Published : 07 Jul 2020 10:01 AM
Last Updated : 07 Jul 2020 10:01 AM
எல்லாநாளும் வழிபாட்டுக்கு உரிய நாள்தான். எந்த சமயத்திலும் இறைசக்தியை பிரார்த்தனை செய்வது விசேஷம்தான். அதேசமயம், ஒவ்வொரு சக்திக்கும் உரிய நாளாக, கிழமைகளையும் நேரங்களையும் சொல்லிவைத்திருக்கிறது சாஸ்திரம்.
அதன்படி செவ்வாய்க்கிழமைகளில், அம்பிகையை, மகாசக்தியை மனதார வழிபடச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள். செவ்வாய்க்கிழமையில் அம்பிகையைத் துதிப்பதும் தேவியின் திருநாமங்களைச் சொல்லி வழிபடுவதும் மிகுந்த விசேஷத்துக்கு உரியது என்றும் கூடுதல் பலன்களைத் தரக்கூடியது என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
செவ்வாய்க்கிழமை அம்பாளுக்கு உரிய நாள். சக்திக்கு உரிய தினம். அதிலும் குறிப்பாக, சக்திகளில் ஒருவரான துர்காதேவியை வழிபடுவது இன்னும் மகத்துவம் வாய்ந்தது.
துர்காதேவியை எப்போதும் வணங்கலாம், வழிபடலாம் என்றாலும் ராகுகாலத்தில் வழிபடுவது சகல தோஷங்களையும் விலக்கி அருளும் என்பது ஐதீகம். துஷ்ட சக்திகள் அனைத்தும் விலகிவிடும் என்பது நம்பிக்கை.
செவ்வாய்க்கிழமையில் ராகுகாலம் என்பது மாலை 3 முதல் 4.30 மணி வரை. இந்த நேரத்தில் வீட்டில் துர்காதேவியை நினைத்து விளக்கேற்றுங்கள். அகல் விளக்கு ஏற்றலாம். காமாட்சி விளக்கு ஏற்றலாம். எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவது இன்னும் சிறப்புக்கு உரியது என்கிறார் மனோகர குருக்கள்.
செவ்வாய்க்கிழமையில், ராகுகாலத்தில் பூஜையறையில் விளக்கேற்றுங்கள். துர்கையின் இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். 11 முறை சொல்லி வழிபடுங்கள்.ஒவ்வொரு முறை சொல்லிமுடிக்கும் போதும், அம்மன் படத்துக்கு செந்நிற மலர்களால் அல்லது குங்குமத்தால் அர்ச்சனை செய்யுங்கள்.
துர்கா துர்காதி சமனீ துர்காபத் விநிவாரிணீ
துர்கமச்சேதினீ துர்கஸாதனீ துர்கநாசினீ
துர்கதோத்தாரிணீ துர்க நிஹந்தரீ துர்கமாபஹா
துர்கமக்ஞானதா துர்கதை த்யலோக தவானலா
துர்கமா துர்கமாலோகா துர்கமாத்மஸ்வரூபீனி
துர்கமார்க ப்ரதா துர்கமவித்யா துர்கமாச்ரிதா
துர்கமக்ஞான ஸம்ஸ்தானா துர்கமத்யான பாஸினீ
துர்கமோஹா துர்கமகா துர்கமார்த ஸ்வரூபீனி
துர்கமாஸுர ஸம்ஹந்த்ரீ துர்கமாயுத தாரிணீ
துர்கமாங்கீ துர்கமதா துர்கமேஸ்வரீ
துர்கபீமா துர்கபாமா துர்கபா துர்கதாரிணீ
நாமவலிமிமாம் யஸ்து துர்காயா மம மானவ:
படேத் ஸர்வபயான்முக்தோ பவிஷ்யதி ந ஸம்சய;
வலிமை மிகுந்த இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, துர்கையை வணங்குவோம். எதிர்ப்புகளையும் தடைகளையும் தகர்த்தருள்வாள் தேவி. தீயசக்திகளை அண்டவிடாமல் காப்பாள். குடும்பத்தில் ஒற்றுமையையும் மன உறுதியையும் ஏற்படுத்துவாள். துன்பங்களையெல்லாம் போக்கி, முன்னேறச் செய்வாள் துர்காதேவி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT