Published : 08 Jul 2020 12:01 PM
Last Updated : 08 Jul 2020 12:01 PM
ஒரே ஊரில் மூன்று பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்கள் மூன்றுமே சாந்நித்தியம் நிறைந்த ஆலயங்களாகவும் புராதனைப் பெருமை கொண்ட கோயிலாகவும் திகழ்கின்றன. வீர நரசிங்கப் பெருமாள் கோயில், நீலமேகப் பெருமாள் கோயில், மணிக்குன்ற பெருமாள் கோயில் என அமைந்துள்ளன.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன இந்தக் கோயில்கள். பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கரந்தை வந்து, அங்கிருந்து பள்ளி அக்ரஹாரத்துக்குச் செல்லும் வழியில், இடது புறம் சென்றால், வெண்ணாற்றங்கரையில் மூன்று பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. மூன்று ஆலயங்களுமே, கிழக்கு நோக்கி அமைந்துள்ளன என்பது கூடுதல் சிறப்பு என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
முன்னொரு காலத்தில், பராசர முனிவர் இங்கே வந்து குடிலும் பர்ணசாலையும் அமைத்து தவம் மேற்கொண்டு வந்தார். தன் சீடர்களுக்கு உபதேசம், பர்ணசாலையில் தவம் என வாழ்ந்து வந்த நிலையில், அந்த வனப்பகுதியில் மூன்று அரக்கர்கள் இருந்து அட்டகாசம் செய்து வந்தனர். தஞ்சகன், தாண்டகன், தாரகன் என மூன்று அரக்கர்களின் அட்டூழியங்களை மக்களாலும் முனிவர் பெருமக்களாலும் தாங்கமுடியவில்லை.
இந்த வேளையில், அந்தப் பகுதியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அரக்கர்களின் கொடுஞ்செயல்கள் இன்னும் அதிகரித்தன. அமிர்த தீர்த்தக்கரையில் இருந்த பராசர முனிவரையும் துன்புறுத்தினார்கள். மக்களும் ஓடிவந்து முனிவரிடம் முறையிட்டார்கள். ‘எங்களைக் காப்பாற்றுங்கள்’ என கதறினார்கள்.
அனைவரின் நலனுக்காகவும் அரக்கர்களை அழிக்கவேண்டியும் பராசர முனிவர், மகாவிஷ்ணுவைப் பிரார்த்தித்தார். அங்கே, பிரத்யட்சமானார் திருமால். அசுரர்களை அழிக்க முனைந்தார். தஞ்சகாசுரன் கடும் போரிட்டான். யானையாக உருமாறினான். நான்கு திருக்கரங்களுடன் மகாவிஷ்ணுவாக வந்த திருமால், நரசிம்மமாக உருமாறி இரணியனை வதைத்து அழித்தது போல், தஞ்சகாசுரனை அழித்தொழித்தார் பெருமாள்.
உயிர் பிரியும் தருணத்தில் திருந்திய தஞ்சகாசுரன், ‘மன்னியுங்கள். தவறுணர்ந்தேன். இந்தப் பகுதி என் பெயரிலேயே அழைக்கும்படி வரம் தாருங்கள். மேலும் இந்த இடத்தில், மகாவிஷ்ணுவான தாங்கள் நரசிம்மராக இங்கேயே இருந்து அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்து வேண்டினான்.
அவனுடைய வேண்டுதலை ஏற்றார் மகாவிஷ்ணு. அதனால்தான் இந்த ஊர், தஞ்சாவூர் என்றானது என்கிறது ஸ்தல புராணம்.
கோபுரமில்லாமல், மொட்டை கோபுரமாகக் காட்சியளிக்கிறது ஆலயம். சுவாமியின் திருநாமம் - வீரநரசிங்கப் பெருமாள். வீற்றிருந்த கோலத்தில் இருந்தபடி, தன்னை நினைப்போரையும் வந்து தரிசிப்போரையும் அருளி வருகிறார்.
நாமக்கல் தலத்தில் உள்ள நரசிங்கரைப் போல, புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது சிறப்பு. மார்க்கண்டேயருக்கு காட்சி தந்த கோலத்தில் அற்புதமான தரிசனமாகத் திகழ்கிறது.
நரசிம்மரின் விமானம் வேத சுந்தர விமானம் என்றும் கோயிலின் தீர்த்தம் சூரிய புஷ்கரணி என்றும் போற்றப்படுகிறது. வெண்ணாறு சோழ தேசத்து திவ்ய தேசங்களில், இது மூன்றாவது தலம் என்கிறது ஸ்தல புராணம்.
திருமங்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் இங்கே வந்து மங்களாசாசனம் செய்திருப்பதை விவரிக்கிறது ஸ்தல புராணம். புதன் மற்றும் சனிக்கிழமைகளில், வெண்ணாற்றங்கரை வீரநரசிங்கப் பெருமாளை தஞ்சையின் பல பகுதிகளில் இருந்தும் வந்து தரிசித்துச் செல்கின்றனர் பக்தர்கள்.
அடுத்த தலம்... நீலமேகப் பெருமாள் திருக்கோயில்.
வெண்ணாற்றங்கரையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது இந்த ஆலயம். திருமங்கையாழ்வார் திருமாலை ‘கருமுகில்’ என்று பாடிக்கிறங்கினாரே... அதை நினைவூட்டும் விதமாக பெருமாளின் திருநாமம் நீலமேகப் பெருமாள் என்று போற்றப்படுகிறது.
வெண்ணாற்றங்கரை வீர நரசிங்கப் பெருமாள் கோயில் போலவே இந்தக் கோயிலும் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ள ஆலயம். மூன்று நிலை கோபுரம் கொண்ட அழகிய தலம்.
இங்கே, தாயாரின் திருநாமம் - செங்கமலவல்லித் தாயார். தீர்த்தம் அமிர்த தீர்த்தம் எனப்படுகிறது.
பராசர முனிவருக்கு பெருமாள் காட்சி கொடுத்தார் அல்லவா. அதே திருக்கோலத்தில், வீற்றிருந்த கோலமாகத் திகழ்கிறார் பெருமாள். நமக்கு என்ன பிரச்சினையோ சிக்கலோ வந்தாலும் அவற்றை நீலமேகப் பெருமாளிடம் முறையிட்டுப் பிரார்த்தித்தால் போதும்... விரைவில் சிக்கல்களையும் கவலைகளையும் தீர்த்துவைப்பார் பெருமாள் என்கின்றனர் பக்தர்கள்.
மூன்றாவது திருத்தலம்... மணிக்குன்ற பெருமாள் திருக்கோயில்.
கோயிலின் விமானம் மணிக்கூடம். கிழக்கு நோக்கிய நிலையில் காட்சி தருகிறார் மணிக்குன்ற பெருமாள். இந்த பெருமாளும் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
வீர நரசிங்கப் பெருமாள் கோயிலுக்கு அருகில் கிழக்குப் பார்த்த கோயிலாக அமைந்துள்ளது இந்த திருத்தலம். அற்புதத் திருமேனியராக, தனி அழகுடன் ஜொலிக்கிறார் பெருமாள். கோயிலின் தீர்த்தம் ராம தீர்த்தம்.
தாயாரின் திருநாமம் - அம்புஜவல்லித் தாயார். தாயாரும் கிழக்கு நோக்கியே தரிசனம் தருகிறார்.
கரந்தைக்கு அருகில் வெண்ணாற்றங்கரைப் பகுதியில், வீர நரசிங்கப்பெருமாள் கோயில், நீலமேகப் பெருமாள் கோயில், மணிக்குன்றப் பெருமாள் கோயில் என மூன்று கோயில்களும் அருகருகில், அடுத்தடுத்து அமைந்துள்ளன. மிகச்சிறிய ஆலயங்கள்தான் என்றாலும் கீர்த்திமிக்க தலங்கள் என்கிறார்கள் பக்தர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT