Published : 02 Jul 2020 09:44 AM
Last Updated : 02 Jul 2020 09:44 AM
கேட்பவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் கொடுப்பவர்தான் ஷீர்டி பாபா. இப்படித்தான் என்றில்லாமல், அப்படித்தான் என்று வரையறைக்குள் இல்லாமல் எத்தனையோ அற்புதங்களையும் அதிசயங்களையும் பண்ணக்கூடியவர்தான் பாபா.
இந்த கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் என்று உருகிக் கொண்டாடுகிறார்கள் பக்தர்கள். நெகிழ்ந்து பரவசமாகிறார்கள் சாயி குடும்பத்தார். தத்தளிக்கும் வாழ்க்கைப் படகிற்கு துடுப்பென வந்து, நம்மைக் கரை சேர்ப்பார் பாபா என்று கண்ணீருடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.
ஆனால் ஒருவிஷயத்தை மட்டும் பாபா ஒருபோதும் செய்வதில்லை.
ஆமாம்... தகுதி இல்லாதவர்களை எந்தச் சமயத்திலும் ஆதரிப்பதில்லை பாபா. அருள் வழங்குவதில்லை பாபா.
உண்மையாய் இல்லாவிட்டால் பாபா ஒதுக்கிவிடுவார். நேர்மையாக இல்லாதவரை பாபா தன் குடும்பத்தில் சேர்த்துக்கொள்வதே இல்லை. சக மனிதர்களிடம் அன்பும் அக்கறையும் இல்லாதவருக்கு பாபா தன் அருள்பார்வையை வழங்குவதே இல்லை.
உண்மையாகவும் நேர்மையாகவும் எவருக்கும் தீங்கு செய்யாமலும் எப்போதும் எல்லோரையும் நேசிப்பவர்களை பாபா ஒருபோதும் கைவிடமாட்டார். அவர்களை தாமே தேடிச் சென்று அருள்மழையைப் பொழிவார். அவர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் காபந்து செய்து காத்தருள்வார்.
ஷீர்டியில், பாபாவைப் பார்க்க பல குணங்கள் கொண்ட மனிதர்கள் வந்திருந்தார்கள். ஒவ்வொருவரும் தங்களின் மனதில் இருந்த ஒவ்வொரு பிரச்சினைகளையும் ஏக்கங்களையும் தேவைகளையும் சுமந்தபடி வந்திருந்தார்கள்.
பாபா, யாரை எப்படி, எப்போது எந்தவிதமாக நடத்துவார் என்பது பாபா மட்டுமே அறிந்த ஒன்று. சிலரைக் கண்டுகொள்ளவே மாட்டார். சிலரை கண்டதும் கூப்பிட்டு, அவர்களை பக்கத்தில் அமரவைத்து பேசிக்கொண்டே இருப்பார். பார்த்தவர்களும் பார்க்கப்பட்டவர்களும் பாபாவை ஒவ்வொருவிதமாக புரிந்து உணர்ந்தார்கள். ‘நம்மைப் பார்க்கவே இல்லையே பாபா’ என்று அழுதுகொண்டே திரும்பிச் சென்றவர்களும் உண்டு.
எத்தனையோ பணக்காரர்களையும் பணம் ஒன்றே பிரதானம் என்கிற கர்வத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தவர்களையும் பாபா திரும்பிக் கூடப் பார்க்காமல் புறக்கணித்தார் என்கிறது சாயி சரிதம்.
மனதில் தூய்மை இருந்தால்தான் பகவான் ஏற்றுக் கொள்வார் என்கிறது சைவமும் வைணவமும். சிவனார் இப்படி எத்தனையோ பேரை ஆட்கொண்டதையும் திருமால் இப்படியான நல்லுள்ளம் கொண்ட மனிதர்களை, தன் திருப்பாதத்தில் இடம் கொடுத்து அருள்பாலித்ததையும் விவரிக்கிறது புராணம்.
ஷீர்டி பாபாவும் இப்படித்தான்.
பாபா...தட்டுதட்டாக பழங்களும் பணமுமாக வருவோரைப் புறக்கணித்துவிடுவார். அவர்களின் குணத்தை அறிந்து பார்க்காமலே இருந்துவிடுவார். அதேசமயம், ஒரேயொரு வாழைப்பழத்துடன் பாபாவின் அருளுக்குக் காத்திருக்கும் தூயமையான உள்ளம் கொண்டவர்களை, ‘வா வா...’ என்று பக்கத்தில் அரவணைத்து, அவர் தலையை, முதுகை தடவிக் கொடுத்து ஆசீர்வதிப்பார்.
குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில், ஒரு வாழைப்பழத்தை வைத்து, பாபாவை வணங்குங்கள். ‘சாயிநாமம்’ சொல்லிக்கொண்டிருங்கள். வீட்டில் தீபமேற்றி, 108 முறை ‘சாயிராம்’ சொல்லுங்கள். வாழைப்பழத்தை நைவேத்தியம் செய்து, பாபாவை பிரார்த்தனை செய்யுங்கள்.
நேர்மையும் உண்மையும் ஆழ்ந்த பக்தியும் கொண்டிருந்தால், உங்களை பாபா பார்ப்பார். உங்கள் குடும்பத்தாரை கூர்ந்து கவனிப்பார். பிறகு பாபாவின் அருள் கிடைத்த குடும்பத்தில், உங்கள் குடும்பமும் இணைந்துவிடும்.
முடிந்தால், முடிந்த அளவுக்கு குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் வாழைப்பழம் வாங்கிக் கொடுங்கள். பாபாவின் அருளைப் பெறுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT