Published : 13 Jul 2020 08:06 PM
Last Updated : 13 Jul 2020 08:06 PM
ஆனி மாதத்தின் நிறைவுச் செவ்வாயில், வீட்டில் விளக்கேற்றி முருகக் கடவுளை வழிபடுங்கள். இல்லத்தில் நிம்மதி குடிகொள்ளும். இதுவரை இருந்த மனக்குழப்பங்கள் யாவும் விலகும்.
ஆனி மாதம் அற்புதமான மாதம். இந்த மாதத்தில்தான் நடராஜ பெருமானுக்கு ஆனித் திருமஞ்சனம் விமரிசையாக நடைபெற்றது. நடராஜ பெருமானுக்கு நடைபெறும் ஆறு அபிஷேகங்களில், இந்த நாளில் நடைபெறும் அபிஷேகமும் ஒன்று.
அதேபோல், ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம் வருடந்தோறும் ஆனி மாதத்தில் நடைபெறும். ரங்கநாதர் கோயிலில், ஜேஷ்டாபிஷேக வைபவமும் விமரிசையாக நடைபெற்றது.
காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில், ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டத்துடன் நடைபெறும். இந்தத் தேரோட்டத்தையொட்டி தினந்தோறும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். காலையும் மாலையும் அம்பாளுக்கும் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகளும் அலங்காரங்களும் நடைபெறும். பஞ்சமூர்த்திகள் புறப்பாடு விமரிசையாக நடந்தேறும்.
இந்த முறை, இசை நிகழ்ச்சிகள் இல்லை. ஆனால் சுவாமி அம்பாளுக்கு நடைபெறும் விசேஷ ஆராதனைகள் வழக்கம்போலவே நடைபெற்றன.
ஆனி மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மிகுந்த விசேஷமானவை. இந்தநாளில், அம்பாள் வழிபாடு செய்வதும் முருகக் கடவுளை வணங்குவதும் நல்ல நல்ல சத்விஷயங்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.
நாளை செவ்வாய்க்கிழமை (14.7.2020). ஆனி மாதத்தின் நிறைவு செவ்வாய்க்கிழமை. அதாவது கடைசிச் செவ்வாய்க் கிழமை. இந்தநாளில், சக்தியையும் சக்தி மைந்தன் கந்தப்பெருமானையும் வணங்குவதற்கு உரிய அற்புதமான நாள்.
இந்த ஆனி நிறைவுச் செவ்வாயில், முருகப் பெருமானை வழிபடுங்கள். வீட்டில் விளக்கேற்றி, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். செந்நிற மலர்கள் சூட்டுங்கள். முடிந்தால் எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். இல்லத்தை சுபிட்சமாக்கித் தருவார் வெற்றிவேலவன். மனதில் குழப்பங்கள் நீங்கும். தெளிவுடன் திகழ்வீர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT