Published : 25 Jun 2020 05:34 PM
Last Updated : 25 Jun 2020 05:34 PM
வாராஹியை மனதார வேண்டிக்கொள்வோம். திக்குத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் வாழ்க்கைக்கு வழியைக் காட்டி அருள்வாள் வாராஹி தேவி.
பராசக்தி, தன்னிலிருந்து வெளிப்படுத்திய தேவதைகள் ஏராளம். அந்தத் தேவதைகள் ஒவ்வொருவரும் பராசக்தியின் பராக்கிரமங்களுக்கு இணையானவர்கள். அகண்டகோடி பிரமாண்டமான உலகத்தையே அசைத்துப் பார்க்கும் வல்லமை கொண்டவர்கள். அசுரக் கூட்டங்களை துவம்சம் செய்பவர்கள்.
சக்தியானவளிடமிருந்து வெளிப்பட்ட சக்திகளில், ஏழு சக்திகள்... ஏழு தேவதைகள் மிக மிக முக்கியமானவர்கள். அந்த ஏழு பேரில்... தன்னிடம் வந்து நிற்பவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் எல்லாமும் தந்து மகிழும் அன்னையெனத் திகழ்பவள்... வாராஹி தேவி.
ஏழு சக்திகளையும் சப்தமாதர்கள் என்கிறது புராணம். சப்தமாதர்களில் வீரியத்துடன் இருப்பவளும் காரியம் யாவிலும் துணை நிற்பவளும் என வாராஹியைச் சொல்கிறார்கள் ஸாக்த வழிபாடு செய்யும் அன்பர்கள்.
ஒவ்வொரு வளர்பிறையில் வரும் பஞ்சமி திதி என்பது வாராஹியை வழிபட உகந்த நாள் என அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள். வாராஹிதேவிக்கு ஆலயங்களில் சந்நிதி பெரும்பாலும் இல்லை. சோழ தேசத்துக்கு உட்பட்ட அல்லது சோழர்களால் கட்டப்பட்ட ஆலயங்களில் சப்தமாதர்களுக்கு சந்நிதிகள் அமைக்கப்பட்டன. அந்த சப்தமாதர்களில், வாராஹியும் காட்சி தருகிறாள்.
பின்னாளில், வாராஹிக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டதெல்லாம் சமீபத்தில் நிகழ்ந்தன. வாராஹி தேவியின் மகத்துவம் அறிந்து, அவளை வழிபடுவோர் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தஞ்சை பெரியகோயிலில், வாராஹிக்கு சந்நிதி ஏதுமில்லை. இப்போது வாராஹியின் சிலையை அங்கே வைத்து வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
சக்தியும் கருணையும் ஒருங்கே கொண்ட வாராஹிதேவியை, வளர்பிறை பஞ்சமியில் வணங்குவோம். வீட்டில் விளக்கேற்றி, மனதில் வாராஹி தேவியை நிறுத்தி, அவளிடம் நம் பிரார்த்தனைகளை முன்வைத்து வழிபடுவோம்.
நோய் நொடியில் இருந்தும் தீய சக்தியிடம் இருந்தும் நம்மைக் காத்தருள்வாள் வாராஹி தேவி. நம் கண்ணுக்கு முன்னே இருந்த பிரச்சினைகளையெல்லாம் பஞ்சுபஞ்சாக்கி பறந்தோடச் செய்வாள் தேவி. எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கி அருள்வாள். காரியம் யாவிலும் துணை நின்று காப்பாள்.
இன்றைய வளர்பிறை பஞ்சமியில், வீட்டில் விளக்கேற்றுவோம். வாராஹியை வேண்டுவோம். ஆரோக்கியமும் ஆயுள் பலமும் தர, ஆத்மார்த்தமாக வேண்டுவோம். அனைத்துக்கும் செவி சாய்த்து அருள்மழை பொழிவாள் அன்னை வாராஹி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT