Last Updated : 28 Jun, 2020 04:54 PM

 

Published : 28 Jun 2020 04:54 PM
Last Updated : 28 Jun 2020 04:54 PM

வாழவைக்கும் குலதெய்வப் பிரார்த்தனை! 

குலதெய்வத்தை வழிபடுவதில் தடங்கல் எதுவும் இருக்கக் கூடாது என்று சொல்லிவைத்திருக்கிறார்கள் முன்னோர்கள். இஷ்ட தெய்வத்துக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தை விட குலதெய்வத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று ஞானிகளும் அறிஞர்களும் விவரித்திருக்கிறார்கள்.
குலதெய்வம் என்பது நம் முன்னோர்கள் என்றும் முன்னோர்களில் ஒருவரே தெய்வமாகியிருக்கிறார்கள் என்றும் நம்பிக்கை உண்டு. எனவே, அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தைச் சேர்ந்தவர்களை கண்ணும்கருத்துமாக பேணிக் காப்பார்கள் என்பது ஐதீகம். எனவேதான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. வணங்கப்படுகின்றன.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியம் என்று காஞ்சி மகான் அருளியிருக்கிறார்.
ஒருவருக்கு குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற எந்தக் கோயிலுக்குச் சென்று எத்தனை முறை வழிபட்டாலும் எந்த தெய்வங்களின் அருளும் கிடைக்காது. குலதெய்வ வழிபாடு எனும் பாஸ்போர்ட் இருந்தால்தான் பரிகாரக் கோயில்களின் தெய்வங்களின் விசா எனும் பலன்கள் கிடைக்கும் என்று உபந்யாசர்களும் எளிதாகப் புரியும்படி சொல்லிவைத்திருக்கிறார்கள்.
குலதெய்வத்தின் அனுமதியோ அனுகிரகமோ இல்லை என்றால், ஒருவர் என்ன சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் என்று செய்தாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்! அதனால்தான் ஹோமம் முதலான பூஜையில் ஈடுபடும் போது, குலதெய்வப் பிரார்த்தனையையும் முன் வைத்து அதன் பின்னரே ஹோமத்தில் ஈடுபடுவார்கள் ஆச்சார்யர்கள்.
குலதெய்வம் என்பது, நம் குடும்பத்தில் இரண்டறக் கலந்திருக்கும் தெய்வம். ஒருவரின் லெளகீக வாழ்க்கைக்குத் தேவையான பலன்களை அளிக்கிறது என்றும் குடும்பத்தில் பிரிவோ குழப்பமோ மன வேறுபாடோ இருந்தால் குலதெய்வத்திடம் முறையிட்டால் விரைவில் தீர்வு கிடைக்கும்.
குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துவருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. கிரக தோஷங்களோ பாபங்களோ அவர்களை அண்டாது. குலதெய்வம் அவர்களைக் காத்தருளும். எனவே குலதெய்வத்தை முறையே கடைபிடிக்க வேண்டும் என்கின்றனர்.
இறந்துவிட்ட முன்னோர்களை வணங்காமல் இருப்பது பித்ரு தோஷம். அதேபோல குலதெய்வத்தை வணங்காமல் இருப்பது தோஷத்தைக் கொடுக்கும். குடும்ப வளர்ச்சியைத் தடுக்கும். முன்னோரையும் குலதெய்வத்தையும் முறையே வணங்கி வழிபடவேண்டியது மிகவும் அவசியம்.
வீட்டில் யாரேனும் நோய்வாய்ப்பட்டிருந்தால், குலதெய்வத்தை வணங்கி வந்தால் போதும்... தீராத நோயும் தீரும். திருமணத் தடைகள் அகலும். வம்சம் விருத்தியாகும்.
‘நாள் செய்ததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்’ என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
குலதெய்வத்தை ஒருபோதும் வணங்காமல் இருக்காதீர்கள். முக்கியமான தருணங்களில், வீட்டில் இருந்தபடியே குலதெய்வத்தை வழிபடுங்கள். செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பெளர்ணமி முதலான நாட்களில், வீட்டில் விளக்கேற்றி, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்யுங்கள். பெண் தெய்வமாக இருந்தால், புடவை, ஜாக்கெட் துணி வைத்து, வேண்டிக்கொள்ளுங்கள். ஆண் தெய்வம் குலதெய்வமாக இருந்தால், வேஷ்டி துண்டு வைத்து வழிபடுங்கள். பிறகு, அந்த வஸ்திரத்தை இயலாதவருக்கு வழங்குங்கள்.
உங்கள் குலத்தை குலதெய்வம் காத்தருளும். வம்சத்தை வாழையடிவாழையென வாழச் செய்யும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x