Last Updated : 26 Jun, 2020 03:09 PM

 

Published : 26 Jun 2020 03:09 PM
Last Updated : 26 Jun 2020 03:09 PM

திருச்செந்தூர்; காயத்ரி மந்திரம்; தீர்த்த பலன்கள்! 

எந்தத் தலத்துக்கும் இல்லாத சிறப்பாக அமைந்திருக்கிறது திருச்செந்தூர் திருத்தலம். சூரனை சம்ஹாரம் செய்த திருத்தலம் என்கிறது புராணம். அதனால்தான் கந்த சஷ்டித் திருநாள் இங்கே வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
தவிர, முருகப்பெருமான் கடலோரத்தில் குடிகொண்டிருக்கும் தலம் எனும் மகத்துவமும் திருச்செந்தூருக்கு உண்டு. ஞானகுருவாகத் திகழும் முருகனை வந்து வணங்கினாலோ மனதால் இருந்த இடத்திலிருந்தே நினைத்தாலோ... நம் வேதனைகளையெல்லாம் போக்கிடுவான். எதிர்ப்புகளையெல்லாம் களைந்திடுவான் என்கிறது புராணம்.
திருச்செந்தூர் திருத்தலத்தின் இன்னொரு மகிமையாக இங்கே உள்ள தீர்த்தங்களைச் சொல்கிறார்கள் முருக பக்தர்கள்.
மந்திரங்களில் காயத்ரி மந்திரத்துக்கு இணையாக வேறு மந்திரங்களில்ல்லை என்கிறது சாஸ்திரம். இங்கே, காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துகளும் தீர்த்தமாக அமைந்துள்ளது ஸ்தல புராணம்.
திருச்செந்தூரில், நாழிக்கிணறு தீர்த்தம் உள்ளது. இதை கந்த புஷ்கரணி என்றும் சொல்லுவார்கள். இந்த நாழிக்கிணறில் மட்டுமே பக்தர்கள் நீராடி, முருகக் கடவுளை வணங்கி வழிபடுவது வழக்கம். இங்கே பல தீர்த்தங்கள் உண்டு என்றும் அவை கால ஓட்டத்தில் கடல் மணலில் மூடிக்கொண்டன என்றும் தீர்த்தங்களைக் குறிக்கும் கல்வெட்டுகளும் இப்போது இல்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இங்கே உள்ள தீர்த்தங்கள் குறித்தும் அந்தத் தீர்த்தத்தில் நீராடினால் கிடைக்கும் பலன்கள் குறித்தும் ஆலய பட்டர்களும் ஓதுவார்களும் விவரித்துள்ளனர்.


நாழிக்கிணறு தீர்த்தம் : இதில் நீராடிவிட்டு, செந்திலாண்டவரை வணங்கித் தொழுதால், வாழ்வில் இழந்ததையெல்லாம் பெறலாம். நினைத்ததெல்லாம் நடக்கும்.
முகாரம்ப தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் நீராடினால், கடவுளின் அனுக்கிரகம் பரிபூரணமாகக் கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் உள்ள பிரச்சினைகள் தீரும். தொழில் சிறக்கும். உத்தியோகம் நிலைக்கும்.

தெய்வானை தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் நீராடிவிட்டு, வெற்றிவேலனை வேண்டிக்கொண்டால், ஆடை அணிகலன் சேரும். தனம் தானியம் பெருகும். கருத்துவேற்றுமை கொண்ட தம்பதி மனம் ஒருமித்து மனம் திருந்தி வாழ்வார்கள். .

வள்ளி தீர்த்தம்: வள்ளி சுனை என்பார்கள். இந்தத் தீர்த்தத்தில் நீராடிவிட்டு, வள்ளி மணாளனை வணங்கித் தொழுதால், கல்யாண வரம் கிடைக்கப் பெறலாம். நல்ல வாழ்க்கைத் துணை அமைவார்கள்.


லட்சுமி தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் நீராடிவிட்டு, முத்துக்குமரனை வணங்கி வழிபட்டால், சகல ஐஸ்வர்யங்களுடன் வாழலாம். குபேர சம்பத்துகள் கிடைக்கப் பெறலாம்.

சித்தர் தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் நீராடி, முருகப் பெருமானை வழிபட்டால், ஞானம் கிடைக்கப் பெறலாம். ஞானமும் யோகமும் கிடைத்து வாழலாம். எதிரிகளோ எதிர்ப்போ இல்லாத நிலை அமையும்.

பாவநாச தீர்த்தம்: இதில் நீராடினால், சாபங்கள் அனைத்தும் விலகும். பித்ருக்களின் ஆசி கிட்டும்.

கந்தபுஷ்கரணி தீர்த்தம்: இதில் நீராடினால், இந்த இப்பிறவி முழுவதும் காத்தருள்வான் வடிவேலன்.

கங்கா தீர்த்தம்: இதில் நீராடி, முருகப் பெருமானை வணங்கினால், மோட்ச கதி அடையலாம். பாவம் தொலையும். முன்னோர் சாபமும் நீங்கும்.

திக் பாலகர் தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் நீராடினால், கங்கை, யமுனை, காவிரி முதலான தீர்த்தங்களில் நீராடிய பலனும் புண்ணியமும் கிடைக்கும்.

ஐராவத தீர்த்தம்: இல்லத்தில் தனம் பெருகும். சந்ததிகளைத் தாண்டியும் அந்தச் சொத்துகள் வாழும்.

வயிரவ தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் நீராடினால், புண்ணிய நதிகளில் நீராடிய பலனைப் பெறலாம். பாவங்கள் அனைத்தும் தொலையும்.

துர்கை தீர்த்தம்: சகல துன்பங்களும் நீங்கி நன்மைகிட்டும். தீயசக்திகள் அண்டாமல் இருக்கும்.

ஞானதீர்த்தம்: இதில் நீராடினால் ஞானகுரு முருகப் பெருமானை வேண்டிக்கொண்டால், முக்தி நிச்சயம்.

சத்திய தீர்த்தம்: களவு, மது, குருவை நிந்தித்தது, அகங்காரம், காமம், பகை, முன் ஜென்மப் பாவம் என அனைத்துப் பாவங்களும் நீங்கும்.

தரும தீர்த்தம்: இதில் நீராடினால், நல்ல சத்தான குழந்தைகள் பிறப்பார்கள். சந்ததி வாழையடி வாழையென செழிக்கும்.

முனிவர் தீர்த்தம்: இதில் நீராடினால், ஞானிகளும் சித்தர் பெருமக்களும் ஆசியை வழங்குவார்கள். .

தேவர் தீர்த்தம்: காமம், குரோதம், லோபம் முதலான சகல குற்றங்கள் செய்ததால் உண்டான பாவங்கள் நீங்கப் பெறலாம்.

சேது தீர்த்தம்: சகல பாதகத்தினின்றும் நீக்கி நன்மையைக் கொடுத்தருள வல்லது.


காயத்ரி தீர்த்தம்: வேள்விகளும் யாகங்களும் செய்தால் உண்டாகும் பலன்கள் கிடைக்கும்.


சாவித்திரி தீர்த்தம்: மும்முர்த்திகளின் அருளும் முப்பத்து முக்கோடி ஆசியும் கிடைக்கப் பெறலாம்.

சரஸ்வதி தீர்த்தம்: சகல ஆகம கலைகளையும் அறியும் வல்லமையைப் பெறலாம்.


கந்தமாதன தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் நீராடினால், அடுத்தவர் பொருளை அபகரித்த பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தை அடையலாம்.

மாத்ரு தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் நீராடினால், முருகப்பெருமானின் அருளையும் அம்மையப்பனின் அருளையும் ஒருங்கே பெறலாம். சகல ஐஸ்வரியங்களும் பெற்று இனிதே வாழலாம்.

தென்புலத்தார் தீர்த்தம்: இதில் நீராடினால், பித்ரு சாபம் நீங்கும். முன்னோர்கள் செய்த சாபமும் பாவமும் நீங்கும்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x