Published : 08 Jul 2020 03:07 PM
Last Updated : 08 Jul 2020 03:07 PM
முதல்வன் என்றுதான் ஆனைமுகத்தானைக் கொண்டாடுகிறது புராணமும் சாஸ்திரமும். முழு முதற்கடவுள் என கணபதியைப் போற்றுகிறது தர்ம சாஸ்திரம்.
அதனால்தான், எந்த பூஜையைச் செய்தாலும் முதல் வணக்கம், முதல்வனான, முழுமுதற்கடவுளான பிள்ளையாருக்கு செய்யப்படுகிறது. ஹோமம் முதலான சடங்குகளிலும் பிள்ளையாருக்கு முதல் பூஜையைச் செய்துவிட்டுத்தான், அடுத்தடுத்த ஹோமச் சடங்கு சாங்கியங்களைச் செய்வது வழக்கம்.
சடங்கிலும் பூஜையிலும் பிள்ளையாருக்கு முதல் பூஜை, வழிபாடு என இருந்தாலும், பிள்ளையார் மட்டும்தான் நம் எப்படி பூஜை செய்தாலும் ஏற்றுக் கொள்வார். நாம் எந்தவிதமாக விநாயகரை வழிபட்டாலும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு அருளை வழங்குபவர் பிள்ளையார் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
அதனால்தான் கணபதியை, தொந்தி கணபதி, ஆனைமுகத்தான், பிள்ளையாரப்பா என்றெல்லாம் உரிமையாக அழைத்து நம் வேண்டுதலை வைக்கிறோம்.
ஆனாலும் மகா கணபதி மந்திரத்தைச் சொல்லி வந்தால், நம் விக்னங்களையெல்லாம் அகற்றியருள்வார் பிள்ளையார்.
மகா கணபதி மந்திரத்தை, எந்த நாளில் வேண்டுமானாலும் சொல்லி வேண்டிக்கொள்ளலாம். தினமும் நாம் வீட்டில் காலையிலும் மாலையிலும் சுவாமிக்கு நமஸ்காரம் செய்வோம்தானே.
அப்போது, பிள்ளையாரை நினைத்து, அவரை ஆத்மார்த்தமாக வேண்டிக்கொண்டு, மகா கணபதி மந்திரத்தை 11 முறை, 24 முறை, 54 முறை, 108 முறை என உச்சாடனம் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்.
சக்தி மிக்க மகா கணபதி மந்திரம் இதுதான் :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம்
கணபதயே வர வரத சர்வஜனம் மே
வசமானய ஸ்வாஹா.
சக்தி வாய்ந்த மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் சொல்லுங்கள். காலையும் மாலையும் சொல்லுங்கள். சங்கடஹர சதுர்த்தி நாளில் சொல்லுங்கள். மகத்துவம் நிறைந்த இந்த மந்திரம், உங்கள் மனதையும் புத்தியையும் தெளிவாக்கும். வீட்டில் நல்ல அதிர்வுகள் ஏற்படும். தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் அனைத்தும் நடந்தேறும்.
பிள்ளையாரப்பனை, ஆனைமுகத்தானை, மகா கணபதியை மனதார வழிபடுங்கள். குறைவற வாழச் செய்வார் பாலகணபதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT