Last Updated : 25 Jun, 2020 03:42 PM

 

Published : 25 Jun 2020 03:42 PM
Last Updated : 25 Jun 2020 03:42 PM

9 வியாழக்கிழமைகள்; நாலுபேருக்கு உணவுப்பொட்டலம்; குடும்பத்தையே அருளிக்காப்பார் சாயிபாபா! 

பிரச்சினைகளில் இருந்து விடுபட வேண்டும், சிக்கல்களெல்லாம் தீரவேண்டும், கவலைகள் அனைத்தும் காணாமல் போகவேண்டும் என்று யாருக்குத்தான் ஆசையில்லை? இவை அனைத்தையும் நீக்கியருள்வார் சாயிபாபா.
’என்னைத் தேடி வந்துவிட்டீர்களென்றால், உங்கள் துக்கங்களையெல்லாம் நான் பார்த்துக்கொள்வேன். அந்த துக்கங்களெல்லாம் என் பொறுப்பு’ என அருளியுள்ளார் சாயிபாபா. எனவே, முழுமனதுடன் எவரொருவர் சாயிபாபாவை நம்பி, அவரை சரணடைகிறாரோ, அவர்களின் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்துத் தருவார் பாபா. கஷ்டங்களையெல்லாம் போக்கிவிடுவார். துக்கங்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்து அருளுவார் ஷீர்டி சாயிபாபா.
பாபாவை நம்பி, பாபாவைப் பிரார்த்தனை செய்யத் தொடங்கிவிட்டால், வியாழக்கிழமை என்றில்லை. எந்தநாளிலும் பாபாவை வழிபடலாம். குருவாரம் என்று வியாழனைச் சொல்லுவார்கள். ஆனால் எல்லாநாளும் குருவின் நாளே!
பிரார்த்தனையை வியாழக்கிழமை அன்று தொடங்குவது சிறப்பு வாய்ந்ததுதான் என்றாலும் எந்தநாளிலும் வழிபாட்டைத் தொடங்குவதில் தவறேதுமில்லை என்கிறார்கள் சாயி பக்தர்கள்.
வீட்டில் பாபாவின் படம் அல்லது சிலையை நன்றாகச் சுத்தமாக்கிக் கொள்ளுங்கள். படத்துக்கு சந்தனம் குங்குமமிடுங்கள். பாபாவுக்கு பழங்களை நைவேத்தியமாக படைக்கலாம். ஜாங்கிரி, லட்டு முதலான இனிப்புகளை வழங்கலாம். குருவுக்கு உகந்தது மஞ்சள் நிறம் என்பதால், லட்டு முதலான மஞ்சள் நிற இனிப்புகளை வைப்பது இன்னும் சிறப்பு.
இதேபோல், பாபாவுக்கு மிகப்பிடித்த இன்னொரு இனிப்பு... கற்கண்டு. இனிப்பைக் கொண்டு பாபாவுக்குப் படையலிட்டு, நம் பிரார்த்தனையை வைக்கவேண்டும். பூஜித்து முடித்ததும் பழங்களையும் இனிப்புகளையும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் அக்கம்பக்கத்தாருக்கும் வழங்கவேண்டும்.
படாடோபத்தை பாபா ஒருபோதும் விரும்புவதில்லை. மிக எளிமையான வழிபாட்டையே விரும்புகிறார் பாபா. பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நம்மால் என்ன முடியுமோ அதை நைவேத்தியம் வைத்து பிரசாதத்தை பிறருக்கு விநியோகிக்கலாம். அந்த அன்பையும் பக்தியையும் மட்டுமே பார்த்து, நம் துயரங்களைப் போக்க ஓடிவருகிறார் பாபா.
இன்னொரு விஷயம்...
பாபாவை விரதம் இருந்து வழிபடுவது மகத்துவம் வாய்ந்ததுதான். அதேசமயம், பக்தர்களோ... மக்களோ... பசியுடன் இருப்பதை ஷீர்டி நாயகன் விரும்பமாட்டார். வழக்கம் போல் உணவு எடுத்துக் கொள்ளலாம். விரதம் மேற்கொள்ளலாம்.
காலையும் மாலையும் பாபாவை பூஜித்து நைவேத்தியம் செய்து வணங்கவேண்டும். அந்த நைவேத்திய உணவை, பழங்களை, இனிப்புகளை நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு வழங்கவேண்டும். தொடர்ந்து ஒன்பது வியாழக்கிழமைகள், பாபாவை ஒரு விரதம் போல், காலையும் மாலையும் தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால், நீங்கள் நினைத்த காரியத்தை நடத்தித் தருவார் சாயிபாபா.
பூஜை இருக்கும் நாளில், நான்கு பேருக்கேனும் உணவுப்பொட்டலம் வழங்கவேண்டும். பாபாவை நினைத்து, ‘சாயிராம்’ சொல்லி, அன்னதானம் செய்தால், அங்கே நமக்கு ஏதேனும் ஒரு ரூபத்தில் சுட்சுமமாக வந்து அருளுகிறார் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.
வியாழக்கிழமை என்றில்லாமல், பாபாவை நினைத்து, எந்தநாளில் வேண்டுமானாலும் அன்னதானம் செய்யுங்கள். நான்குபேருக்கேனும் தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள். அப்போதெல்லாம் ஏதோவொரு ரூபத்தில் சூட்சுமமாக வந்து உங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து அருளுவார். வேண்டுவதையெல்லாம் தந்தருள்வார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x