும் அந்த ஆட்சியில் பங்குகொள்ள நாம் எத்தகைய வாழ்க்கை வாழ வேண்டும் என்பது பற்றியும் எடுத்துக் கூறுகின்றன.

இயேசு தாம் கூறிய உவமைக் கதைகளை அன்றாட வாழ்வியல் கூறுகளிலிருந்து விலகிவிடாமல் மக்கள் சந்திக்கின்ற நிகழ்ச்சிகளையும் வழக்குகளையும்யொட்டியே அமைத்துக் கூறினார். இதன்மூலம் மக்களுக்கு இறையாட்சி பற்றிய உண்மைகளை எளிமையாக உணர்த்தினார். தனது உவமைகளைக் கேட்ட மனிதர்களை சிந்திக்கத் தூண்டினார். விவசாயம் வாழ்வின் முக்கிய தொழிலாக இருந்த அக்காலத்தில் விதைகளைக் கொண்டு இறையாட்சிக்கு உகந்த மனிதர்களாக எவ்வாறு வாழ்வது என்பதை எடுத்துக் கூறினார். முதலில் கடுகு விதை உவமையைக் காண்போம்.

கடுகு விதையும் விதைப்பவனும்

“கடவுளின் அரசாங்கம் கடுகு விதைக்கு ஒப்பாக இருக்கிறது; ஒருவன் அதை எடுத்து தன்னுடைய வயலில் விதைத்தான்; அது எல்லா விதைகளையும்விட மிகச் சிறிய விதை; ஆனால் அது வளர்ந்தபின் எல்லாப் புல்பூண்டுகளையும் விடப் பெரியதாகி, வானத்துப் பறவைகள் வந்து அதன் கிளைகளில் தங்கும் அளவுக்கு ஒரு மரமாகிறது” (மத்தேயு13:36). என்றார்.

பல நேரங்களில் சலிப்பும், விரக்தியும் நம்மை ஆட்கொண்டு விடுகின்றன. ‘எங்கெங்கு காணினும் ஏற்றத்தாழ்வு, எல்லாவற்றிலும் பேதம் என்று சுற்றுகிற உலகில் வாழ நான் தகுதியற்றவன். என்னால் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது’ என்று அமைதியற்ற வாழ்க்கை வாழ்கிறீர்களா? வாருங்கள், ஆறுதல் கொள்வோம். நமக்காகத்தான் இயேசு ‘கடுகு விதை’ உவமையைக் கூறியிருக்கிறார். கடுகு விதை எவ்வளவு சிறியது.

ஆனாலும், அது வளர்ந்து பெரிய மரமாகிறது. வானத்துப் பறவைகளுக்கு நிழல் தருகிறது. இன்று நீங்கள் கடுகாக இருக்கலாம். ஆனால் நீங்கள் பொறுமையைக் கடைபிடித்தால் பலருக்கு நிழல் தரும் மரமாக இருப்பீர்கள் என்கிறார் இயேசு. பொறுமை இறையாட்சியின் முக்கிய அம்சமாக இருப்பதைக் கவனியுங்கள்.

அடுத்து விதைக்கிறவன் உவமையைக் கூறினார் இயேசு. “இதோ! விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் போனான்; அவன் தூவிய சில விதைகள் பாதையோரத்தில் விழுந்தன, பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றன. வேறுசில விதைகள் மண் அதிகமில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தன; அவை உடனே முளைத்தபோதிலும், மண் ஆழமாக இல்லாததால் வேர் பிடிக்கவில்லை; எனவே, வெயில் வந்தபோது அவை வாடி வதங்கி காய்ந்துபோயின.

இன்னும் சில விதைகள் முட்செடிகள் உள்ள நிலத்தில் விழுந்தன, அந்த முட்செடிகள் பெரிதாக வளர்ந்து அவற்றை நெருக்கிப்போட்டன. மற்ற விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்து, விளைச்சல் தர ஆரம்பித்தன; அவற்றில் சில நூறு மடங்காகவும், வேறுசில அறுபது மடங்காகவும், இன்னும் சில முப்பது மடங்காகவும் பலன் தந்தன. காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்” (மத்தேயு 13: 1-9) என்றார்.

விளக்கம் தந்த போதகர்

விதைக்கிறவன் உவமையைக் கூறிய இயேசு தம் சீடர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அதை விரிவாக எடுத்துக் கூறினார். “ விதைக்கிறவனைப் பற்றிய உவமையின் அர்த்தத்தைக் கவனித்துக் கேளுங்கள். பாதையோர நிலத்திற்கு ஒப்பானவர் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியைக் கேட்டும் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை; பொல்லாதவன் வந்து அவருடைய இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொண்டு போய்விடுகிறான். கற்பாறை நிலத்திற்கு ஒப்பானவர் அந்தச் செய்தியைக் கேட்டு, அதை உடனே சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார். அவருக்குள் அது வேர்விடுவதில்லை; அதனால், அவர் கொஞ்சக் காலத்திற்கு மட்டுமே நிலைத்திருந்து, அந்தச் செய்தியின் காரணமாக உபத்திரவமோ துன்புறுத்தலோ வந்தவுடன் விசுவாசத்திலிருந்து விலகிவிடுகிறார்.

முட்செடிகள் உள்ள நிலத்திற்கு ஒப்பானவர் செய்தியைக் கேட்கிறார், ஆனால் இவ்வுலகத்தின் கவலையும் செல்வத்தின் வஞ்சக சக்தியும் அந்தச் செய்தியை நெருக்கிப் போடுவதால் அவர் பலன் கொடுக்காமல்போகிறார். நல்ல நிலத்திற்கு ஒப்பானவரோ அந்தச் செய்தியைக் கேட்டு அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு அதன்படியே நீதியுடன் வாழ்கிறவர்கள். எனவே அவர் மிகுந்த பலன் தருகிறார்; அவர் நூறு மடங்காகவும், இன்னொருவர் அறுபது மடங்காகவும், வேறொருவர் முப்பது மடங்காகவும் பலன் தருகிறார்கள்” என்று சொன்னார்.

கோதுமையும் களைகளும்

அவர் வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: “ பரலோக அரசாங்கம், நல்ல விதையைத் தன் வயலில் விதைத்த ஒரு மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது. எல்லாரும் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவனுடைய எதிரி வந்து கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் வளர்ந்திருந்தன. அதனால், வீட்டு எஜமானருடைய வேலைக்காரர்கள் அவரிடம் வந்து, “எஜமானே, நீங்கள் வயலில் நல்ல விதையைத்தானே விதைத்தீர்கள்? அப்படியிருக்கும்போது, களைகள் எப்படி வளர்ந்தன?” என்று கேட்டார்கள். “இது எதிரியுடைய வேலை” என்று அவர் சொன்னார்.

அதற்கு அவர்கள், “நாங்கள் போய் அவற்றைப் பிடுங்கிப் போடலாமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘வேண்டாம், அப்படிச் செய்யாதீர்கள்; களைகளைப் பிடுங்கும்போது தவறுதலாகக் கோதுமைப் பயிர்களையும் பிடுங்கிவிடுவீர்கள். அதனால் அறுவடைவரை இரண்டும் சேர்ந்தே வளரட்டும்; அறுவடைக் காலம் வந்ததும் அறுவடை செய்கிறவர்களை நோக்கி, “முதலில் களைகளைப் பிடுங்கி அவற்றை எரித்துப்போடுவதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள், அதன்பின் கோதுமையை என்னுடைய களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்று நான் சொல்வேன்’ என்று எஜமானர் கூறினார்” என விளக்கினார்.

அவர் இந்த உவமையை மேலும் விளக்கும்போது “நல்ல விதையை விதைக்கிறவர் மனிதகுமாரன்; வயல் இந்த உலகம்; நல்ல விதை கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகள்; களைகளோ பொல்லாதவனின் பிள்ளைகள்; அவற்றை விதைத்த எதிரி, பிசாசு; அறுவடை, இந்தச் சகாப்தத்தின் இறுதிக் கட்டம்; அறுவடை செய்கிறவர்கள், தேவதூதர்கள். ஆகவே, களைகளெல்லாம் ஒன்றுசேர்க்கப்பட்டு நெருப்பில் போடப்படுவதுபோல் இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்திலும் நடக்கும்.” என்று போதித்தார். நாம் நல்ல விதைகளாக இருப்போம். நல்ல விதைகளையே உலகுக்குக் கொடுப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x